துலா ராசி / லக்கினத்தில் பிறந்தவர்கள் கர்மாவை அலட்சியம் செய்யமாட்டார்கள். பொதுவாகவே இந்த லக்னத்தில் பிறக்கும் ஜாதகர்கள் கர்த்தாவிற்குப் பயந்து வாழ்க்கை நடத்துவார்கள். துலா ராசியின் அடையாளம் – நீதிதராசு. ஒருவரின் கர்மாவின் தராசு என்பது சட்டம், நீதி நியாயத்தின் அளவை சமநிலையாக்குவதைக் குறிக்கும். இங்கு தான் நீதியை நிலைநாட்டும் சனி பகவான் உச்சம் பெற்று தன் பலத்தைக் காட்டுவார்.
ஒருவர் தான் செய்யும் செயலில் நல்ல கர்மாவின் கோட்பாடுகளுக்கு இணங்க, மனசாட்சிக்குப் பயந்து ஒரு செயலை செய்யும் பொழுது 100% நிரந்தர நற்பலன்கள் ஏற்படும். இந்தக் கோட்பாட்டை துலா லக்னக்காரர்கள் சூட்சமாக பின்பற்றுவார்கள். "தன் உழைப்பினால் சம்பாதித்துத் தான் சமைத்த கூழ், தெளிந்த நீர் போல இருப்பினும் தன் உழைப்பினால் கிடைத்த அந்த உணவை, உண்ணுவதைவிட இனிமையானது வேறு ஒன்றுமில்லை” என்று வள்ளுவரின் கூற்றுக்கு இணையாக வாழ்வார்கள்.
துலாத்தில் செவ்வாய் நட்சத்திரங்களான சித்திரை 1,2, ராகு சாரத்தைக் கொண்ட ஸ்வாதி மற்றும் குருவின் சாரம் கொண்ட விசாகம் 1,2,3 அடங்கும். இங்குச் செவ்வாயும் குருவும் சரியான நட்பு நிலையில் இருக்க மாட்டார்கள். இந்த பாவத்தில் சுவாதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் முழுமையாக துலாத்தில் உள்ளது. அதனால் இவர்களுடைய சிந்தனை இரட்டிப்பு தன்மை இருந்து கொண்டே இருக்கும். இங்கு இரட்டை குணம் கொண்ட ராகுவின் செயல்பாடு அதிகம். ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட செயல்களைச் செய்யக்கூடிய திறமை கொண்டவர். இவர்களுக்கு ஒரு பொருளை இரட்டிப்பு ஆக்கும் சூட்சுமம் தெரியும்.
துலாத்தில் தான் சுக்கிரன் ஆட்சியும் மற்றும் மூலதிரிக்கோணம் பெறுகிறார். ஒரு கச்சா பொருளை, ஒரு உருவம் கொடுத்து அழகான பொருளாக மாற்றும் தன்மை சுக்கிரனுக்கு உண்டு. எடுத்துக்காட்டாக குரு என்பவர் முழு தங்கத்தைக் குறிக்கும் அதை உருக்கி ஆபரணமாகச் செய்யும் பொழுது சுக்கிரன் அங்கு வந்து விடுவார். சுக்கிரன் என்பவர் ஒரு வடிவத்தை மாற்றி, மெருகு ஏற்றும் வல்லமை மிக்கவர். உதாரணமாகச் செவ்வாய் என்பவர் நிலத்தைக் குறிப்பவர், அங்கு கோச்சார சுபர் செவ்வாய் சுக்கிரனோடு தொடர்பு கொண்டால் நிலம் வாங்கி அங்கு ஆடம்பர வீட்டைக் கட்டி விடுவார்கள். ஒருவர் ஜாதகத்தில் கோச்சாரம் மற்றும் தசா புத்தியும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அப்பொழுது தான் 100% நற்பலன் வெளிப்படும்.
இந்த சூரியன் நீச்சம் என்பதனால் அவரின் ஒளிக் கதிர்கள் துலாத்தில் குறைவாக இருக்கும். இவர்களுக்குப் போராட்டத் தன்மை அதிகமாகவும் இருக்கும். இந்த ராசியினர் அரசாங்கத்தால் நன்மை பெறுவது கடினம். இங்கு கோச்சாரத்தில் சூரியன் துலாத்தில் வரும் காலம் ஐப்பசி மாதம். அன்று முதல் இருள் கலந்த மழையின் ஆரம்பம். சுக்கிரன் துலாம் ராசிக்கு அஷ்டம ராசியான ரிஷபத்திலும் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பார். சுக்கிரன் அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவரால் அசுப திசை நடந்தாலும், உழைப்புக்கு உரிய பலன்கள் கட்டாயம் கிடைக்கும். எட்டில் சுக்கிரன் மாறுபட்டு வேலையை இங்குச் செய்வார். இது துலாத்தின் அற்புதமான சூட்சம விதி. "பத்து விரல்கள் பதறாமல் உழைத்தால், ஐந்து விரலால் அஞ்சாமல் தின்றிடலாம்" என்று துலாம் ராசியினர் இந்த கோட்பாட்டை பின்பற்றுவார்கள்.
சனியின் காரகம் இரும்பு. துலா ராசியினர் தற்காலிக தளர்வுகளைச் சந்தித்தாலும் மீண்டும் எழுந்து பறக்கும் தன்மை கொண்ட இரும்பு மனிதர்கள். இவர்களின் மனமும் உடலும் இரும்பு வளையம் போர்த்தியது போன்ற உறுதியுடனும் இருக்கும். இவர்களுடன் உண்மையான நட்புக் கொள்வது கொஞ்சம் கடினமே. இது காற்று சர ராசி என்பதால் செயலின் வேகம் அதிகமாக இருக்கும். இவர்களிடம் உள்ள பணம், பொருள் வைத்து பெருமிதம் கொள்ளக்கூடாது. இந்த லக்கினக்காரர்கள் சனி பகவானுக்கு நீதியுடன் அனைத்து செயல்களையும் தண்டோற போடாமல் செய்தால் வெற்றி நிச்சயம். ஒரு செயலை முடிக்கும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். இதனால் இவர்கள் ஒரு வயதுக்கு மேல் புத்திசாலித்தனமும் வேகமும் குறைய வாய்ப்புகள் அதிகம். சனி பகவான் உதவியால் இந்த லக்கினகாரர்களுக்கு அவரவர் உழைப்பால் பொன்னும் பொருளும் கிட்டும். அவர்கள் சேர்க்கும் சொத்து வெளியில் தெரியாத வண்ணம் இருக்கும். துலா ராசியினருக்கு சனி திசை அவ்வளவாக பிரச்னை கொடுக்காது.
துலா ராசியினர் மனம்போன போக்கிலே போகாமல் மன உறுதியுடன், நேர்மை, ஒழுக்கம், வாய்மை ஆகியவற்றை உயிரைப் போன்றே மதிப்பவர்கள். எளிமை, போராட்ட குணம், மனஉறுதி, கடின உழைப்பு, உடலை வருத்திய நிலை, மற்றும் அகிம்சை என்பதை வாழ்வின் ஒரு கோட்பாடாகக் கொண்டவர்கள். எடுத்துக்காட்டாக நம் நாட்டின் தந்தையான மகாத்மா காந்தி துலா லக்கினத்தில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு தரிசு நிலத்தை உழுது பசுமையாக்கும் வித்தை இவர்களுக்கு நன்கு தெரியும். உழைப்பை மட்டுமே முதலீடாக வைத்துக்கொண்டு உயர்வார்கள். இவர்கள் உயர்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் ஏணியாக விளங்குவார்கள். துலாத்தில் சந்திரன் ராகு மற்றும் கேது தொடர்புகொள்ளும் பொழுது ஒரு சில நேரங்களில் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள். துலா ராசியில் பாவ கிரகங்களின் தொடர்பு இருந்தால், திருட்டு எண்ணங்களும், தவறான வழியைப் பின்பற்றுவார்கள்.
உதாரணமாக இந்த ராசியில் சூரியன் அவயோகங்களுடன் தொடர்பு கொண்டால் தவறான அரசியலில் ஈடுபடுவார்கள். கால புருஷ தத்துவப்படி, அவரின் ஏழாவது கட்டமான துலாத்தில் சுபத்துவத்துடன் இருக்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையின் முக்கிய காலடி எடுத்து வைக்கக்கூடிய பாவத்தின் ஆரம்பம் ஏழாவது பாவம். இங்குதான் ஒருவர் திருமணம், களத்திரம், திருமண பந்தத்தில் குறை நிறைகள், கூட்டாளி சகவாசம், தொழிலில் ஆர்வத்தைச் சொல்லும் பாவம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இருபது வயதுக்கு மேற்பட்டு ஏற்படும் முக்கிய ஆர்வம், உயர்வு, நெளிவு சுளிவுகள் மற்றும் எதிரிகளைச் சமாளிக்கும் தன்மை என்று இந்த கட்டத்திலிருந்துதான் ஆரம்பிக்கும். துலா ராசியினால் அவரோடு பயணிப்பவர்களுக்குப் பெருமையே தவிர. மற்றவர்களால் இவர்களுக்கு எந்த நன்மையும் பெற முடியாது. ஒரு சில வீட்டில் முக்கிய பாரங்களைச் சுமக்கும் சுமை தாங்கியாக துலா ராசியினர் இருப்பார்கள். இவர்களே அந்த வீட்டின் முக்கிய ஒரு ஆணிவேராகும். அதேபோல் ஒரு அலுவலகத்திலும் ஒருவரின் தொழில் உயர்வுக்கு முக்கிய உறுதுணையாக ஒரு துலா ராசி மற்றும் துலா லக்னக்காரர்கள் இருப்பார்கள்.
துலாத்தில் ஆளும் கிரகம் களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். அவரே 8ம் அதிபதியாகவும் வருகிறார். முக்கியமாக சுக்கிரன் 20 வருடத்தில் ஒரு பாதி சுபமாகவும் மறுபாதி அசுபராகவும் செயல்படுவார். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப கால அளவுகள் மாறுபடும். காலபுருஷனுக்கு 7வது பாவம் திருமணம், காமம், கூட்டுத்தொழில், இரண்டாம் குழந்தை நிலை, எதிரியின் பலம் பலவீனம் சுட்டிக்காட்டும் இடம். அந்த பாவம் மரணத்துக்கு நிகரான செயலையும் குறிக்கும். அதனால்தான் இங்கு ஆயுள் கொடுக்கக்கூடிய சனி பகவான் உச்சம் பெறுகிறார். பாதகாதிபதி மற்றும் உயிர் ஓட்டத்தைத் தரும் சூரியன் பகவான் இங்கு நீச்சம் பெறுகிறார். இங்குச் சொல் தந்தையான சூரியன் மகனான சனி இருவருக்கும் ஒரு மனப்போராட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது வெளியில் தெரியாது. இந்த லக்கின காரர்களுக்கு யோகத்தைத் தருபவர் சுக்கிரன், சனி, புதன்; முக்கியமாக புதனும் சந்திரன் ஒன்றாகக் கேந்திர, திரிகோணங்களில் சேர்க்கை பெற்றால் ராஜயோகத்தைத் தருவார்கள். யோகப்பலனை தடுப்பவர் என்றால் சூரியன், குரு மற்றும் செவ்வாய். இவர்களின் தசா புத்திகளில் போராட்டம் அதிகமாக இருக்கும். அசுபகுரு சுக்கிரன் என்பவர் தேவ குருவின் வீடான மீனத்தில் உச்சமும், 12ம் வீடான கன்னியில் நீச்சமும் பெறுகிறார். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன் சரியான இடத்தில் இருந்தால், அனைத்து சுக போகங்களையும், திகட்டாத செல்வத்தையும், மற்றும் நல்ல களத்திரமும் கிட்டும். சுக்கிரன் என்பவர் ஆசையைத் தூண்டுபவன். அது தவிர சுக்கிரன் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் மந்திரம் தெரிந்தவர்.
"இந்த துலா லக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான 1,5,9-ல் சூரியன் நிற்கப் பிறந்த ஜாதகருக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால் கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது தசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவையாகும். இதுவே குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெற எடுத்துச் சொன்னேன்” என்று துலாத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விளக்குகிறார். துலா லக்கினகாரர்கள் வசீகர தோற்றம், பொன் ஆபரணம், கட்டட நிபுணர்கள், ஆடம்பரம், வீடு, வாகனம், வைரம், வெள்ளி, விவசாயம், புத்திசாலி, ஒழுக்கம், கலை, கேளிக்கை, காமம், இரும்பு தொடர்பான துறை, வியாபாரம், இனிமையான குரல், பேராசை கொஞ்சம் வெளிப்படும், சகோதரர்/ நண்பர்களால் சந்தோசம், குழந்தைகள் மேலுயர உதவுவார்கள், அமைதியான முயற்சி, பல்வேறு வேலை மாற்றம், பல்வேறு படிப்பு, பயணத்தில் ஆர்வம், குடும்ப உறுப்பினர்களுடன் எடைபோட்டுப் பழகுவார், அழகிய கவர்ச்சியானவர், வெற்றியாளர் மற்றும் மற்றவர்களால் நன்மை பெற முடியாத துரதிஷ்டசாலி.
சுக்கிரன் பாதிப்பு ஏற்பட்டால் கிட்னி பாதிப்பு, தொற்று, வாத நோய், கபம், கன்னத்தில் பொறி, தோல் மாற்றம், வெடிப்பு, பார்வை பாதிப்புகளான, மாலைக்கண், நீர்க் கட்டி, கால்சியம் மற்றும் சோடியம் குறைபாடு, நீர் மூலம் பரவும் நோய்கள், சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பு, ஹார்மோன் பிரச்னை, உடல் பருமன், விந்தணு குறைபாடு, பிறப்புறுப்பு நோய், புண், அரிப்பு மற்றும் பால்வினை நோய்கள், நீர்ச்சத்து குறை, சுரப்பிகள், கால் வலி, சுக்கிலம் குறைபாடு, ஆறாத புண்கள், போதை வஸ்துக்கள் சாப்பிடுவதால் உடலில் பிரச்னை, முகப்பருக்கள் என்று எதாவது ஒரு நோய் இவரைத் தாக்கக்கூடும்.
பெரும்பாலும் பெண்களுக்கு அழுக்கு சேர்க்கை காரணத்தால் கருப்பையில் பிரச்னை, தோல், கொழுப்புக் கட்டிகள், மார்பக பிரச்னை, பற்களால் மருத்துவச் செலவு அதிகம் ஏற்படும். முக்கியமாக சுக்ரன் 3ல், பாதகாதிபதி பார்வை, பகை கிரக சேர்க்கை தொடர்பு பெற்றால் சிறுநீர் துர்நாற்றம் இருக்கும். இவர்களுக்கு சனி செவ்வாய் சந்திரன் நன்றாக இருந்தால் ரத்த சோகை ஏற்படாது.
துலா ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், பழைய ஸ்ரீரங்கம் என்று கூறப்படும் ஆதிதிருவரங்கம் ரங்கநாத சுவாமி, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், அத்திவரதர், கோழி குத்தியில் உள்ள வானமுட்டி பெருமாள் கோயில் மற்றும் சுக மகரிஷி வழிபாடு சிறப்பை தரும்.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com
இதையும் படிக்க: கேட்டதை அள்ளித்தரும் அபிஜித் முகூர்த்தம்: சூட்சும ரகசியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.