ராகு தசை யோக தசை!
எனக்கு தற்சமயம் நடக்கும் ராகு தசை எவ்வாறு இருக்கும்? நான் ஜோதிடத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்து வருகிறேன். எப்பொழுது முனைவர் பட்டம் கிடைக்கும்? ஆயுள் பற்றியும் கூறவும்!
எனக்கு தற்சமயம் நடக்கும் ராகு தசை எவ்வாறு இருக்கும்? நான் ஜோதிடத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்து வருகிறேன். எப்பொழுது முனைவர் பட்டம் கிடைக்கும்? ஆயுள் பற்றியும் கூறவும்!
வாசகர், திருநெல்வேலி.
உங்களுக்கு துலாம் லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம் ஒன்றாம் பாதம். லக்னம், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
Advertisement
சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
துலாம் லக்னத்திற்கு சனி பகவானின் சுப பலம் ஒன்றே போதும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே கிடைத்து விடும். அதோடு சனிபகவானுக்கு பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான சச மஹா யோகமும் உண்டாகிறது.
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும், சூரிய பகவானின் மீதும் (சிவராஜ யோகம்) படிகிறது. குரு பகவானின் ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும் ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தொழில் ஸ்தானாதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சிபெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான சூரிய பகவான் லக்னத்தில் நீச்சம் பெற்று நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
ராகு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கேது பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
ஆட்சி பெற்றுள்ள சந்திர பகவானுடன் கேது பகவான் இணைந்திருப்பது அஷ்டமஹா நாக யோகத்தைக் கொடுக்கிறது.
நீச்சம் பெற்ற கிரகத்துடன் உச்ச கிரகம் இணைந்திருந்தால் அந்த கிரகத்திற்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது ஜோதிட விதி. மேலும் ஒரு கிரகத்திற்கு நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டு விட்டால் மற்ற அனைத்து நீச்சம் பெற்ற கிரகங்களுக்கும் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகி விடும்.
நீச்சம் பெற்றிருக்கும் சூரிய பகவானுடன் உச்சம் பெற்றிருக்கும் கிரகமான சனி பகவான் இணைந்திருப்பதால் சூரிய பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. இதனால் சுக்கிர பகவானுக்கும் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகி விடும். அதோடு லக்னத்திற்கு இருபுறமும் சுப கிரகங்களான சுக்கிர, புத பகவான்கள் அமர்ந்திருப்பதால் லக்னத்திற்கு சுப கர்த்தாரி யோகம் உண்டாகிறது.
பொதுவாக சனி பகவானை குரு பகவான் பார்த்த ஜாதகர்கள் சோடை போவதில்லை. "சனி வத் ராகு' அதாவது சனி பகவானைப்போல் ராகு பகவான் பலனளிப்பார் என்பது ஜோதிட விதி.
தற்சமயம் கேந்திர ராசியில் உள்ள ராகு மஹா தசையில் சுய புக்தி நடக்கிறது. அதனால் ராகு மஹா தசை சனி மஹா தசையைப் போல் வேலை செய்யும் என்று கூற வேண்டும். இன்னும் மூன்றாண்டுகள் கழித்து, சனி பகவானின் புக்தியில் ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வாங்குவீர்கள். தீர்க்காயுள் உண்டு. ஆரோக்கியம், எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவ பெருமானையும் வழிபட்டு வரவும்!