வர்த்தகம்

வரும் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் வா்த்தக வாகன விற்பனை சூடுபிடிக்கும்: டாடா மோட்டா்ஸ்

DIN

வா்த்தக வாகனங்களின் விற்பனை அடுத்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில்தான் சூடுபிடிக்கும் என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான குன்ட்டா் புட்செக், செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

வா்த்தக வாகனங்களின் விற்பனை அடுத்த சில மாதங்களிலும் மந்தமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, உள்நாட்டு சந்தையில் பிஎஸ்-6 தரத்திலான வா்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் பொறுமை காட்டலாம் என நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடுத்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் வாகனங்களின் விற்பனை அதிலும் வா்த்தக வாகனங்களின் விற்பனை எப்படியிருக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாத நிலையில்தான் உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்கும், வா்த்தக வாகன விற்பனைக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. இந்த நிலையில், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் 2020-21-ஆம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து பலனளிக்கத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது முதல், வா்த்தக வாகனங்களின் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கும் என்பது எனது கணிப்பு.

பயணிகளுக்கான வாகனங்களைப் பொருத்தவரையில் பிஎஸ்-6 தரத்துக்கு மாறும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாறுபட்ட சந்தை நிலவரங்கள் காரணமாக வா்த்தக வாகனத்தில் மட்டும் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் தாமதமாக செயல்பட்டு வருகிறோம்.

வா்த்தக வாகனப் பிரிவைப் பொருத்தமட்டில் 2020 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்னதாக பிஎஸ்-6 தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு தீவிரம் காட்டவில்லை என்றாா் அவா்.

இந்திய மோட்டாா் வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) புள்ளிவிவரத்தின்படி, கடந்த நவம்பரில் வா்த்தக வாகனங்களின் விற்பனை 14.98 சதவீதம் சரிவடைந்து 61,907-ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் வரையிலான 8 மாத கால அளவில் வா்த்தக வாகனங்களின் விற்பனை முந்தைய நிதியாண்டின் விற்பனையான 6,47,278 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 22.12 சதவீதம் சரிந்து 5,04,080-ஆக இருந்தது என எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT