வர்த்தகம்

முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 1.85% அதிகரிப்பு

DIN

இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு  போக்குவரத்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் 1.85 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்கள், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்தில் 29.38 கோடி டன் அளவிலான சரக்குகளை கையாண்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் இத்துறைமுகங்கள் கையாண்ட 28.84 கோடி டன் சரக்குகளுடன் ஒப்பிடும்போது இது 1.85 சதவீத வளர்ச்சியாகும்.
துறைமுகங்கள் கையாண்ட பல்வேறு சரக்குகளின் அளவு அதிகரித்துள்ள போதிலும், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.
மொத்தமுள்ள 12 முக்கிய துறைமுகங்களில், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு அதிகபட்சமாக 9 சதவீத வளர்ச்சியை எட்டியது. இதைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் துறைமுகம் (7.63 சதவீத உயர்வு), தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் (7.29%) ஆகியவை உள்ளன.
இவைதவிர, கொல்கத்தா துறைமுகம் கையாண்ட சரக்கு (ஹால்டியா உள்பட) 6.73 சதவீதமும், தீனதயாள் துறைமுகம் 5.39 சதவீதமும், பாரதீப் 4.86 சதவீதமும், மும்பை 2.83 சதவீதமும், ஜேஎன்பிடி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 0.45 சதவீதமும் அதிகரித்துள்ளன. 
அதேசமயம்,  மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு கணக்கீட்டு காலத்தில் அதிகபட்சமாக 21.30 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 12.37 சதவீதமும், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 7.12 சதவீதமும், எண்ணூர் காமராஜர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 5.18 சதவீதமும் குறைந்துள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், அளவின் அடிப்படையில் தீனதயாள் துறைமுகம் 5.15 கோடி டன் சரக்கை கையாண்டு முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பாரதீப் (4.69 கோடி டன்), விசாகப்பட்டினம் (2.89 கோடி டன்) ஆகிய துறைமுகங்கள் உள்ளன என்று இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய 12 துறைமுகங்கள் தவிர்த்து, 7,517 கி.மீ. நீளமுள்ள கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் 187 சிறிய துறைமுகங்களும் செயல்பாட்டில் உள்ளன.
நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை, தீனதயாள், மும்பை, ஜேஎன்பிடி, மர்மகோவா, மங்களூர், கொச்சி, சென்னை, காமராஜர், வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா (ஹால்டியா உள்பட) ஆகிய 12 முக்கிய துறைமுகங்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT