வர்த்தகம்

வாராக் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் லாபம் 5 மடங்கு அதிகரிப்பு: எஸ்பிஐ

DIN

வாராக் கடன் பிரச்னை அதிகரித்துள்ள நிலையிலும், முதல் காலாண்டு லாபம் 5 மடங்கு உயர்ந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மஹிளா வங்கி ஆகியவை இணைக்கப்பட்டதையடுத்து எஸ்பிஐ முதல் முறையாக காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாட்டு வருவாய் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.25,612 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.27,007 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 5.17 சதவீதம் குறைவாகும்.
வங்கியின் கட்டண வருவாய் ரூ.4,190 கோடியிலிருந்து 16.21 சதவீதம் அதிகரித்து ரூ.4,870 கோடியாக இருந்தது. அதேசமயம், நிகர வட்டி வருமானம் ரூ.18,246 கோடியிலிருந்து 3.51 சதவீதம் சரிவடைந்து ரூ.17,606 கோடியாக காணப்பட்டது. அதேபோல, வட்டி அல்லாத வருமானமும் 8.62 சதவீதம் குறைந்து ரூ.8,006 கோடியாக காணப்பட்டது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வங்கியின் செயல்பாடு செலவினமும் 3.72 சதவீதம் உயர்ந்தது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி வழங்கிய கடனிலிருந்து பெறும் வட்டி வருமானம் ரூ.39,545 கோடியிலிருந்து 8.4 சதவீதம் குறைந்து ரூ.36,142 கோடியாக காணப்பட்டது. திரட்டிய டெபாசிட் 13.28 சதவீதம் அதிகரித்து ரூ.26,02,534 கோடியாக இருந்தது.
வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 7.40 சதவீதத்திலிருந்து (ரூ.1,37,662 கோடி) அதிகரித்து 9.97 சதவீதமாக (ரூ.1,88,068 கோடி) இருந்தது. நிகர வாராக் கடன் விகிதம் 4.36 சதவீதத்திலிருந்து உயர்ந்து 5.97 சதவீதமாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.374 கோடியிலிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.2,006 கோடியானது என்று எஸ்பிஐ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT