என் மகன் சென்னையில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
-வாசகர், கடலூர்.
உங்கள் மகனுக்கு மீன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம், பத்தாம் வீட்டிற்கதிபதியான குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவானுடன் (குருச் சந்திர யோகம்) இணைந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை மூன்றாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ஐந்தாம் வீட்டின் மீதும் படிகிறது. நான்கு மற்றும் ஏழாம் வீட்டிற்கதிபதியான புத பகவான், பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றிருக்கும் சூரிய பகவானுடன் (புத ஆதித்ய யோகம்) பெற்று இணைந்திருக்கிறார்.
இரண்டு, ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து, விருச்சிக ராசியில் அமர்ந்திருக்கும் குருபகவானையும் (குருமங்கள யோகம்) சந்திர பகவானையும் (சந்திர மங்கள யோகம்) பார்வை செய்கிறார். மூன்று மற்றும் எட்டாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிர பகவான் எட்டாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.