முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் எதிர்காலம், ஆயுள் ஸ்தானம் எவ்வாறு உள்ளது? எனக்கு எப்பொழுது முக்தி (மோட்சம்) கிடைக்கும்? 

என் எதிர்காலம், ஆயுள் ஸ்தானம் எவ்வாறு உள்ளது? எனக்கு எப்பொழுது முக்தி (மோட்சம்) கிடைக்கும்? 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

என் எதிர்காலம், ஆயுள் ஸ்தானம் எவ்வாறு உள்ளது? எனக்கு எப்பொழுது முக்தி (மோட்சம்) கிடைக்கும்? 

செல்வராஜ், திருவந்திபுரம். 

உங்களுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதம். பாக்கியாதிபதி சந்திர பகவான் சுகம், வண்டி, வாகனம், மாத்ரு (அன்னை) ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சமடைகிறார். 
ராசி சக்கரத்தில் பலம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் பலம் குன்றினால் அந்த கிரகத்தால் முழுமையான நன்மைகளைப் பெற முடியாது. அந்த பாவத்தின் காரகத்துவம் பரிமளிக்க முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. 
சந்திர பகவான் மனதுக்கு காரகராவதால் மனச் சஞ்சலம் உண்டாகுமென்றாலும் சந்திர பகவானுக்கு 6, 7, 8ஆம் இடங்களில் சுப / அசுப கிரகங்கள் இருந்தால் "சந்திர ஆதி யோகம்' உண்டாவதால் எல்லா எதிர்ப்புகளும் சோதனைகளும் துயரங்களும் நீங்கிவிடும். 
லக்னாதிபதி ருணம், ரோகம், சத்ரு ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில், சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) ஏகாதச பிரகஸ்பதியாக (பதினொன்றாம் வீட்டில் குருபகவான் இருப்பதை ஜோதிடம் சிலாகித்துக் கூறுகிறது) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். 
குரு பகவான் அறிவு, அந்தஸ்து, ஐஸ்வர்யம், இன்பமயமான வாழ்வளித்தல் மற்றும் பெரும்புள்ளிகளோடு பெரும் புள்ளியாக இயங்க வைப்பார். 
நிதி, நீதி, நிர்வாகம், விஞ்ஞானம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்குக் காரணமாகிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய, முயற்சி, வீரிய ஸ்தானமான மூன்றாம்  வீட்டையும்,  பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீடான தன் ஆட்சி வீட்டையும் (மீன ராசி) பார்வை செய்வதும் சிறப்பாகும்.
எந்த கிரகமும் தன் ஆட்சி, உச்ச, மூலதிரிகோண வீடுகளைப் பார்வை செய்வது அந்த வீட்டிற்கு பலத்தைக் கூட்டும் என்பது ஜோதிட விதி. 
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும் படிகிறது.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சுய சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்), வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 
அதோடு சந்திர பகவானுக்கு பத்தாம் வீடான உச்ச கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால் கடினமாக உழைக்க வைத்து அதற்குரிய நற்பலன்களைத் தருவார். அதோடு ஆயுள் பலமும் கூடுகிறது. 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
ஏழாம் வீட்டிற்கு நான்காம் வீட்டிலும், பன்னிரண்டாம் வீட்டிற்கு பதினொன்றாம் வீட்டிலும் சுக்கிர பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு. அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார். 
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கேது பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ராகு பகவான் அயன சயன மோட்ச ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 
பொதுவாக முக்தி (மோட்சம்) என்பது கால புருஷ தத்துவப்படி பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவானையும், கர்ம ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவானையும் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு கிரகங்களும் சுபமாக சஞ்சரிக்கும் காலங்களில், அனுகூலமான தசா புக்தி நடக்கையில் ஆத்மா இந்த உடலிலிருந்து பிரிந்து மோட்சமடைகிறது. 
உங்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தன் வீட்டை அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்வது சுபத்துவம் என்று கூறவேண்டும். சனி பகவான் லக்னமாகிய உயிர் ஸ்தானத்தில் சுய சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பேயாகும். 
தற்சமயம் புத பகவானின் தசையில் குரு பகவானின் சாரத்திலுள்ள ராகு பகவானின் புக்தி நடக்கிறது. புத பகவானும் வலுத்திருக்கிறார். அதனால் உங்களுக்கு இன்னும் 18 ஆண்டுகளுக்குப் பிறகே முக்திக்குரிய  காலகட்டமாக அமையும். எதிர்காலம் படிப்படியாக சீராகவே செல்லும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.