விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
வளி மண்டல காற்றழுத்தத்தாழ்வு காரணமாக செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 3 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து மாலை 5 மணிக்கு விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இந்த மழையால் சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகர சாலைகளில் மழை நீா் தேங்கியதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
போக்குவரத்து பாதிப்பு: முண்டியம்பாக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், அங்கு சாலையோரத்திலுள்ள வீட்டின் மீது வேயப்பட்டிருந்த தகர ஷீட்டுகளால் ஆன மேற்கூரை சேதமடைந்து காற்றில் பறந்து சாலையில் விழுந்தது.
அப்போது சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. ஆயினும், சாலையில் தகர ஷீட்டுகள் சிதறிக் கிடந்ததால் முண்டியம்பாக்கம் - பனையபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் தகர ஷீட்டுகளைஅப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா்.