எடப்பாடி எதிரொலி! வேட்பாளர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறதா தவெக?
எடப்பாடி தொகுதியில் நடந்த நிகழ்வின் எதிரொலியாக வேட்பாளர்களை தவெக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவதாகத் தகவல்.
எடப்பாடியில் தவெக வேட்பாளர் மாயமான நிலையில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் தவெக கொண்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவின் வருகையால், கள நிலவரங்களும் பிரசாரங்களும் சற்று மாறியிருக்கும் நிலையில், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண் குமார், வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்யாத நிலையிலும், வேட்பு மனு பரிசீலனையின்போது நேரில் வராததாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளர் நித்யாவின் வேட்பு மனுவும் 10 பரிந்துரைகளுக்கு பதிலாக வெறும் 7 பரிந்துரைகள் மட்டுமே இருந்ததால் நிராகரிக்கப்பட்டதால், 234 தொகுதிகளில், ஒரே ஒரு எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடாத தொகுதியாக மாறியது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கட்சித் தலைவர்கள் கூறி வந்த நிலையில், போட்டியே 233 தொகுதிகளாகக் குறைந்தது.
Advertisement
Advertisement
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்கலாம், எதிர்க்கட்சியினரின் சதியாக இருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளும், தங்களது வேட்பாளர்கள், எதிர்க்கட்சியினரின் சதியில் சிக்காமல் தீவிரமாக கண்காணிக்கும்படி, கட்சித் தலைமை அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, சென்னை, தஞ்சைக்கு அருகே உள்ள தொகுதிகள் சிலவற்றின் தவெக வேட்பாளர்களை எதிர்க்கட்சியினர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தவெக தலைமையின் காதுகளைச் சென்றடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், வேட்பு மனுக்களை திரும்பபெறுவதற்கான நாளில், தங்களது வேட்பாளர்கள் யாரேனும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுவிடுவார்களா என்று கண்காணிக்கப்பட்டதாகவும்கூட தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் தவெக பயந்தது போல அல்லாமல், அவர்களது மாற்று வேட்பாளர்கள் தான் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது கட்சித் தலைமை என்கிறார்கள் சுற்றியிருக்கும் தொண்டர்கள்.
இந்த நிலையில், 233 தொகுதிகளிலும் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து, அவர்களை கண்காணித்தும் வருகிறதாம் தவெக தலைமை. இதனை தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
It is reported that candidates are being brought under close surveillance in response to the incident in the Edappadi constituency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.