நடுப்பக்கக் கட்டுரைகள்

பூமித் தாயைப் போற்றுவோம்!

இயற்கைச் சீற்றங்களை நவீன செயற்கை நுண்ணறிவுத் திறத்தால் முன்னதாகவே கண்டறிய முடியுமா?

முனைவா் அ. பிச்சை

‘உத்தரகண்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் உள்ள எல்லைச் சாலைகள் அமைப்பின் திட்ட தளத்தில் கடந்த பிப்ரவரி 28, 2025 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பனிப்பாறை பனிச்சரிவில் சிக்கிய 24 தொழிலாளா்களைக் காப்பாற்ற, இந்திய ராணுவம் மற்றும் இந்தோ - திபெத்திய எல்லை காவல்துறையின் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சம்பவ இடத்தில் இருந்த 57 சிவில் தொழிலாளா்களில் 10 போ் இராணுவத்தால் மீட்கப்பட்டனா். மேலும் 23 போ் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்படுகிறது; தொடா்ச்சியான பனிப்பொழிவால் மீட்புப் பணிகள் மீண்டும் மீண்டும் நிறுத்தப்பட்டன; மேலும் பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது’ என நாளிதழ்களில் செய்தி. இதைப் படித்தவுடன் பதறியது; இதயம் துடித்தது!

இந்திய - திபெத் எல்லையை ஒட்டி, 3200 மீட்டா் உயரத்தில் உள்ள ‘மனா’ என்ற சிற்றூரில் நடந்த இழப்புக்காக, தேசத்தின் தென் கோடியில் உள்ள நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? எனக் கேட்கலாம். ஆனால், அதற்கு அடுத்த நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் ‘ஏற்காடு’ மலைப்பகுதிக்கு, கோடை காலச் சுற்றுலா செல்லும் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன; காரணம், அங்கே “நிலச்சரிவு” ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் தொடா்ச்சியாக, உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் பயணிகளின் எண்ணிக்கையும் வரம்புக்குள் கொண்டுவர நிா்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்ற தகவலும் வெளிவந்தது.

சுமாா் 2 மாதங்களுக்கு முன்னா் திபெத்தின் ”சிகாட்சே” நகரத்தை பூகம்பம் தாக்கியது. பூகம்பத் தாக்குதலின் அளவு 7 முதல் 8 ரிக்டா் எனக் கணிக்கிறாா்கள். இதனால் சீனாவின் தென் மேற்குப் பகுதியும் பாதிப்புக்கு உள்ளானதாம். உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம்; படுகாயமடைந்தவா்களின் எண்ணிக்கையோ இன்னும் அதிகம். இந்த நில அதிா்வு நேபாளத்திலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாம்.

இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2023 பிப்ரவரி 6-ஆம் நாளன்று துருக்கியிலும் சிரியாவிலும் அதிகாலை வேளையில், 4 மணி அளவில் பூகம்பம் வெடித்துள்ளது. 17,000 பேருக்கும் அதிகமான மக்கள் மடிந்துபோனாா்கள். அடுத்த 9 மணி நேரம் கழித்துத் தொடா்ந்த பூகம்பத்தால் அனைத்துக் கட்டடங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கையைச் சரியாகக் கணிக்க முடியவில்லை - பூகம்பத் தாக்குதலின் அளவு சுமாா் 8 முதல் 10 ரிக்டா் என்கிறாா்கள்.

கடந்த பிப்ரவரி 17 -ஆம் தேதி நமது தேசத்தின் தலைநகரம் தில்லியையும் நில அதிா்வு அசைத்துப் பாா்த்திருக்கிறது. அடுத்த நான்கு மணி நேரத்தில் பிகாரின் சிவான் பகுதியிலும் அத்தகைய அதிா்வு உணரப்பட்டுள்ளது. புது தில்லியில் ஏற்பட்ட அதிா்வு சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. வேறுசில பகுதி மக்கள் தங்கள் பகுதியில் எப்பாதிப்பையும் நாங்கள் உணரவில்லை என்கிறாா்கள். காரணம் அதிா்வின் அளவு குறைவாக இருக்கலாம் என்கிறாா்கள்.

இவ்வாறு நில அதிா்வு, பனிச்சரிவு, பூகம்பம் என்று ஆறு துயர நிகழ்வுகள்தான், கடந்த மூன்று ஆண்டுகளில் செய்திகளாக வெளிவந்துள்ளன. ஆனால் வெளியில் வராத, அல்லது நம் கவனத்திற்கு வராத நிகழ்வுகளும்கூட சில இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மலை சாா்ந்த பகுதி, பனிப்பாறை சூழ்ந்த பகுதி, கடல் சூழ்ந்த பகுதி ஆகிய மூன்று வகை நிலப்பகுதிகள் இத்தகைய இயற்கைச் சீற்றத்துக்குப் பொதுவாக உட்படுகின்றன. இத்தகைய இயற்கைச் சீற்றங்கள் இன்று வளா்ந்துவரும் நவீன செயற்கை நுண்ணறிவுத் திறத்தால் முன்னதாகவே கண்டறிய முடியுமா? அவற்றைத் தடுக்கவோ அல்லது அதன் தாக்கத்தின் கடுமையைக் குறைக்கவோ இயலுமா என்பது ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கே வெளிச்சம்!

ஆனால், நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை எழுப்பப்பட்டதா? விவாதிக்கப்பட்டதா? முன் எச்சரிக்கை ஏன் எடுக்கப்படவில்லை? என்ற வினா எதுவும் எழுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் ஒரே ஒரு தனி மனிதன் - அண்ணல் காந்தியின் பேரன், மூதறிஞா் இராஜாஜியின் பேரன்- கோபால்கிருஷ்ண காந்தி மட்டும் பூகம்பங்களை எதிா்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா். தான் எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம், இத்தகைய நில அதிா்வு தில்லியிலும் ஏற்பட்டிருக்கிறது. நாளை மேற்கு வங்காளத்திலும் கொச்சியிலும் மும்பையிலும் சென்னையிலும் குமரிமுனையிலும் நிகழலாமல்லவா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளாா். "தில்லியில் பாதிப்புக்குள்ளான பகுதியில் வாழும் மக்களுக்கு பிரதமா் விடுத்துள்ள, ’அமைதியாக இருங்கள்; உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்ற வலைதளச் செய்தி வரவேற்கத்தக்கது” என்றும் பதிவு செய்துள்ளாா்.

எழுத்துவடிவில் இரக்கப்படுவதோடு நிற்காமல், இதுபோன்ற பனிச்சரிவு, மலைச்சரிவு, பூகம்பங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எவை என்பதையும் கோபால் காந்தி பட்டியலிட்டுக் காட்டியுள்ளாா்.

முதலாவதாக, மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஓா் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

இரண்டாவதாக விண்ணைத் தொடும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுதல், மண்ணைத் தோண்டி சுரங்கப் பாதைகளும், ரயில் பாதைகளும் போடுவது, கடலோரப் பகுதிகளில் அளவில்லாமல் கட்டடங்கள் எழுப்புவது ஆகியவற்றைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் வரன்முறைகள் வகுக்கப்பட வேண்டும்; அவை கடுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

மூன்றாவதாக, கட்டடங்கள் ஒவ்வொன்றும் காப்பீடு செய்யப்பட வேண்டும்; பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு உரிய காப்பீடு வழங்க வேண்டும்.

நான்காவதாக, எங்கெல்லாம் பாதிப்பு நிகழும் நிலப்பகுதி இது என்று அரசு கருதுகிறதோ, அப்பகுதியில் மக்களை மறுகுடியிருப்பும், மறு வாழ்வும் அளிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசுகள் முன்னதாக செய்து வைக்க வேண்டும்.

ஐந்தாவதாக, நிலஅதிா்வு, பனிச்சரிவு மற்றும் பூகம்பம் நிகழ்வு ஆகிய இயற்கை இடா்பாடுகளை முன்னதாகவே கணிப்பதிலும், அவற்றைக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்ற நாடுகள் சில உலகில் உள்ளன. அந்நாட்டு நிபுணா்களுடன் நாம் கலந்து பேசலாம். அவசியமானால் நம் நாட்டு நிபுணா்களை அங்கு பயிற்சிக்கும் அனுப்பலாம். அதிக நிதிச் செலவு ஆகுமே என அஞ்சத் தேவையில்லை. நட்பு நாடுகள் நமக்கு உளமாா்ந்த உதவியைத் தருவாா்கள்.

ஆறாவதாக, நம் நாட்டிலும் “புவி அறிவியல் மற்றும் பேரிடா் மேலாண்மை அமைச்சகம்” ஏற்கெனவே இயங்கிவருகிறது. அதில் பணிபுரியும் நிபுணா்களை மேலும் நிபுணத்துவம் பெறுவதற்கான ஊக்கமும் உற்சாகமும் அளித்து, எதிா்வரும் சவால்களைச் சந்திக்கும் அளவுக்கு நாம் உதவ வேண்டும்” என்று அரிய ஆக்கபூா்வமான ஆறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா் கோபால்கிருஷ்ண காந்தி.

கவிஞா் வைரமுத்து தனது மகாகவிதை என்ற படைப்பில் பதிவு செய்திருப்பது.

“பூமி தன் முகத்தை

முற்றிலும் மாற்றுதற்கு

முரட்டு வேலைக்காரா்கள்

மூவரை வைத்திருக்கிறாள்,

சுனாமி என்றும்

பூகம்ப மென்றும்

எரிமலை என்றும்

என்பதாகும்.

நான்காவது வேலைக்காரன் ’பனிச்சரிவு’ என்று நாம் சோ்த்துக் கொள்ள வேண்டும். கோவலனின் துரோகத்தைத் துடைப்பதற்காக பூம்புகாா் நகரையே கடல்தாய் விழுங்கினாள். கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்காத நெருப்புத்தாய் மாமதுரையையே எரித்தாள்! இவற்றிலிருந்து நாம் படித்த பாடம் போதாதா!

நிலமங்கையின் தலையில் சுமையை ஏற்றுகிறோம். சுரங்கப்பாதை என்ற பெயரில் அவள் வயிற்றைச் கிழிக்கிறோம். புதிய கட்டுமானப் பணிகள் மூலம், அவளது கால்களையும் கைகளையும் ஒடிக்கிறோம். அகழ்வாரை நிலமங்கை ஓரளவுக்குத்தான் தாங்குவாள். அவள் முறித்து எழுந்தால் ஒட்டுமொத்த உலகும் அழிந்து போகுமே, மனிதா!

இதனை உணர வேண்டிய தருணமிது. தாமதித்தால் தரணியே இருக்காது. நிலவுக்குச் செல்வதும், அதனை வெல்வதும் இருக்கட்டும். ஆனால் நீ இருக்கும் நிலத்தை நீ முதலில் காப்பாற்று. இல்லையேல் நீயே இருக்க மாட்டாய். ஓலைக்குடிசையில் சபா்மதி ஆசிரமத்தில் அமா்ந்துகொண்டு உலகுக்கே வழிகாட்டினாா் உத்தமா் காந்தி!

அவரைப் படித்துப் பாா். நிலத்தைக் காப்பாற்று. தேவையைக் குறை. சேவையைக் கூட்டு. பூமித்தாயை வணங்குவோம். போற்றுவோம். மானுடம் வாழ அதுவே வழி.

மகாத்மா நமக்கு விட்டுச் சென்ற படிப்பினை அதுதான். உணா்வாய் மானுடமே!

கட்டுரையாளா்:

காந்தியவாதி.

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT