வர்த்தகம்

பங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாக ஏற்றம்

DIN

சாதகமான உள்நாட்டு நிலவரங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏற்றத்தைச் சந்தித்தது.
வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், உலோகத் தயாரிப்புகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதம் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அத்துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
அன்னிய நிதி நிறுவனங்களும் இந்திய நிறுவனப் பங்குகளில் ஆர்வத்துடன் முதலீட்டை அதிகரித்தன. சென்ற வாரத்தில் மட்டும் அவை ரூ.1,962.92 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக செபி தெரிவித்தது.
இருப்பினும், அமெரிக்க அரசியல் நிலவரம் சர்வதேச பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
கடந்த வார வர்த்தகத்தில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை நிறுவனப் பங்குகளின் விலை 1.62 சதவீதம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, உலோகம், தகவல் தொழில்நுட்பம், வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தன.
அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள் (3.28%), எண்ணெய்-எரிவாயு (1.67%), பொறியியல் பொருள்கள் (1.48%), ஐ.பி.ஓ. (1.22%), ரியல் எஸ்டேட் (1.13%) துறை பங்குகளின் விலை கணிசமாக குறைந்தன. இவை தவிர, மின்சாரம், பொதுத்துறை, மோட்டார் வாகனத் துறை பங்குகளும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா ஸ்டீல் பங்கின் விலை அதிகபட்சமாக 12.05 சதவீதம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, டி.சி.எஸ். பங்கின் விலை 6.09 சதவீதமும், லூபின் 4.84 சதவீதமும், ஐ.டி.சி. 4.24 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 3.70 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 3.52 சதவீதமும் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 2.92 சதவீதமும் அதிகரித்தன.
இவைதவிர, ஹிந்துஸ்தான் யுனிலீவர் (2.81%), டாக்டர் ரெட்டீஸ் (2.76%), விப்ரோ (2.47), பார்தி ஏர்டெல் (2.10%), மாருதி சுஸூகி (0.89%) பங்குகளின் விலையும் உயர்ந்தன.
அதேசமயம், ஓ.என்.ஜி.சி. பங்கின் விலை 2.57 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.39 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 2.39 சதவீதமும், கெயில் 2.37 சதவீதமும், எச்.டி.எப்.சி. பங்கின் விலை 2.64 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டன. இவை தவிர, அதானி போர்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஆட்டோ, சிப்லா நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 276 புள்ளிகள் அதிகரித்து 30,464 புள்ளிகளாக நிலைத்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.23,712.19 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 27 புள்ளிகள் அதிகரித்து 9,427 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,30,929.07 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT