முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

மத்தியஅரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் அரசு மாநிலத்தில் அமைய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்காக மத்தியஅரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இதனை செயல்படுத்த மத்தியஅரசு மட்டும் போதாது. மாநிலம் வளம் பெற மாநில அரசு ஒத்துழைப்பு வேண்டும். அதற்கான அரசு மாநிலத்தில் அமைய வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்காக மத்தியஅரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இதனை செயல்படுத்த மத்தியஅரசு மட்டும் போதாது. மாநிலம் வளம் பெற மாநில அரசு ஒத்துழைப்பு வேண்டும். அதற்கான அரசு மாநிலத்தில் அமைய வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விவசாய சங்கத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை எழுதிய ஏர்,நீர்,பார் காக்க என்ற வேளாண்நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. காவிரி டெல்டா பாசன விவசாய விளைப் பொருள்கள் உற்பத்தியாளர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமை வகித்து பேசினார்.

அகில இந்திய விவசாய சங்க்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.வி.கிரி, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மு.சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பத்மா பதிப்பகம் யு.எஸ்.எஸ்.ஆர்.நடராஜன் வரவேற்றார். மூத்த வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் நூல் அறிமுகவுரையாற்றினார். நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: ஒரு விவசாயியின் கவலை, விவசாயிகளுக்கு மட்டும்தான் தெரியும், நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். விவசாயிகளின் கவலைகளை முழுமையாக தெரிந்து அனுபவித்தவன் நான். பிரதமர் மோடி தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை முழுமையாக தெரிந்து வைத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி அதன் பலத்தை நிருபித்துள்ளார். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருகிறார். கர்நாடகத்தில் பாஜக முதல்வரான எடியூரப்பாவிடம் மோடி நீரை திறந்து விட வலியுறுத்தினார். பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் முதல் வாசகமாக விவசாயிகளின் வருமானம் இருமடங்காக ஆக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.

பயிர் பாதுகாப்பு திட்டத்தை வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது கொண்டு வந்த திட்டம். தற்போது அந்த திட்டத்தை மேலும் விரிவு படுத்து புதிய பயிர் பாதுகாப்பு திட்டத்தை மோடி அறிவித்துள்ளார். 141 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பாசன வசதி 46 சதவீதம் மட்டுமே என்பதால், நிதிநிலை அறிக்கையில் மேலும் 28.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் நீர்பாசன வசதி கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார். 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாரம்பரிய விவசாயத்தை செயல்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளார்.

5 லட்சம் குளங்களை சீரமைத்து நீர் தேக்கவும், 10 லட்சம் உரக்குழிகளை உருவாக்கவும் திட்டங்களை அறிவித்துள்ளார். விவசாயிகள் கடன் பெற 9 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்த போது நீரை சேமிக்க திட்டமிட்டு 3 லட்சம் தடுப்பணைகளை கட்டினார். தற்போது நீர்பாசன இல்லாத நிலை குஜராத்தில் உள்ளது. ஆனால் நமது தமிழகத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு பிரச்சனை பற்றி கூறினார்.

எந்த காரணத்தினாலும் விவசாயத்தை அழிக்கும் திட்டத்தை மோடி தலைமையிலான மத்தியஅரசு கொண்டு வராது. மீத்தேன் திட்டத்திற்கு நிச்சயமாக ஆதரவு கிடையாது. மற்ற திட்டங்களுக்கு மக்களும், மாநில அரசும் ஆதரவும் தேவை. நான்கு வழிசாலை அமைக்க வேண்டும் என்றால் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும். விவசாயிகள் அதிக பாதிப்பில்லாத புதிய நில ஆர்ஜித திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்,

அத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை. முன்னேற்றத்திற்காக சில இழப்புகளை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இன்று மீண்டும் காந்தி ஒருவர் உருவாகி வருகிறார் என்றால் அவர்தான் பிரதமர் மோடி என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி, பி.கே.தெய்வசிகாமணி, வி.வேங்கடபதி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலாசிரியர் கே.வி.கண்ணன்பிள்ளை ஏற்புரையாற்றினார். மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ச.மணிவணணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.