பிரபலங்கள் - புத்தகங்கள்

ரமாபாயின் வாழ்க்கையும் காலமும்: மறைக்கப்பட்ட நாயகி! - மைதிலி சிவராமன்

மைதிலி சிவராமன்

ஈராண்டுக்கு முன்பு உமா சக்ரவர்த்தி எழுதிய ‘ரமாபாயின் வாழ்க்கையும் காலமும் – வரலாற்றைத் திருத்தி எழுதுவது’ (Rewriting History – The life and times of pandit Ramabai – Kali for Women, 1998) என்ற புத்தகத்தைப் படித்தபோது மெய்சிலிர்த்தேன். யான் பெற்ற இன்பம் கதிர் வாசகர்கள் பெற இச்சிறு அறிமுகம் உங்கள் முன்.

மகாராஷ்டிர சித்பவன் பிராமணக் குடும்பம் ரமாபாயினுடையது. புராணக் கதைகளை சொல்லி பிழைத்தவர் தந்தை. ஆனால் சமூகத் தடைகளையும் மீறி மனைவிக்கும், மகளுக்கும் சமஸ்கிருதம் கற்பித்தவர். ரமாபாய்க்கு குழந்தைத் திருமணம் செய்யாதவர்.

பஞ்சத்தில் தாய் தந்தையை இழந்தார் ரமாபாய். சகோதரனுடன் சிறிதுகாலம் வாழ்ந்து, அவரும் இறந்தபின் 20-வது வயதில் முதல்முறை கல்கத்தா வந்து உலகைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார். சமஸ்கிருத, சாஸ்திரப் புலமை பெற அவருக்கு இந்து மதச் சீர்த்திருத்தவதிகளான பிரம்ம சமாஜத்தினரிடையே நல்ல வரவேற்பு. அவரது பிரசங்கங்கள் அமோக வரவேற்பைப் பெற்றன.

கீழ் சாதியினருக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிப் பல அறிவார்ந்த கேள்விகள் அவருக்குள் எழுந்தது. 22 வயதில் ஒரு ’கீழ்’ சாதியினரை மணந்தார் ரமாபாய். இது சமூகத்தில் சூறாவளியைக் கிளப்பியது.

2 ஆண்டில் தாயாகி விதவையாகவும் ஆகிவிட்ட ரமாபாய், பொதுவாழ்க்கை ஈடுபாட்டைத் தொடர்ந்ததைச் சீர்திருத்தவாதிகளினால் ஜீரணிக்கமுடியவில்லை. ரமாபாய் புணே சென்று 1882-ல் பெண் கல்விக்காக ஆரிய மகிளா சபாவைத் தொடங்கினார். மேல் ஜாதி விதவைகளுக்கு இல்லம் துவங்கும் அவரது முயற்சியில் சீர்திருத்தவாதிகள் ஒத்துழைக்கவில்லை. ஆங்கிலம் கற்று இங்கிலாந்தில் மருத்துவ பயிற்சி பெற விரும்பினார் ரமாபாய். இதற்கு கிறிஸ்தவ மிஷினரிகள் உதவினர்.

இங்கிலாந்தில் சுய காலில் நிற்க விரும்பி மிஷினரிகளுக்கு மராத்தி கற்றுக் கொடுத்துப் பொருளீட்டினார். கிறிஸ்தவர்களின் ’வறியவர்க்குச் சேவை’ என்ற வலுவான அம்சம் அவரை ஆகாஷித்தது. சேவைக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டோரைக் கண்டு உற்சாகமடைந்து அவரும் கிறிஸ்தவரானார். ஆனால் அது பொருள் ஆசையினால் அல்ல.

இது பெரும் துரோகமாக அன்று பார்க்கப்பட்டது. ஸ்ரீ ராம கிருஷ்ணரும் விவேகானந்தரும் கூட அவரை விமர்சித்தனர். ஆனால், ஒருவர்  அறிவு மற்றும் உணர்வுப்பூர்வமாக எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான உரிமையை ஜோதிபாய் பூலே ஆதரித்தார். மகாராஷ்டிரத்தின் அன்றைய பிரபல சமூக சீர்திருத்தவாதி அவர்.

கிறிஸ்தவராகிவிட்ட ரமாபாய் மிஷினரிகளின் எல்லா செயல்களுக்கும் தலையாட்டிக் கொண்டிருக்கவில்லை. அன்றைய இங்கிலாந்தின் தேவாலயமும் இனப்பாகுபாடு, ஆணாதிக்கம் போன்ற பாரபட்ச உணர்வுகளால் பீடிக்கப்பட்டிருந்தது. தேவாலயத்து ஆண், பெண் உறுப்பினர்கள் சேர்ந்த வகுப்புகளில் ரமாபாய் மராத்தி மொழி, இந்து மதம் ஆகியவை பற்றி வகுப்புகள் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. ஆண்களுக்கு இந்தியப்  பெண் வகுப்பெடுப்பதை தேவாலயம் விரும்பவில்லை.

1886-ல் ரமாபாய் அமெரிக்கா சென்றார். இந்து விதவைகள் இல்லத்திற்கு நிதி திரட்டும் லட்சியம் அவரை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. சமூகக் காரணங்களுக்காக நிதி கேட்டு அமெரிக்கா சென்று பொதுவாழ்வில் ஈடுபட்டவகளில் முதல்வர் ரமாபாய்தான் என்கிறார் நூலாசிரியர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு விவேகானந்தர் அமெரிக்கா சென்றார். சிகாகோவில் உலக மதங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரை இன்றும் பிரசித்தமானது.

ஆனால் ஒரு நாளுக்கு 4 கூட்டம் என்ற ரீதியில் அமெரிக்காவில் 50 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து பல நூறு கூட்டங்களில் உரையாற்றிய ரமாபாய் பற்றிய செய்தி இன்று வரை மக்களுக்கு ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. காரணம் விவேகானந்தர் புராதான இந்தியாவின் பெருமை பற்றி பேசினார். ரமாபாய் 19-ம் நூற்றாண்டு இந்தியாவில் வாழும் பெண்களின் அடிமைத்தனத்தைப் பற்றி பேசினார். இந்த சமூக அவலங்களை வெளியில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்ற கருத்து இந்தியாவில் ஏற்பட்டது.

இந்த அவலம் பற்றி ஜாதி சமூகங்கள் கண்டு கொள்ளாத நிலையில் ரமாபாய்க்கு இது பற்றி பேசுவது தவிர வேறு வழியில்லை. இரண்டாண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பிய ரமாபாய் பம்பாயில் ’சாரதா சதன்’ என்ற விதவைகள் இல்லத்தை நிறுவினார். அதில் அனைத்து சாதிப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தனது இறுதிக் காலம் வரை தனது தனிமனிதச் சுதந்திரத்தைக் காத்துக் கொண்டார். மதப் பழைமைவாதிகளுக்கோ, காலனி அரசுக்கோ அவர் என்றும் தலை வணங்கவில்லை.

’அறிவிழந்தது பண்டை வழக்கம்’ என்றான் பாரதி. இருட்டை வீழ்த்திய பல அக்னிக்குஞ்சுகளில் பெருமளவுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டவர் ரமாபாய். அவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து பெண் விடுதலை பணியில் உத்வேகம் பெறுவோம். இத்தகைய நூல்களைத் தமிழில் கொண்டுவரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT