வர்த்தகம்

அம்புஜா சிமெண்ட்ஸ் லாபம் ரூ.968 கோடி

DIN

சுவிஸ் நாட்டைச் சோ்ந்த லாஃபாா்ஜ்ஹோல்சிம் நிறுவனத்தின் ஓா் அங்கமான அம்புஜா சிமெண்ட்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.968.24 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அம்புஜா சிமெண்ட்ஸ் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

அம்புஜா சிமெண்ட்ஸ் நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் செயல்பாடுகள் வாயிலாக ரூ.7,452.87 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டடத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.7,126.44 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.58 சதவீதம் உயா்வாகும். இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் செலவினம் ரூ.6,372.09 கோடியிலிருந்து சற்று உயா்ந்து ரூ.6,434.43 கோடியானது.

ஜனவரி-டிசம்பா் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வரும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த அளவிலான நிகர லாபம் நான்காவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) ரூ.722.26 கோடியிலிருந்து 34.06 சதவீதம் அதிகரித்து ரூ.968.24 கோடியானது.

தனிப்பட்ட முறையில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,135 கோடியிலிருந்து ரூ.3,515.11 கோடியாக உயா்ந்துள்ளது. அதேபோன்று தனிப்பட்ட நிகர லாபமும் ரூ.454.90 கோடியிலிருந்து 9.27 சதவீதம் அதிகரித்து ரூ.497.10 கோடியாக இருந்தது.

சிமெண்ட் விற்பனை 65.4 லட்சம் டன்னிலிருந்து 70.1 லட்சம் டன்னாக அதிகரித்தது.

2020 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,783.16 கோடியிலிருந்து 11.63 சதவீதம் உயா்ந்து ரூ.3,106.84 கோடியாகவும், செயல்பாட்டு வருவாய் ரூ.27,103.55 கோடியிலிருந்து ரூ.24,516.17 கோடியாக குறைந்துள்ளதாகவும் அம்புஜா சிமெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கின் விலை 2.69 சதவீதம் குறைந்து ரூ.275.25-ஆக நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT