இந்தியாவில் தங்கத்தின் தேவை 36 சதவீதம் சரிந்தது: உலக தங்க கவுன்சில்
நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தியதன் விளைவாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில்
மும்பை: நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தியதன் விளைவாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 36 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் (இந்தியா) நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் கூறியுள்ளதாவது:
பொருளதார நிச்சயமற்ற சூழல், விலையில் காணப்பட்ட ஏற்ற இறக்கம், தேசிய ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் தேவை அளவின் அடிப்படையில் நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 36 சதவீதம் சரிவடைந்து 101.9 டன் ஆனது. மதிப்பின்அடிப்படையில் தங்கத்தின் தேவை ரூ.47,000 கோடியிலிருந்து 20 சதவீதம் குறைந்து ரூ.37,580 கோடியானது.
மதிப்பீட்டு காலாண்டில், மொத்த ஆபரணங்களுக்கான தேவை கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 125.4 டன்னிலிருந்து 41 சதவீதம் குறைந்து 73.9 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.37,070 கோடியிலிருந்து 27 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.27,230 கோடியானது.
Advertisement
ஆபரண தேவை மற்றும் தங்கம் முதலீட்டுக்கான தேவை முதல் காலாண்டில் கணிசமான அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. எனவே, இத்துறைக்கு 2020 ஒரு சவாலான ஆண்டாகவே இருக்கும்.
கடந்த 2019 ஜனவரி- மார்ச் காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை ரூ.29,555 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 25 சதவீதம் உயர்ந்து ரூ.36,875-ஐ தொட்டது.
நடப்பு 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை 1 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,083.8 டன்னாக இருந்தது. இது, 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் 1,070.8 டன்னாக காணப்பட்டது என்றார் அவர்.