நெல்லை மாவட்டத்தில் ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 6.50 மணிக்கே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தொடங்கினர். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்து சென்றனர். குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதை காண முடிந்தது.
காலை 9 மணி வரை வெயில் இல்லை. மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பாளையங்கோட்டை தியாகராஜநகர் வாக்குச்சாவடியில் எஸ். முத்துக்கருப்பன் எம்.பி, ஜெயந்திரா மெட்ரிக் பள்ளியில் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் வாக்களித்தனர்.
அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் ஆர். முருகையாபாண்டியன் சொந்த ஊரான தெற்குபாப்பான்குளத்தில் வாக்களித்தார். இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினருடன் கோபாலசமுத்திரம் பிரான்சேரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இது தவிர மாநகராட்சி மேயர் இ. புவனேஷ்வரி, வேட்பாளர்கள் டி.பி.எம். மைதீன்கான் (திமுக), ஏ.எல்.எஸ். லட்சுமணன் (திமுக), எஸ்.கே.ஏ, ஹைதர்அலி (அதிமுக), கட்சிகளின் வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலரும் வைகோ கலிங்கப்பட்டியில் தனது மனைவி, குடும்பத்தினருடன் வாக்களித்தார்.