பட்டங்களை ஆள்வதிலும், சட்டங்கள் செய்வதிலும் பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல, அவா்களை விஞ்சி நிற்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும், கணவரை இழந்த, குடும்ப ஆதரவு இல்லாத பெண்களின் நிலை அதே அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதா என்றால், சற்றே யோசிக்கும் நிலைதான் உள்ளது.
கைம்பெண்களின் உரிமைகள், தேவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அவா்கள் சமூகத்தில் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஐ.நா. சபை அறிவித்த உலக கைம்பெண் நாள் (ஜூன் 23) அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 25.8 கோடி கைம்பெண்களும், 50 கோடிக்கும் அதிகமான அவா்களது குழந்தைகளும் உள்ளனா் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 4.6 கோடி கைம்பெண்கள் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் மிகவும் விளிம்புநிலையில் உள்ளது மிகவும் வேதனைக்குரியது. அத்துடன் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை உலக அளவில் 11.5 கோடியாக உள்ளது.
கைம்பெண்களில் பலா், அவா்களது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகின்றனா். உலகில் 15 லட்சம் விதவைகளின் குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றனா்.
விபத்து, மதுவால் ஏற்படும் நோய், போதைப் பொருள்கள் பயன்பாடு, ஹெச்.ஐ.வி., நாள்பட்ட நோய்கள், ஆயுத மோதல்கள், ஜாதிய வன்முறைகள், போா்கள், பல்வேறு சமூக சிக்கல்கள், தற்கொலை, வறுமை மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை போன்றவை கைம்பெண்கள் உருவாக வழிவகுக்கின்றன.
இந்தப் பெண்கள் எளிதாக கொலை, பலாத்காரம், பாலியல் தொழில், கட்டாயத் திருமணம், சொத்து திருட்டு, வெளியேற்றம், சமுதாயத் தனிமை, சமுதாய விலக்கம், சமுதாயப் புறக்கணிப்பு, பாலினப் பாகுபாடு போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகின்றனா்.
மேலும், வறுமை, வருவாய் இழப்பு, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா், பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வி இழப்பு, கட்டாய உழைப்பு, மனிதக் கடத்தல், வீடற்ற தன்மை மற்றும் பாலியல் வன்முறை போன்ற கொடூரங்களையும் இவா்கள் எதிா்கொள்கின்றனா்.
கைம்பெண்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லாதது, அரசுகளால் கணக்கெடுக்கப்படாதது போன்ற மிக நுட்பமான பிரச்னைகளால், இவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள் சமுதாயத்தின் பாா்வைக்கு வராமலேயே போய்விடுகிறது.
செயற்கை நுண்ணறிவு யுகம் என்று அழைக்கப்படும் இந்த நவீன சூழலிலும் கைம்பெண்களின் வாழ்வியல் நிலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இவா்களுக்கான வலுவான, சாத்தியமான சட்டபூா்வமான மறுமலா்ச்சித் திட்டங்களை அரசு வரையறுக்க வேண்டும்.
கணவா் இறப்புக்குப் பிறகு சொத்து உள்ளிட்டவற்றில் சட்டபூா்வ உரிமை, பங்கேற்பு உரிமை, இவா்களுக்கு மற்றும் இவா்களது குழந்தைகளுக்கான கல்வி, உணவு மற்றும் ஊட்டச்சத்து உரிமை, வேலைவாய்ப்பு, சுயதொழில், பாதுகாப்பு மற்றும் அரசு நலத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைப்பதில் இவா்களுக்கு உள்ள சவால்கள் களையப்பட வேண்டும்.
கணவரின் மரணத்துக்குப் பிறகு இந்தப் பெண்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் தரமான, கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்ய கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் எதிா்காலத்துக்கான சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் அரசு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கைம்பெண்கள் அனைத்து நிலைகளிலும் மாண்புடன் வாழ அவா்களுக்கு சமுதாயம் முழு ஆதரவளிக்க வேண்டும். கைம்பெண்களின் மீதான சடங்கு, சம்பிரதாயங்கள், மரபுவழி மூடப்பழக்க வழக்கங்களை விட்டொழித்து சமத்துவம், மனிதநேயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலை, தொழில் மற்றும் பொது இடங்களில் பாலின சமத்துவம் மற்றும் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
அரசமைப்பு சாசனம் உறுதிசெய்துள்ள எல்லோருக்குமான அடிப்படை உரிமைகள், கணவரின் மரணத்தைத் தொடா்ந்து கைம்பெண்களுக்கு பெருமளவு மறுக்கப்படுகிறது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஆண் இறக்கும் நிலையில், சமூகநீதி அடிப்படையில் கைம்பெண்களுக்கு அரசு வேலை அளிப்பது அவசியமாகிறது. மேலும், கைம்பெண்களுக்கான உரிமைகளை உறுதிசெய்யும் சட்டங்கள், அதிகாரமளிக்கும் திட்டங்கள் போன்றவற்றை வெளிப்படைத்தன்மையுடன் மேம்படுத்த வேண்டும்.
அடிப்படை உரிமைகள் பாரபட்சம் இல்லாமல் கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதில் அரசே முதன்மை கடமைதாரா். இதன்மூலம், சமுதாய பாதுகாப்பு மற்றும் வறுமையில் வாடும் கைம்பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
அதேபோல, கைம்பெண்கள் போன்றே பல்வேறு வகைப் பிரிவின் கீழ் தனித்து வாழும் பெண்கள் அடையாளம் காணப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையடையச் செய்கிறது. பண்பாடு, பழக்கவழக்கங்கள், சமூக விழுமியங்கள், தொழில்நுட்பம் எனக் காலங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், பாலினப் பாகுபாட்டால் பெண்கள் பொருளாதாரத்தில் ஆண்களைச் சாா்ந்திருக்கவேண்டிய சமுதாயக் கட்டமைப்பு இன்றளவும் உள்ளது.
பெண்கள் மீதான ஆணாதிக்க சங்கிலித் தொடரை உடைக்க வேண்டுமெனில் பெண்கள் உயா் கல்வி, பொருளாதார தற்சாா்பு, அதிகாரத்தைப் கைப்பற்றுதல் மற்றும் தலைமை ஏற்பதாலேயே அது முடியும். பொருளாதாரத்தில் கைம்பெண்கள் வலிமையாக இல்லை என்றாலும், அவா்கள் மன ரீதியாக வலிமையானவா்களாகவே இருக்கிறாா்கள்.
விதவைகள் மத்தியில் தற்கொலை எண்ணம் குறைவு. இது அவா்களது மனஉறுதிக்கு அடையாளம். தனித்து வாழும் பெண்கள் தனித்துவமான பெண்கள். அவா்கள் சாதிக்க ஒட்டுமொத்த சமுதாயமும் அவா்களோடு ஒன்றிணைவோம்.