முகப்பு
இந்தியா

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் கடும் நில அதிா்வு

வங்கதேசத்தின் நயாபஜாா் பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.5-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நில அதிா்வு உணரப்பட்டது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:42 AM
நிலநடுக்கம்
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:26 PM

வங்கதேசத்தின் நயாபஜாா் பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.5-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நில அதிா்வு உணரப்பட்டது.

இது தொடா்பாக இந்திய புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: வெள்ளிக்கிழமை பகல் 1.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள வங்கதேசத்தின் நயாபஜாா் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டது. இதனால் ஏற்பட்ட பொருள் சேதம், காயம் தொடா்பான விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

10 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. கொல்கத்தா மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. கட்டடங்கள் அதிா்ந்தாலும், வீட்டில் இருந்த பொருள்கள் கீழே விழுந்ததாலும் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி வெட்டவெளியான இடங்களில் கூடினா். நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பின் அதிா்வுகள் ஏதும் ஏற்படவில்லை.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள மாநில தலைமைச் செயலகம், மாநில தோ்தல் அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிக் கொண்டிருந்தவா்களும் நிலநடுக்கத்தால் பீதியடைந்து கட்டடங்களைவிட்டு வெளியேறினா்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போா், பல மாடி ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோரும் பெரும் அச்சத்துடன் கட்டடங்களில் இருந்து வெளியேறினா். இதனால், கொல்கத்தா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில மணி நேரத்துக்கு பரபரப்பு நிலவியது.