ஜோதிடம் 
ஜோதிட கட்டுரைகள்

ஜாதகம் பார்ப்பதில் ஜோதிடருக்கான சிக்கல்கள் என்னென்ன?

ஜாதகம் பார்ப்பதில் ஜோதிடருக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றி இக்கட்டுரையில்..

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

ஜோதிடர் ஒருவர் ஜாதகம் பார்க்கும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள், கிரகங்கள், தசா புத்தி, குறிப்பிட்ட கிரக சேர்க்கைகள் மற்றும் அவற்றின் பலன்களைத் துல்லியமாகக் கணிக்க வேண்டிய தேவை, மேலும் ஜாதகத்தைப் புரிந்துகொள்ள நீண்ட அனுபவம் மற்றும் வாடிக்கையாளரின் பல நோக்கங்களையும் அறிந்து அதற்கேற்ப பலன் சொல்ல வேண்டிய சவால் போன்றவை உள்ளது.

கணிப்பு சார்ந்த சிக்கல்கள்

கிரகங்களின் நிலைகளைச் சரியாகக் கணித்தல்: ஒரு கிரகம் எந்த வீட்டில் உள்ளது, எந்த ராசியில் உள்ளது, என்ன நட்சத்திரத்தில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கணிக்க வேண்டும்.

தசா புத்தி பலன்களை நிர்ணயித்தல்: நடக்கவிருக்கும் சம்பவங்களை நிர்ணயிப்பதில் தசா புத்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, இதை சரியாக கணிப்பது ஒரு சவாலான பணியாகும்.

பிறப்பு குறிப்புகளை மட்டும் பெற்று ஜாதகம் கணித்து பலன்களை ஆராய்ந்து சொல்வதால் காலதாமதம் ஏற்படவே செய்யும். ஆனால் சிலர் அவர்களின் அவசரத்திற்குக் கொண்டுவந்து தரும் ஜாதகங்களை வைத்து பலன் கேட்பதால் சில ஜோதிடர்களும் அப்படியே பலன் சொல்லிவிடுகிறார்கள். அதிலும் திருமண பொருத்தத்திற்கு நட்சத்திர பொருத்தங்களான 10 பொருத்தம் மட்டுமே பார்த்து முடிவெடுப்பது என்பது சரியாகாது. நிச்சயம் இருவருக்குமான கிரக ரீதியான பலன்களை ஆராய்ந்து, தோஷசாம்யம் போன்றவற்றை அறிந்து , தோஷ ஜாதகமாயின் அதற்கான எளிதான பரிகாரங்களை செய்து பின்னர்தான் பொருத்தம் பார்ப்பதில் முடிவெடுத்தல் நல்லது. இதில் அதிகமாக ஜாதகம் பார்பவர்களின் அவசரமே காரணம் என அறுதியிட்டுக் கூறிவிடமுடியும்.

பல கிரக சேர்க்கைகள்

சில சமயங்களில் பல கிரகங்கள் ஒரே பாவத்தில் சேர்ந்து பலன் தரும் நிலை இருக்கும், இது சிக்கலான பலன்களைத் தரும், இதை சரியாகப் புரிந்துகொள்வது கடினம்.

பலன் சொல்லும் முறை

ஜாதகம் பார்த்தால் என்ன பயன் என்ற கேள்வியை மனதில் கொண்டு, ஜாதகர் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளார் என்பதை அறிந்து அதற்கேற்ப பலன் சொல்ல வேண்டும்.

அனுபவம் மற்றும் திறன்கள்

நீண்ட கால அனுபவம்: ஜாதகத்தில் உள்ள கர்ம தாக்கங்களைச் சரியாக கணித்து, சரியான பலன் சொல்ல நீண்ட அனுபவம் மற்றும் ஆய்வும் அவசியம்.

நிச்சயமான பலன் கூற முடியாது: ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் அல்ல, மேலும் அதில் நிச்சயமான பலன் கூற முடியாது, இதையும் உணர்ந்திருக்க வேண்டும்.

ஜாதகத்தைப் புரிந்துகொள்ளுதல்: ஜாதகத்தில் கிரக நிலைகளையும், அதன் பலன்களையும் புரிந்துகொள்ள ஜோதிடரின் ஆழமான அறிவு அவசியம்.

ஜாதகம் கணிக்கும் முன் பார்க்க வேண்டிய சில விஷயங்கள் ..

சுய ஜாதகத்தில் சொந்த வீட்டில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தும் பொழுது, முழுமையாக தன்னுடைய ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவ பலன்களைத் தரும் நிலையில் இருக்கும். நற்பலன்களை அல்லது கெடுபலன்களை என்பதை ஆதிபத்தியம் பொறுத்தே அறிய முடியும். உதாரணமாக ஒருவருக்கு சிம்ம லக்னமாகி, ஏழில் சனி திக் பலம் அடைந்து, சுபர் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில், தன்னுடைய ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவ வழியில் வாழ்க்கைத் துணை, நட்பு கூட்டாளிகள் என பலதரப்பட்ட வகையிலும் ஜாதகருக்கு, ஏற்றுக்கொள்ள முடியாத பலன்களைக் கொடுத்து விடும்.

'மனிதர்களின் எதிர்காலம் பற்றிக் கூறும் ரகசியம்' என்னும் ஜோதிடக் கலை தொடக்கத்தில் அரசர்கள் பிரபுக்கள் குறு நில மன்னர்கள் போன்றவர்களுக்கே பயன்பாட்டில் இருந்தாலும், தற்காலத்தில் எங்கும் எதிலும் ஜோதிடக்கலை நுழைந்து விட்டது. மனிதர்களுக்கு ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு எதிர்கால பலன் கூறும் ஜோதிடம் எல்லோருக்கும் பலிதம் ஆகுமா? என்றால், 80 சதவிகிதம்தான் பலிதம் ஆகும்.

“மனிதர்களின் பிறப்பு, இறப்பு, அமையும் புத்திரர்கள், ஒருவரது அந்தரங்கம் பற்றி துல்லியமாகக் கூறிவிடமுடியாது. கால நேரத்தை குறிக்கும்போது, 'தி டைம் ஸ்லிப்' என்று கூறுவதுபோல ஜோதிடத்தின் பலன்களும் சில வேளைகளில் தவறி விடுவதும் உண்டு. அவ்வாறு பலன்கள் தவறி விடும்போது ஜோதிடமே தவறு என்று கூறிவிடக் கூடாது. கால நேரம், கிரகங்கள் சுழற்சி இதனை ஈர்க்கும் சக்தியாக இருக்கும். நமது பூமியின் சுற்று வட்டப்பாதை இவற்றில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் தவறி விடக்கூடும்.

ஜோதிட பலிதம் ஆகாத கிரக நிலைகள்

* நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிதமாகாது.

* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில், சாக்கடை ஓரங்களில் வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.

* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், ஜோதிடம் பலிக்காது.

* லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.

வேறு சில அமைப்புகள்

* கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் வாழ்வில் கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்க முடியாத நிலையே உருவாகும். இவர்களுக்கும் ஜாதகம் சொன்னால் பலிதம் ஆகாது.

* கேதுவை நோக்கி எல்லா கிரகங்களும் சென்றுகொண்டே இருந்தால், என்னதான் யோகம் இருந்தாலும், கைகூடாமலே போகும். தக்க சமயத்தில் இவர்களது மதியைக் கெடுத்து விடுவான். 'நல்லாதான் எல்லாத்தையும் செய்து கொண்டு இருந்தான். கடைசிநேரத்துல ஏன்தான் அவன் குணம் அப்படி போச்சுன்னே தெரியவில்லை' என சொல்வதை நாம் சில சமயம் கேட்டிருப்போம். அதற்குக் காரணம் இதுபோன்ற அமைப்புதான். இவர்களுக்கும் நல்ல வாக்கு, நல்ல அறிவுரைகள் என எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏன், முறையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்தால்கூட பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

* அமாவாசை திதியில் பிறந்து சூரியன்-சந்திரன்-சனி ஆகிய கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது சூரியன், சந்திரன்-சனி இவர்கள் நீசம் பெற்றாலோ அழுக்கு நிறைந்த உடைகளுடன் பிச்சைக்காரராகச் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.

* அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தாலும், அல்லது இவர்கள் அனைவரும் ராகு கேது நட்சத்திர சாரம் பெற்றாலும், இவர்களுக்கு ஜோதிடம் பலிதம் ஆகாது.

ஜோதிட ரீதியாக உள்ள ஒரே பரிகாரம்

ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும். பிரதோஷ வழிபாடு சகல தோஷத்துக்கு வழிபாடாக இருக்கும்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் என்று ஒன்றுமே இல்லாததற்கு அனைவரும் பயப்படுவதும் சிலர் அதற்கு முக்கியத்துவம் தந்து மற்றவற்றைக் கோட்டை விடுவதும் உண்டு. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் சில சமயம் பலன் தவறுவதும் உண்டு , காரணம் பார்க்கும் ஜோதிடருக்கே கேதுவின் தசை, புத்தி , அந்தரம் நடக்கும்போது சுத்தமாக கண்ணில் படாமல் போவதும் உண்டு.

திருமண பொருத்தத்தின்போது முக்கியமாகக் காண வேண்டியது "தோஷ சாம்யம்" ஆகும். இதனை இங்கு அதிகம் பேர் பார்ப்பதில்லை. வட இந்தியாவில் அதிகம் பார்க்கிறார்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை எந்தெந்த இடத்தில் அதாவது பாவத்தில் நின்றால் எவ்வளவு தோஷம் தரும் , லக்கினத்தில் இருந்து, சந்திரனிலிருந்து மற்றும் சுக்கிரனின் இருந்து இவற்றைக் காணுதல் அவசியம். இது ஒரு தனி ஜோதிட கணிதம் போன்றது.

இதனை ஆணின் ஜாதகம் கொண்டும் , பெண்ணின் ஜாதகம் கொண்டு அறிந்து பெண்ணுக்கு அதிக எண்ணிக்கையில் தோஷம் இல்லாமல் இருந்தால் இருவரையும் சேர்த்து வைக்கலாம். இது சற்று கடினமான செயல் என்பதால் இதனை ஜோதிடர்கள் தள்ளி விடுவதும் உண்டு. முக்கிய காரணம் என்னவென்றால், பொருத்தம் ஒரு ஜோதிடரிடம் பார்க்க வரும்போதே மற்ற விஷயங்களைத் தீர்மானித்து ஏதோ ஜோதிடர் கருத்துக் கேட்கவே வருவதால் அவர்களின் அவசர நிலைக்கு இதெல்லாம் பார்ப்பதில்லை. திருமணமாகி குறிகிய காலத்தில் தம்பதியினரிடையே கருத்து பேதம் வந்து பிரிவினைக்கு வித்தான பின்னர் வழக்கு மன்றத்தில் காத்துக் கிடப்பது அதிகமாகிவிட்டது.

மேற்சொன்னவைகள் போல பலவற்றைக் கணித்து ஆராய்ந்து பலன் சொல்ல அதிக நேரம் காலம் நாள் ஆகத்தான் செய்யும், இதனை உணராமல் அவசரப்படுவது சரியாகாது தானே. தோஷ சாம்யம் மூலம் எதனால் தம்பதியினரிடையே கருத்து பேதம் வரும் என்பதனையும் முன்கூட்டியே அறிந்து சொல்லும் திறனை ஒரு ஜோதிடர் பெற்றிருப்பார். அதனாலே அவரின் தக்ஷிணையும் அதிகமாக இருக்கும் பலன் சொல்ல எடுக்கும் நேரமும் கால அவகாசமும் தாமதமாகலாம்.

ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர, முடிவு அல்ல. அதேபோல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல. பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்.

தொடர்புக்கு : 98407 17857 / 91502 75369

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார்!

ஆழ்மனதில் உன்னை வை... கீர்த்தி!

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

அதிமுக பற்றி பேச விஜய்க்கு உரிமையில்லை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

வேடுவன் டிரைலர்!

SCROLL FOR NEXT