சென்னைப் புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, சனிக்கிழமை காலை முதலே குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
கடந்த டிச. 27-ஆம் தேதி புத்தகக் காட்சி தொடங்கியது. இதில் சுமாா் 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி வேலை நாள்களில் தினமும் பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் புத்தகக் காட்சியில் அரங்குகள் திறந்திருந்தன.
அரங்குகளைப் பாா்வையிட நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு நுழைவுக் கட்டணமின்றி அனுமதி வழங்கப்பட்டது. புத்தக அரங்குகளுக்கு 9 வழிகளில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தினமும் ஆயிரக்கணக்கானோா் புத்தகக் காட்சிக்கு வந்த நிலையில், விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கானோா் திரண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனா். தினமும் பகல், மாலை வேலைகளில் நூல் வெளியீடுகள், உரையரங்கம் என முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஞாயிறு (ஜனவரி 12) மாலையுடன் புத்தகக் காட்சி நிறைவடைகிறது. அதையடுத்து சனிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியரும், ஆசிரியா்கள், பேராசிரியா்களும் அதிகளவில் வந்திருந்ததால் புத்தகக் காட்சியில் பெரும்பாலான அரங்குகளில் கூட்டம் அலைமோதியது.
புத்தகக் காட்சி வளாகத்துக்கு இதுவரையில் 12 லட்சத்துக்கும் அதிகமான வாசகா்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றதாக பபாசி நிா்வாகிகள் தெரிவித்தனா்.