திருமணத்தில் நாட்டமின்மை - ஜோதிட விளக்கம் 
ஜோதிட கட்டுரைகள்

திருமணத்தில் நாட்டமின்மை - ஜோதிட விளக்கம்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் முன்னோர்கள்.

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் முன்னோர்கள். அப்படிப்பட்ட திருமண வாழ்வில் தாம்பத்திய உறவில் கிரகங்களின் தாக்கம் மிக முக்கியமானதாக இருக்கும் என்கிறது ஜோதிடம். எந்தெந்த கிரகங்கள் நம் உடலின் எந்த பகுதியை கட்டுப்படுத்தும். நம் குணாதிசயங்களை எப்படி கட்டுப்படுத்தும் என்பவற்றை நாம் இங்கு விரிவாக பார்ப்போம்...

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். ஆனால் உண்மை நிலவரம் கனவு உலகிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. யதார்த்தத்தில் திருமணம் என்பது இடைவிடாத விட்டுக் கொடுத்தலும், சமரசங்களும் நிறைந்தது.

காதலும், சின்னச் சின்ன விட்டுக்கொடுத்தல்களும், பொறுப்புக்களும், இனிய சமரசங்களும் தான் திருமண பயணத்தை மென்மையாக நகர்த்துகிறது என நம்புகிறோம். ஆனால், ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், இவற்றையெல்லாம் தாண்டி நல்ல உடலுறவும் நிலையான மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது.

ஜோதிட விதிகளின் படி, ஐந்து கிரகங்கள், அதாவது, சூரியன், சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது இவற்றுடன் ஒருவரின் ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதி ஆகியோர் திருமணம் தொடர்பான பாவகங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருகின்றனர். இந்த பிரச்னைகளிலிருந்து வெளிவந்து சுமுகமாக திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நாம் சில விஷயங்களை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

திருமணம், தாம்பத்திய சுகம் மற்றும் திருமணம் சார்ந்த பிரசனைகளுக்கு முக்கிய காரகன் சுக்கிரன் ஆவார். சுக்கிரன் கெட்டிருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும். ஜாதகத்தில் தாம்பத்திய சுகத்துடன் தொடர்புடைய முக்கிய கிரகங்கள் பின்வருவன ஆகும்.

சுக்கிரன் – ஆண் மற்றும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை ஆதிக்கம் செலுத்துகிறார்.

செவ்வாய் – கோபம், காமம், இரத்த ஓட்டம் ஆகியவற்றின் காரகன்

சந்திரன் – கற்பனை வளம், காமம், அன்பு, உணர்ச்சி ஆகியவற்றிற்கு காரகன்.

சனி – ஆண்மைக் குறைபாடு, முன் விளையாட்டுக்கள் ( Foreplay ), காமத்தில் இயற்கைக்கு மாறான வேட்கை ஆகியவற்றின் காரகன்

ராகு – மாற்று மதத்தினர், வெளிநாட்டவர்கள், திருமணமான ஆண் / பெண் மீது மோகம் ஆகியவற்றின் காரகன்

புதன் – ஆண்மையின்மை, மலட்டுத்தன்மை, சரசம், பல உறவுகள் ஆகியவற்றின் காரகன்

தாம்பத்திய சுகத்தோடு தொடர்புடைய வீடுகள் :-

5 ஆம் வீடு – சிந்தனை, அறிவுத்திறன், கற்பனைவளம்

7 ஆம் வீடு – தாம்பத்தியம், வாழ்க்கைத் துணை, உட்புற பிறப்புறுப்புக்கள் ஆகியவற்றிற்கான முதன்மை வீடு

8 ஆம் வீடு – ஊழல், புகழுக்கு களங்கம், வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள்

9 ஆம் வீடு – திருமணத்தை தாண்டிய முறை தவறிய உறவுகளோடு தொடர்புடையது

12 ஆம் வீடு – அயன, சயன, போக ஸ்தானம்

உறவில் கிரகங்களின் ஆதிக்கம் 

ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு அளவுக்கதிகமாக காம உணர்வு இருக்கும். வக்கிரமடைந்த செவ்வாயும் சுக்கிரனும் இயற்கைக்கு மாறான உறவுகளைத் தேடும் மனப்போக்கை ஏற்படுத்தும், இதனால் இன்பமான தாம்பத்தியம் அமையாது.

இதுபோன்ற கிரக சேர்க்கை கொண்ட ஜாதகர்கள், ஒன்று தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விலகி இருப்பார்கள் அல்லது இல்லற சுகத்தில் அளவுக்கதிகமான நாட்டமுடையவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் பாதித்தே தீரும்...

சனி மற்றும் ராகு சேர்க்கை இல்லற வாழ்க்கையின் மீது அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் 3 ஆம் இடம், 6 ஆம் இடம், 10 ஆம் இடம், மற்றும் 12 ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால் அந்த நபர் வழக்கமான உடலுறவை விட, முன் விளையாட்டுக்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார். அதுவே இந்த ஜாதகரை திருமண பந்தத்தில் நுழைய விடாமல் செய்யும்...

திருமண உறவில் சனி கொடுக்கும் பலன்

மேலே கூறிய வீடுகளில் (3 ஆம் இடம், 6 ஆம் இடம், 10 ஆம் இடம், மற்றும் 12 ஆம் இடத்தில்) சனி அமர்ந்தால் பொதுவாக திருமண வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்பட்டு பிரிவுக்கு வழிவகுக்கும். ஆனால் வாழ்க்கைத் துணைவராக வாய்த்தவர், தன் துணைவர் இத்தகைய இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்பவராக இருந்தால், அத்தகைய சூழல்களை முறையாகக் கையாளலாம். பொதுவாக ஏழரை சனி, சனி திசை அல்லது ராகு திசை நடக்கும் போது பல ரகசியங்கள் வெளிப்பட்டு திருமண வாழ்க்கையில் விரிசல்கள் பிரிவுகள் உண்டாகும்.

சமூகத்தில் ஜோதிடத்தை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து திறமையான ஜோதிடரை அணுகினால், தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம். இந்த இக்கட்டான காலகட்டங்கள் முன்னதாக கண்டறியப்பட்டு ஜோதிடரின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றினால் தம்பதிகள் ஆழமான அன்பு மற்றும் புரிதலுடன் இணக்கமாக நீண்ட நாள் உறவில் தொடரலாம். இந்த ஜன்மத்தில் திருமண உறவு என்பது கர்மா என்கிற பூர்வ வினையின் மிகப்பெரிய பகுதி. 

கணவன் - மனைவி உறவுதான் முதல் நிலை கர்மா!

இதற்கு பிறகு தான் பெற்றோர் - பிள்ளை, சகோதர சகோதரிகள் மற்ற எல்லா உறவுகளும் வருகின்றன. ஒன்பது பொருத்தம் மட்டும் பார்த்தல், நாடி கூட்டு 25 மதிப்பெண்ணுக்குப் பார்த்தல், செவ்வாய் தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் இவற்றின் பொருத்தத்தைக் கவனித்துப் பார்த்தல், குடும்பம், பூர்வ புண்ணியம், சயனம் போன்ற ஸ்தானங்களின் பொருத்தம் பார்த்தல் இவையும் அவசியம்; அதே சமயம், இவை மட்டும் போதாது!

நவாம்சம், சுக்ரன், குரு, சனி, ராகு, கேதுவின் நிலை , இருவரின் ஜாதகத்தில் பாப சமானம் மற்றும் பல விஷயங்கள் இன்னும் இருக்கின்றன!

சிலரது ஜாதகத்தில் பித்ரு தோஷம், களத்திர தோஷம், வசிய பிரசனை போன்று இன்னும் சொல்ல முடியாத பிரசனைகள் உள்ளது தெரிய வரும் . இவற்றை ஓரளவேனும் பார்ப்பதற்கே முழுதாக ஒரு வாரம் கூட ஆகலாம்!

பல தம்பதியரிடையே 10 இல் ஒரு பொருத்தம் மாத்திரம் இருந்தும், நாடி கூட்டு எண்ணிக்கை 14 கும் கீழே இருந்தும் கூட 50 வருடம் சேர்ந்த மண வாழ்க்கை இருக்கலாம்.

6-7 பொருத்தத்திற்கு மேல் இருந்து, நாடி கூட்டு எண்ணிக்கை 20 க்கும் மேல் இருந்தும் மண முறிவு ஏற்படலாம் . இதற்கு மிக முக்கியமான காரணம் அந்த விதி! அது நடக்கவேண்டுமென்று இருந்தால், மிகப் பெரிய ஜோதிடருக்குக் கூட பலன் சொல்லும் நேரம் கண்ணை மறைக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் மிகக் கொடிய தோஷங்கள் இருப்பின் திருமணத்தில் பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். சிலர் வாழ்க்கையில் ஒரு முறை மட்டும் பிரச்சனை இருக்கலாம். சிலருக்குத் திரும்பத் திரும்பப் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கலாம். இதெல்லாம் கர்ம வினைப் பட்டதே. அதனால் தான், சில மிக பிரபல ஜோதிடர்கள் கூட ஜாதகப் பொருத்தம் பார்த்துச் சொல்வதை விட்டு விட்டனர்.

பொதுவாக ரஜ்ஜு பொருத்தமும் நாடி பொருத்தமும் மிக அவசியம்! திருமணத்தில், சுக்ரன், குரு, 2,5,7,8,12 இவற்றின் நிலை பொதுவாகக் கவனித்துப் பார்க்கப்படும்

நவாம்சத்தில் பிள்ளையின் சுக்கிரனும் பெண்ணின் சுக்கிரனும் பார்த்து கொண்டால், பிள்ளையின் குருவும் பெண்ணின் குருவும் பார்த்து கொண்டால், பிள்ளையின் செவ்வாயும் பெண்ணின் செவ்வாயும் பார்த்து கொண்டால், பிள்ளையின் ராகு. கேது பெண்ணின் ராகு கேதுவை பார்த்து கொண்டால், லக்கினங்கள், ராசிகள் பிள்ளையுடையதும், பெண்ணுடையதும் பார்த்து கொண்டால் மிகவும் சிறப்பு.

பிரச்சனை குறைவு! இப்படி அமைந்தால், பல ஜென்மாந்திரங்களாய் வரும் பந்தம் அதிகம் என்று பொருள். இப்படி அமைவது அரிது .

நவாம்சம் இருவரின் ஜாதகத்தை ஒன்றின் மீது ஒன்று வைத்து பார்த்தல் என்று பொருள். உதாரணம் பிள்ளையின் ஜாதகத்தில் குரு கடகத்தில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.

பெண்ணிற்கு விருச்சிகம், மகரம், மீனத்தில் குரு இருப்பின் இருவர்க்கும் பார்வை சம்மந்தம் ஏற்படுகிறது . நான் சொல்வது சாதாரண பராசர முறை பொது ஜோதிட பார்வை...

பிள்ளை அல்லது பெண் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ராசி 1,5,9 இல் தொடர்பு இருந்தால் மிகவும் சிறப்பு ! உதாரணம் பெண் தனுர் லக்கினம், பிள்ளை தனுர், மேஷம், சிம்ம லக்கினம் என்றால் மிகச் சிறப்பு.

உதாரணமாக, நவாம்சத்தில் பெண் ரிஷப லக்கினம் என்று வைத்து கொள்வோம் விருச்சிக லக்கினம் உள்ள பையனுடன் உடல் ரீதியான கவர்ச்சி (attraction) எனப்படும் வசியம் பல ஜென்ம பந்தங்களாய் உண்டு.

இப்படியே வேறோர் பையனின் ஜாதகத்தில் கடக ராசி நவாம்சமும் பெண்ணின் ஜாதகத்தில் மகர ராசியும் இருப்பின் அதனை சம சப்தமப் பார்வை என்பார்கள்.

இவர்கள் மிக அதிகமான மனப் பொருத்தம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதற்கான அறிகுறி அது. ராகு கேது சம சப்தமம் அமைந்தால் பெரும்பாலும் இன்னும் அதிகமான கர்ம பந்தம் இருக்கும் என்பதாகப் பொருள்.

ராசியில் (chart level) சம சப்தமப் பார்வை இதற்கு அடுத்தபடிதான்.

கோணம் (டிகிரி), நட்சத்திரம், பரிவர்த்தனைகள், சில லக்கினங்கள், நாடி, பிருகு டிகிரி இப்படி இன்னும் பல விஷயங்கள் உண்டு! !

எது எப்படி இருந்தாலும், இறைவனால், குருவால், இஷ்ட தெய்வத்தால் விதியை மாற்றவோ, வேறு வழி காட்டவோ முடியும், நம்மை காப்பற்ற முடியும் என்பதை பலர் வாழ்விலும் கண்கூடாகப் பார்க்கலாம் .

திருமண பந்தம் கசப்பதேன் ! பிரிவினைதான் இனிப்பதேன் !!    ஜோதிடம் சொல்லும் அறிவுரை தான் என்ன ?

ஆண்மை குறை உள்ள ஜாதக அமைப்பு.

திருமணம் ஆன முதல் நாள் இரவிலேயே ஒரு பெண் இதனை அதாவது தனது கணவரின் இயலாமையை கண்ட பிறகு அவளின் கனவுகள் மற்றும் எதிர்கால மன ஓட்டங்கள் அத்தனையையும் நாம் எண்ணி பார்க்கவே பயங்கரமாக உள்ளது... இதனை ஒரு பெண்ணாய் இருந்தும், பெற்றோராய் இருந்தும் காணும் போது மட்டும் தான் உண்மை வலி தெரிய வரும்... 

வீர்யம், செயல் திறன் இவற்றை சொல்வது செவ்வாய் கிரகம்... அதை வெளிப்படுத்துவது, ஒருவரின் ஜாதகத்தில் 3 ஆம் பாவம் ஆகும்... 8 ஆம் இடம் மர்ம ஸ்தானம் ஆகும்....மர்ம ஸ்தானத்தின் 8 ஆம் இடம் தான்  3 ஆம் இடம்...

3 ஆம் இடம் , உயிர் அணுக்கள் உற்பத்தி, அதன் எண்ணிக்கை வளர்ச்சி போன்றவற்றையும், சுக்கிரன் - சுக்கிலத்தையும், இவற்றை ஊக்குவிக்கக்கூடிய மனோ காரகன் , சந்திரன்... இவற்றின் கூட்டு முயற்சியே, ஆணின் ஆண்மை தன்மை யாகும்... உடலால் மிக வலுவாக தோன்றினாலும், குழந்தை பேற்றை அளிப்பதற்குரிய சக்தியை இவைகளே, என்றால் அது மிகை ஆகாது...

புதன் - அலி கிரகம் ஆகும், கேது - ஆண் அலி ஆகும்... சனி- மந்த காரகன்...
சுக்கிரன் -காமத்து காரகன், இவனால் ஒருவருக்கு ஆசையை அதிகப்படுத்தும் சக்தி பெறுவார்...
இந்த சனியானவர், சுக்கிரனை பார்க்க, மந்த நிலை ஏற்படும்... அதனால், புத்திர பேறு கால தாமதமாகும்...

திருமணத்தில் நாட்டமில்லாதவர்களை, ஜோதிடம் மூலம் திருமணத்திற்கு முன்னரே அறியமுடியுமா ?

நிச்சயமாக அறியமுடியும்... லக்கனத்தில் சந்திரன் இருந்து, சூரியன், புதன், சனி ஆகிய மூவரும் ரெட்டை ராசியில் அமைந்து, மூவரின் பாகையைகளையும் கூட்ட கிடைக்கும் ராசியை, செவ்வாய் பார்க்க அமைந்தால், ஒற்றை பிறப்புறுப்பை அற்றவராக, அதாவது, ஆண் அல்லது பெண் என்று இல்லாதவராக, அதாவது, அலியாக விளங்குவார்...

சுக்கிரனுக்கும், சனிக்கும், 7 ல் செவ்வாயோ அல்லது சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் ஏழில் சனி இருந்தால் ஆண் அல்லது பெண் என்று இல்லது நடுவில் அலியாக இருப்பார்...

7 ஆம் இடத்தில், ராகு, தூம கேது நிற்பின் ஆண் அல்லது பெண் குறிகளுடன் பிறந்தாலும், மலட்டு தன்மையை குறிக்கும், வீரியம் இருக்காது...

7க்குடையவனும், சுக்கிரனும் சேர்ந்து ஆறில் இருந்தால், ஜாதகனோ அள்ளாது துணைவியோ அலியாக அமைவார்...

இதுபோல் நிறைய விதிகளை கண்டு அதற்கு பிறகு, திருமணப்பொருத்தத்தை நிறைவு செய்தல் நல்லது... 
பொதுவாகவே,வேலை பளு , பதற்றம், மன அழுத்தம் போன்றவை அதிகமாகும் போது , வீர்யம் குறையும்.. அதே போல், கம்ப்யூட்டர் வேலை செய்பவர்கள், உத்தியோகம் இல்லாமல் இருப்பவர்கள், இவர்களுக்கும் மனம் அழுத்தம் காரணமாக ஆண்மை தன்மை குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும், 4 ஆம் பாவகம், ஒருவரின் பழக்க வழக்கங்களைப் பற்றி கூறும்...

அதாவது, மது அருந்துதல், புகை பிடிக்கும் பழக்கம், நாள்பட்ட மலசிக்கல் உள்ளவர்களுக்கும், இந்த ஆண்மை தன்மை குறைய வாய்ப்பு உள்ளது...

6 ஆம் இடத்துக்கும் 8 ஆம் இடத்துக்கும் எப்போதும் தொடர்பு உள்ளது. 6 ஆம் இடம் வயறு / குடல் சம்பந்தமானது. இந்த இடம் தான், ஒருவருக்கு நோயை உற்பத்திபடுத்துகிற ஸ்தானம் ஆகும். அது  பெருமளவு வளர்வது 8 ஆம் இடத்தை கூறவேண்டும். ஏன் எனில் இது சிறுநீர் வெளியேற்றம் மற்றும் , மலக்குடல் பகுதி ஆகும்.. ங்கு சரியாக வெளியேற்ற படவில்லை என்றால், நிச்சயம் நோயின் தன்மை வளர காரணமாகிவிடும். இதனை ஒருபோதும், மறக்கலாகாது.

பொது க நட்சத்திரப்பொருத்தத்தில், யோனி பொருத்தம் என்று ஒன்று உள்ளது... அதில், பகை யோனி நிச்சயம் பொறுத்தக்கூடாது... உதரணமாக ரோகிணி நட்சத்திரம் பாம்பு யோனி, இதனை மகம் மற்றும் பூரம் நட்சத்திரத்திற்கு யோனி எலி ஆகும்... எனவே, இதனை பொருத்தக்கூடாது ...

வீர்யம் ஸ்தானத்திற்கு காரணமான 8 ஆம் பாவம் பலவீன மாக இருக்கக்கூடாது. அதேபோல் இந்த 9 ஆம் ஸ்தானத்திற்கு திரிகோணமான, 5, மற்றும் 9 ஆம் இடங்களான 12 மற்றும் 4 ஆம் பாவத்தில், கேது , செவ்வாய் இருக்கக்கூடாது.

இப்படி இருப்பவர்களின் ஜாதகம் நமக்கு கூறுவது என்னவென்றால், இவர்களுக்கு, திருமணத்தில் நாட்டம் இருக்காது.

ஆண்மை குறைவு உள்ளவர்களை, சரியான மருத்துவத்தின் மூலம் நேர்படுத்தி, சரியாக்கி விடலாம். ஆனால், ஆண்மை அற்றவர்களை திருமணத்திற்கு முன்னரே அறிந்து அவர்களை சேர்க்காமலிருக்க நல்ல ஜோதிடர்கள் தான் துணை புரியவேண்டும். அப்படி நாட்டம் அற்றவற்றவர்களை அவர்களின் வசதி, அந்தஸ்து, பணநடமாட்டம் மட்டுமே கொண்டு ஒரு பெண்ணுக்கு சேர்த்து வைத்தால், அது பல வித பிரச்சினைகளுக்கு வித்திடும்.

அதே போல் எந்த ராசி கட்டத்திலேயும், சூரியன், சனி புதன் சேர்ந்து இருப்பின் அவர் திருமணத்தில் நாட்டமின்மையே கொண்டவர் ஆவார். சூரியன் வெப்ப கிரகத்துடன், இரண்டு அலி மற்றும் மந்த கிரகங்களின் சேர்க்கை நிச்சயம், திருமண ஆசையை தூண்டவே செய்யாது. இது ஆணுமற்ற, பெண்ணுமற்ற ஒரு நிலையை குறிப்பதாகும். இது இரு பாலாரின் ஜாதகத்தில் இருக்கும் ஒரு அமைப்பு ஆகும். 

எனவே, திருமணத்திற்கு முன்னரே, இதனை அறிந்து பின் திருமணம் செய்வித்தல் நல்லது. பெண்களிலும், பெண்மை இல்லாதவர்கள், திருமணத்தில் நாட்டம் இல்லாதவர்கள் உள்ளனர். அதனை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்...

அனைவரும், இன்புற்று இருக்கவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன்.

எல்லோரும் எல்லா நலமும், வளமும், மகிழ்வும் பெற்று இனிதாக வாழ, நான் வணங்கும், ஷீர்டி சாயி நாதனை வணங்கி வாழ்த்துகிறேன்.
- ஜெய் சாய் ராம்

தொடர்புக்கு :  
"ஜோதிட ரத்னா"   தையூர். சி. வே. லோகநாதன் 
98407 17857  ( வாட்ஸ் ஆப் மட்டும் ) 
91502  75369   ( போன் கால் மட்டும் )

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

SCROLL FOR NEXT