தமிழகத் தேர்தல் களம் 2016

ஜாதி வாக்கு வங்கி: வைகோவின் தேர்தல் புறக்கணிப்பு சமூக ஆர்வலர்களுக்கு வருத்தத்தைத் தான் தரும்

வைகோவின் முடிவு மக்கள் நலக்கூட்டணியின் நோக்கத்திற்கு எதிராக விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது

சி.சரவணன்

வைகோவின் முடிவு மக்கள் நலக்கூட்டணியின் நோக்கத்திற்கு எதிராக விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது

ஜாதி, மத மோதல்களைப் பொருத்த வரை பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் ஓர் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்றும் அதற்குத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம் என்றும் திராவிட இயக்கத்தினர் பெருமையாகச் சொல்லி வருகின்றனர்.

மத, ஜாதி மோதல்கள் தமிழகத்தில் குறைவு என்பதை ஏற்றுக் கொண்டாலும் கூட அதற்குத் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தான் காரணம் என்று சொன்னால் அதைத் தான் இப்போது நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

நாங்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்வார்கள், தமிழை உயிராக நேசிப்பவர்கள் என்று சொல்வார்கள், சுயமரியாதை சீர்திருத்தத் திருமணங்களை ஆதரிப்பவர்கள் என்று சொல்வார்கள், பகுத்தறிவாளர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் திருமண அழைப்பிதழ்கள்,  நீத்தார் படத்திறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் தான் உண்மையான முகம் தெரிய வரும்.

அவரவர் தாத்தாக்களின் பெயர்களின் பக்கத்திலும் தந்தையாரின் பெயர்களின் பக்கத்திலும் உட்ஜாதிப் பெயர்களை அச்சிட்டு இருப்பார்கள்.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர், தமிழை உயிராக மதிக்கிறேன் என்று சொல்லக் கூடியவர். அவரின் மகளின் திருமண அழைப்பிதழை எனக்கு வழங்கினார். அந்த அழைப்பிதழில் பேரறிஞர் அண்ணாவின் படம் அச்சிடப்பட்டு இருந்தது.  திராவிட இயக்கச் சிந்தனையாளர், முன்னாள் முதலமைச்சர் என்பதனால் அவரின் படம் அச்சிடப்பட்டுள்ளது எனக் கருதினேன். அவரின் பக்கத்தில் பாவேந்தர் பாரதிதாசன் படம் அச்சிடப்பட்டிருந்தது.  பாவேந்தர் அவர்களும் பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், தமிழ்ப்பற்றாளர் எனவே அவரின் படம் அச்சிடப்பட்டு உள்ளது எனக் கருதினேன். பக்கத்தில் கிருபானந்த வாரியார் படம் அச்சிடப்பட்டு இருந்தது. அப்போது தான் எனக்குச் சந்தேகம் வந்தது. அண்ணாவிற்கும் பாவேந்தருக்கும் வாரியாருக்கும் என்ன தொடர்பு?

கடவுள் மறுப்பாளர்கள் பக்கத்தில் கடவுள் நம்பிக்கையாளர் படம் ஏன் அச்சிடப்பட்டு உள்ளது? என் குழப்பத்தை அவரிடமே கேட்டேன். அவர் சொன்னார் உட்ஜாதி அடிப்படையில் அவர்கள் எல்லோரும் இவரின் ஜாதியாம்.

ஜாதிப் பெயர்களை ஒழிக்க வேண்டும் என்று போராடிய அண்ணா, நாடுகளுக்கு இடையேயான எல்லைகளையே உடைத்து ஓருலகம் வேண்டும் என்று பாட்டெழுதிய பாவேந்தர், ஆன்மீகக் கருத்துக்களால் பக்தியாளர்களால் இதயத்தில் வைத்துப் போற்றப்படும் வாரியார் ஆகிய மூவரையும் ஜாதி அடையாளத்திற்குள் கட்டிப்போட்டு வைத்த பெருமையை இந்தத் திராவிட இயக்கங்கள் சரியாகவே செய்து வந்துள்ளன என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிற போதெல்லாம் வாக்கு அரசியலை மையப்படுத்தியே திமுகவும் அதிமுகவும் மௌனம் சாதிக்கும்.  தவறு செய்திருக்கக் கூடிய ஜாதியினரைக் கண்டித்து அறிக்கை விடுகிற துணிச்சல் எப்போதும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இருந்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான  பொதுவான சொல் எது என்ற விவாதம் எழுப்பப்பட்டபோது டாக்டர் அம்பேத்கர் பட்டியல் வகுப்பினர் பட்டியல் பழங்குடியினர் என்ற சொற்களையே ஆதரித்து இருக்கிறார். உட்ஜாதிப் பெயர்களை அடையாளப்படுத்துகிற முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதற்கான உட்பொருள்.

ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை உட்ஜாதிப் பெயர்கள் ஒழிப்பிற்குத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தொடர் முயற்சி என்ன? என்பது வினாக்குறியாகவே உள்ளது.

இந்த உட்ஜாதிப் பெயர்கள் பெருமை என்பதில் தான் திராவிடக் கட்சிகள் தங்களின் ஜாதி வாக்குவங்கியைப் பதிவு செய்துள்ளன. இதன் காரணமாகத் தான் வேட்பாளர்கள் தேர்வில் ஜாதியின் முகம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.

டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பி என்பதைத் தாண்டி அவரை ஜாதித் தலைவராகத் தான் திராவிடக் கட்சிகள் அடையாளம் காட்டியுள்ளன.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவது என்பது மாமனிதர்களின் இயல்பு.  அந்த இயல்பான பணியைத் தான் டாக்டர் அம்பேத்கர் செய்தார். பிற மாநிலங்களில் அம்பேத்கர் தேசியத் தலைவராகப் பார்க்கப்படுகிறார். ஆனால் தமிழகத்தில் அவர் ஜாதித்தலைவராகக் குறுக்கப்பட்டதற்கான காரணம் திராவிடக் கட்சிகள் தான்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் களத்தில் இருந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய பசும்பொன் முத்துராமலிங்கனார் தமது சமுதாயம் குற்றப் பரம்பரையினராக வாழ்ந்து கொண்டிருப்பதை மாற்றியமைப்பதற்காகப் போராடிய தலைவர்.  மாமனிதர்கள் இப்படித் தான் இருப்பார்கள். இவரை இந்திய விடுதலைப் போர் வீரர் என்பதைப் புறந்தள்ளிவிட்டு ஜாதித்தலைவராக அடையாளப்டுத்தியதை ஊக்கப் படுத்தியதும் திராவிடக் கட்சிகள் தான்.

இந்திய விடுதலைப் போரின் தளபதி, தமிழக ஆட்சி வரலாற்றில் தலைசிறந்த பேரரசர்,  கட்சிப் பாகுபாடில்லாமல் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் பெருந்தலைவர் காமராசர். அவரை ஜாதித் தலைவராக மாற்றி அவர் பெயரை முன்னிலைப்படுத்திக் கட்சிகளைத் தொடங்கி கூட்டணி பேரம் பேசுபவர்களை ஊக்கப்படுத்தியதும் திமுகவும் அதிமுகவும் தான்.

உட்ஜாதிப் பெயர்களை அடையாளப்படுத்துகிற நிகழ்ச்சிகளிலோ, அமைப்புகளிலோ தங்களது கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்று திராவிடக் கட்சிகள் அறிவித்தது உண்டா?

திராவிடக் கட்சிகளின் வாக்குவங்கி என்பது உட்ஜாதிப் பெருமை பேசும் அமைப்புகளின் வாக்குகளாகவே ஒன்றிப் பிணைந்துள்ளது.

இப்படியெல்லாம் ஜாதி வாக்குவங்கியை மையப்படுத்தித் திராவிடக் கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியை ஒருங்கிணைத்தார் வைகோ.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்று எனச் சொல்லி 1996ல் மதிமுகவும், 2006ல் தேமுதிகவும் தனித்து நின்று தோல்வியைச் சந்தித்தன. தற்போது இவை இரண்டும் ஒன்று கூடியுள்ளன. இவர்களுடன் இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும், தமாகவும் ஒருங்கிணைந்துள்ள நிலையில் திமுக அதிமுகவிற்கு உண்மையான மாற்று வந்துவிட்டதோ என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

திமுக அதிமுகவிற்கு மாற்றாக 1996 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக, கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது.

அதன் பிறகு 1998, 1999ல் நடந்த மக்களவைத் தேர்தல்களிலும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதிமுகவின் வாக்குவங்கி சரிவைச் சந்திக்கவில்லை. 2001ல் மதிமுக தனித்துச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தபோதும் கோயில்பட்டியில் 27 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது.

வாக்குவங்கியில் மதிமுகவின் வலிமையான தொகுதி என்பதனால் தான் 2016 சட்டமன்றத் தேர்தலில்  போட்டியிட கோவில்பட்டியைத் தேர்ந்தெடுத்தார் வைகோ.

ஜாதி மோதல்களை ஏற்படுத்த திமுக சதி செய்கிறது என்பதை முதன்மைக் காரணமாகச் சொல்லி இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் வைகோ. இவரின் இந்த முடிவு மக்கள் நலக்கூட்டணியின் நோக்கத்திற்கு எதிராக விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் வாக்குவங்கி என்பது ஜாதி அமைப்புகளிடம் பெரும்பான்மையாக உள்ளது என்பதை வைகோ புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார். இந்த நேரத்தில் இவரின் அரசியல் போர் என்பது இந்த ஜாதிவாக்குவங்கியை வீழ்த்தும் முயற்சியாகத் தான் இருக்க வேண்டும்.

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மத ஜாதி மோதல்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளல்ல. தந்தை பெரியார் என்ற போற்றுதலுக்குரிய மனிதர் தான். அந்தத் தலைவரின் தலையாயப் பணி ஜாதி ஒழிப்பே, அந்த ஜாதி ஒழிப்பிற்கான ஆயுதத்திற்கு மாற்றாகவே ஜாதி வாக்குவங்கியைத் திமுகவும் அதிமுகவும் பயன்படுத்தி வருகின்றன.

ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு இவைகளையும் கடந்து ஜாதி வாக்குவங்கி ஒழிப்பு என்பதும் காலத்தின் தேவையாகும். இந்தத் தேவையையும் இந்த மாற்று அணியினர் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் இந்த முதன்மைப் பணியை வைகோ புறக்கணித்தல் என்பது சமூக ஆர்வலர்களுக்கு வருத்தத்தைத் தான் தரும்.   திமுக அதிமுக ஆட்சிகளுக்கு மாற்று என்கிற முழக்கத்திற்கு முழுமையான தீர்வு வைகோ போட்டியிடுவதில் தான் இருக்கிறது.

இந்த உலகம் எப்போதும் முடிவுகளைத் தான் எதிர்பார்க்கும். காரணங்களை அல்ல. முடிவு வெற்றியா தோல்வியா என்பதை விடப் போர்க்களம் தான் முதன்மையானது. இந்தத் தேர்தல் போர்க்களத்தில் ஜாதி வாக்குவங்கியை வீழ்த்துவதற்கான வாய்ப்பு வந்திருப்பதாகக் கருதி வைகோ களத்தைச் சந்திப்பது தான் நேர்மறை அரசியலாக இருக்க முடியும்.

- சி. சரவணன் (9976252800)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT