ஜோதிடம் கை கொடுக்கும்!
எனக்கு ஜோதிடம் தெரியும். இன்னும் திருமணமாகவில்லை. சனி தசையில் கேட்டரிங் தொழிலை நன்றாக கற்றுக் கொண்டு விட்டேன். தற்சமயம் புதன் தசை நடக்கிறது.
எனக்கு ஜோதிடம் தெரியும். இன்னும் திருமணமாகவில்லை. சனி தசையில் கேட்டரிங் தொழிலை நன்றாக கற்றுக் கொண்டு விட்டேன். தற்சமயம் புதன் தசை நடக்கிறது. இதில் வளர்ச்சி எப்படி இருக்கும்? ஜோதிடத்தை தொழிலாக எடுத்துக்கொள்ளலாமா?
வாசகர், பொள்ளாச்சி.
உங்களுக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதியான சந்திர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
Advertisement
பொதுவாக லக்னத்திற்கு காரகத்துவம் வகிப்பவர்கள் சூரிய, செவ்வாய் பகவான்களாவார்கள். ஆத்மாவைக் குறிப்பவர் சூரிய பகவானாவார். இதனால் அவரை ஆத்ம காரகர் என்றழைக்கிறோம். செயல்பாட்டைக் குறிப்பது செவ்வாய் பகவானாவார். லக்னம் என்பது உதயம். அனைத்து ஜாதகர்களுக்கும் லக்னமே பிரதானம். ஒருவரது பர்சனாலிட்டி, தனித்தன்மை அந்தந்த லக்னங்களுக்கேற்ப ஒருவரது குணநலன்கள் அமையும்.
நம் அனைவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரே மாதிரியாக வருவதில்லை. அவரவர்களுக்கு ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரவர்களைப் பக்குவப்படுத்தும் அல்லது பக்குவப்பட வைக்காது. பக்குவம் இன்பமாகவும், பக்குவமின்மை துன்பமாகவும் அமைகிறது. சூழ்நிலைகளின் தொகுப்பு ஒருவருக்கு அளிக்கும் தெளிவு அல்லது தெளிவின்மை வாழ்க்கையைப் பரிணமிக்கச் செய்கிறது. லக்னத்தில் அடங்கியுள்ள தனித்தன்மையாவன: (1) உடலமைப்பைச் சுட்டிக் காட்டும் நிறம், கவர்ச்சித் தன்மை. (2) வெகுமானம், அவமானம். (3) நாகரீகம், நாகரீகமின்மை, நமது முகத்தின் மேல்பாகம், ஆயுள், வாழ்க்கையின் ஆரம்பம். (4) மற்ற பதினொன்று ஸ்தானங்களில் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் மனப்பக்குவம், செயல் இழத்தல் இவைகளை லக்னம் குறிக்கும்.
லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பார்வை படும் இடங்களில் ஏற்படுத்துகிற அதிர்வுகள் லக்னத்தைப் பாதிக்கும். ஜாதகத்தில் ராஜயோகம், தனயோகம் இப்படிப்பட்ட பல யோகங்கள் அமைந்திருந்து, பதிமூன்று... பாவங்களும் வலுப்பெற்றிருந்தாலும் கூட, லக்னம் சரிவர அமையவில்லை என்றால் ஒருவர் எதையும் சாதிக்க முடியாது. ஆக, சாதனை என்பதையும் லக்னம் குறிக்கும். கல்வி, புத்திசாலித்தனம் இவைகள் கூட லக்னத்தின் பகுதிதான். லக்னம் தலையைக் குறிக்கிறது. உங்களுக்கு கடக லக்னம். இது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான லக்னம். "கலியுகத்திற்கு கடக லக்னம்' என்று முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.
"மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி' அப்பர் தேவாரம். மனம், மதி இரண்டையும் குறிப்பவர் சந்திர பகவானாவார். சந்திர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். நாணயம் என்பார்களே அது நிரம்ப இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செய்யவும் நேரிடும்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
இந்த ஐந்தாம் வீடு பலம் பெறும் பட்சத்தில் உண்டாகும் பலன்களாவன: அம்மான், தந்தை, சகோதரர் குலம் விருத்தியாகும். கல்வி சாஸ்திரம் கற்கும் பேறு பெறுவர். தாய், தந்தை, வாழ்க்கைத்துணை, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வார்கள். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வீடு, வாகன சேர்க்கை, தர்ம கைங்கர்யம், விவசாய அபிவிருத்தி, பொன் பொருள் சேர்க்கை ஆகிய சுப பலன்களும் நடக்கும்.
செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவானையும் (குருமங்கள யோகம்) ஏழாம் பார்வையாக தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியையும், எட்டாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குருபகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் செல்வம், கல்வி, கண்களின் ஒளி, சிறப்பான குடும்பம், நயமான பேச்சு அல்லது மிடுக்கான பேச்சு ஆகியவைகள் நல்லபடியாக அமையும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீடான தன் மூலத் திரிகோண வீட்டின் மீது படிகிறது. எந்த கிரகமும் தன் வீட்டைப் பார்ப்பது சிறப்பு. இதனால் வாழ்க்கையில் பெரிய அளவுக்கு கடனோ, வியாதியோ, மற்ற பிரச்னைகளோ ஏற்படாது. குரு பகவானின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீது படிகிறது. எட்டாம் வீடு ஆயுள் ஸ்தானம் என்று மட்டும் கொள்ளக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் இது பலமுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஜோதிடம் போன்ற உள்ளுணர்வுடன் அறிந்துகொள்ளும் ரகசிய கலைகளும் இந்த வீட்டின் மூலம் ஒருவருக்குக் கிடைக்கிறது. இதை ஒரு "பொக்கிஷ வீடு' என்றும் கூறுவார்கள். குருபகவானின் பார்வையினால் உங்களுக்கு புதிய ரகசியங்களை அறியக் கூடிய ஆற்றல் உண்டாகும். குருபகவானின் ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் உச்சம் பெற்றிருக்கும் சூரியபகவானின் (சிவராஜயோகம்) மீதும், புத, சுக்கிர பகவான்களின் மீதும் படிகிறது.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். இதனால் வாக்கு ஸ்தானாதிபதியும் சிறப்பான பலம் பெற்றிருக்கிறார் என்றும் கூற வேண்டும். அதோடு இரண்டாம் வீடு முதல் தன ஸ்தானமுமாகும். தைரிய, வீரிய, பராக்கிரம, முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
ஜோதிடம் போன்ற நுட்பமான கலைகளுக்கு புத பகவானே காரகர் ஆகிறார். கல்வி, கணிதம், காமர்ஸ், வியாபாரம், மருத்துவம் போன்ற துறைகளிலும், பேச்சினால் ஜீவிதம் செய்பவர்களுக்கும் புதன் பகவான் ஆதரவு அவசியமாகும். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார்.
பத்தாம் வீட்டில் சுக்கிர பகவான் பலம் பெற்றமர்ந்து, புத்தி காரகரான புதன் பகவானுடனும் சூரிய பகவானுடனும் இணைந்திருப்பதால் செய்யும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து வண்டி, வாகனம், வீடு, நிலம், வாங்கும் யோகங்களும் உண்டாகும்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான கும்ப ராசியை அடைகிறார். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கேது பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லக்னாதிபதி பலம் குறைந்திருப்பதும், காலசர்ப்ப தோஷமுள்ளதும் ஆகிய இரண்டு குறைகள் உங்கள் ஜாதகத்தில் பிரதானமாக உள்ளது. சனி, ராகு பகவான்களும் ஒரே பாகையில் அமர்ந்திருக்கிறார்கள்.
மற்றபடி தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானும், லாப ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானும் பரிவர்த்தனை பெற்றிருப்பது சிறப்பாகும். இதனால் இறுதிவரை வருமானம் நீரூற்று போல் வந்து கொண்டிருக்கும். பாக்கியாதிபதியும், தன ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்தையும், பலம் பெற்ற கிரகங்களையும் பார்வை செய்வதும் சிறப்பு.
தனகாரகர் தனாதிபதியைப் பார்வை செய்வது இதற்கு உறுதியளிக்கிறது. அதேநேரம் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மற்றபடி சனி பகவானின் தசையில் செய்தொழிலுக்கு கிடைத்த அடித்தளம், புத பகவானின் தசையில் ஏற்படப்போகும் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும். அதனால் நீங்கள் செய்துவரும் கேட்டரிங் தொழிலுடன் ஜோதிடத்தையும் தொழிலாக எடுத்துக்கொள்ளலாம். புத மஹாதசை அதிர்ஷ்ட தசையாகச் செல்லும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீசீதாராமரை வழிபட்டு வரவும்.