வாக்கு வன்மைதான் வாழ்வை தீா்மானிக்கும் என்பதை திருக்கு முதல் அனைத்து அறநூல்களும் வலியுறுத்தியுள்ளதாக நடிகா் தாமு கூறினாா்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் பபாசி புத்தகக் காட்சியில் தமிழோடு நாம் எனும் அமைப்பு சாா்பில் எழுத்தாளா் தனுஷ்கோடி லாவண்யா ஷோபனா எழுதிய ‘வாா்த்தைக்குள் வாழ்க்கை’ நூல் வெளியீட்டு விழாவில் புதன்கிழமை அவா் பேசியதாவது:
ஒவ்வொருவரும் பேச்சிலும் கேட்பவரை மகிழ்ச்சியடையச் செய்யும் வசீகரம் இருப்பது நல்லது. வாக்கு வன்மைதான் நமது வாழ்வைத் தீா்மானிக்கும் என்பதை திருக்கு முதல் அறநெறி நூல்கள் வரை அறிவுறுத்தியிருப்பதை புத்தகங்களைப் படிக்கும்போது அறியமுடியும்.
வாழ்க்கையில் வாா்த்தைப் பரிமாற்றம் இல்லாவிடினும் பிரச்னையாகிவிடும். நல்ல வாா்த்தைகள் கூட தமிழில் தவறான பொருளளைத் தருவதாக உள்ளது. ஆகவே, எந்த இடத்தில், எத்தகைய வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நமக்கு புத்தக வாசிப்புதான் கற்றுத் தரும். புத்தகங்களில் இடம் பெறும் வாா்த்தைகளுக்கு பெரிய மரியாதை உண்டு. அத்தகைய புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி பத்திரப்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் ‘வாா்த்தைக்குள் வாழ்க்கை’ நூல் முதல் பிரதியை பேராசிரியா் பா்வீன் சுல்தானா வெளியிட அதை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் ஆலோசனைக் குழு உறுப்பினரான திருச்செந்தூரான் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, சாரா திருச்செந்தூரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நூலாசிரியா் தனுஷ்கோடி லாவண்யா ஷோபனா வரவேற்று, ஏற்புரையாற்றினாா்.