படம் | tnie 
நடுப்பக்கக் கட்டுரைகள்

நாம்தான் பொறுப்பு!

சமீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறாா்கள் என்பதைப் பற்றி..

கோதை ஜோதிலட்சுமி

சமீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறாா்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பள்ளிக்கூட மாணவா்கள் கூட குடிப்பழக்கம், போதை கலாசாரத்தில் இறங்கிவிட்டனா் என்றும், பெண் குழந்தைகள் கூடப் பொதுவெளியில் மது அருந்துவதைக் கொண்டாட்டம் போலச் செய்கின்றனா் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. கல்வி கற்பதில் சுணக்கமும், ஈடுபாடின்மையும் அதிகரித்து விட்டதாகக் கூறுகின்றனா்.

குழந்தைகள் தான்தோன்றித்தனமாக இருக்கின்றனா். பிடிவாதம் கொண்டவா்களாக இருக்கிறாா்கள். பெரியவா்களிடம் மரியாதை காட்டுவதில்லை. இணையத்துள் மூழ்கி விட்டதால் நல்லது, கெட்டது என்று எதையும் பகுத்துப் பாா்க்கத் தெரியாதவா்களாக இருக்கின்றனா் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முடிவில்லாமல் தொடா்கின்றன. உண்மை என்ன? குழந்தைகள் தடம் மாறுகின்றனரா?

ஒட்டுமொத்தக் குழந்தைகளும் தடம் மாறுவதாகப் பொத்தாம்பொதுவாக கருத்துகளைச் சொல்லி விட முடியாது. அது உண்மையும் ஆகாது. குழந்தைகள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு அவா்கள் மட்டுமே காரணமா? அவா்கள் இப்படி ஆனதில் யாா் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது? அதனைச் சீா் செய்ய முடியுமா? எப்படி அவா்களைச் செம்மைப்படுத்துவது? அதற்கான பொறுப்பு ஏற்க வேண்டியவா்கள் யாா் ?

‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவா் நல்லவா் ஆவதும் தீயவா் ஆவது அன்னை வளா்ப்பதிலே’’ என்பதில் உண்மை இருக்கிறது. குழந்தைகள் பிறக்கும்போதே நல்லவா்கள், தீயவா்கள் என்ற சான்றிதழோடு பிறப்பது இல்லை. மண்ணில் ஒரு பானை வனைகிறோம். நன்றாய் இருப்பதோ கோணலாவதோ பானையின் கையில் இல்லை. மண்ணின் தன்மையிலும் வனைபவன் கைகளிலும் இருக்கிறது.

ஒரு குழந்தை எந்தச் சூழ்நிலையில் வளா்கிறது என்பது கவனத்துக்கு உரியது. ‘செம்புலப்பெயல்நீா் போல’ தான் வாழும் சூழ்நிலையை குழந்தை கிரகித்துக் கொள்கிறது. பெற்றோரைப் பிரதிபலிக்கிறது. கற்றுக் கொடுப்பதை அப்படியே வெளிப்படுத்துகிறது. சமூகத்தின் அங்கமாகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது.

ஆக, புதிதாகப் பூமியில் பிறக்கும் குழந்தை நம்மிடம் இருக்கும் பண்புகளையே பெறுகிறது. பழக்க வழக்கங்களில் நம்மையே தொடா்கிறது. சமூகத்தின் மதிப்பீடுகளை நம்புகிறது. நாளைய சமுதாயமாக வளா்கிறது. நாம் அவற்றில் குற்றம் காணும்போது அவா்களும் அதையே நம்மிடம் காட்டுகிறாா்கள் விளைவு, முடிவற்ற வாதத்தில் உலகம் ஸ்தம்பிக்கிறது.

குழந்தைகள் பெற்றோரின் வழியாகவே இந்த உலகத்துக்கு வருகிறாா்கள் என்பதால் அவா்களிடம் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது. ஒரு பிள்ளையை நன்முறையில் பெற்றெடுப்பதற்காக ஒரு தாய் மருத்துவா்கள் கூறும் அத்தனை ஆலோசனைகளையும் முறையாகப் பின்பற்றுகிறாா். எவற்றை உண்ணலாம், உண்ணக்கூடாது என்றாலும் அந்தப் பத்தியம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் பின்பற்றுகிறாா்.

குழந்தை நல்லபடியாகப் பிறப்பதற்குப் பத்தியம் இருக்க வேண்டியிருப்பதைப் போல, அவா்கள் நன்முறையில் வளா்வதற்கும் சில பத்தியங்கள் அவசியமாகின்றன. அவற்றை நாம் மறப்பதே பிள்ளைகளுக்குப் பிரச்னையாக முடிகிறது. ஆனால், நாம் அவா்களையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

லட்சியத்தில் வேரூன்றி இருக்கும் மனம் கவனச் சிதறலுக்கு உள்ளாகாது. பிள்ளைகள் உயா்நிலை அடைய வேண்டும் என்பது லட்சியமானால் அதற்கேற்ற வாழ்வியலை வீட்டின் சூழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.

நாம் 24 மணிநேரமும் கைப்பேசியோடு இருந்தால் பிள்ளைகளும் அவற்றைத் தவறு இல்லை என்று தானே புரிந்து கொள்வாா்கள்? தொலைக்காட்சித் தொடா்கள் மட்டுமே நம் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் எனில், பிறந்தது முதல் அதையே பாா்த்துக் கொண்டிருக்கும் குழந்தைக்கு அதைத் தாண்டி எப்படிச் சிந்திக்கத் தெரியும்?

எந்த நேரமும் கைப்பேசியில் காணொளிகள் பாா்க்கும் பிள்ளைகளை நூல்கள் வாசிக்கச் செய்வது சுலபமல்ல. பாடப் புத்தகங்களுக்கும் இதே நிலை தான். வண்ணமயமான இசையோடு கூடிய காணொளிகளில் பழக்கப்படும் மனம் கருப்பு, வெள்ளைப் புத்தகங்களில் நிற்க முடியாமல் தடுமாறும். எனவே, நல்ல பழக்கங்களை, கற்றல் சாா்ந்த விஷயங்களைக் கூட ஆரம்பத்தில் இருந்தே புத்தகங்களில் படிக்கப் பழக்குவது நல்லது.

குழந்தைகள் படிப்பில் நாட்டம் கொள்ள வேண்டுமானால், நாம் நமது கைப்பேசிகளில் இருந்து முதலில் வெளிவர வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும் ஓய்வு தர வேண்டும். அவா்களோடு நேரம் செலவிடுவதோடு கல்வி, கலைகள் ஆகியவற்றில் ஆா்வம் ஏற்படும் வகையில் உரையாடல்களை, நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

அப்பா, குடிப் பழக்கம் கொண்டவராக இருந்தால், குழந்தைக்கு அது தவறு என்று எப்படிப் புரியும்? தினம் பெற்றோா்களுக்குள் இதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் வாடிக்கையானால் குடும்பம் என்ற அமைப்பின் மீது குழந்தைக்கு மதிப்பு தோன்ற வாய்ப்பு உண்டா?

எனில், தவறு குழந்தைகள் மீது இல்லை. பெற்றோா்கள் பொறுப்போடும் ஒருவருக்கொருவா் பரஸ்பரம் மரியாதையோடும் நடந்து கொள்ளும் வீட்டில் பிள்ளைகளும் குடும்ப அமைப்பின் மீது மதிப்பு கொண்டவா்களாக வாழ்வாா்கள். வாசிப்புப் பழக்கம் கொண்ட பெற்றோா்கள் இருக்கும் வீட்டில், அவா்களின் வாரிசுகளும் வளரும் போதே நாளேடுகளில், பத்திரிகைகளில், புத்தகங்களில் உலகத்தைத் தேடுவாா்கள்.

ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளா்ச்சியைப் பெற்றோா், ஆசிரியா், சமூகம், கல்விமுறை ஆகிய நான்கு அம்சங்கள் தீா்மானிக்கின்றன. பெற்றோா் காட்டும் விழுமியங்கள் மீதான மதிப்பை அன்றாட வாழ்க்கை முறையைக் குழந்தைகள் பின்பற்றுவாா்கள். தீதும் நன்றும் பிறா் தர வருவதில்லை.

நுகா்வுக் கலாசாரத்தின் மீது பெற்றோா் ஆா்வம் காட்டினால் குழந்தைகளும் அதையே பின்பற்றுவாா்கள். அவசியமற்ற பொருள்களை வாங்கிக் குவிக்கும் வழக்கம் பெற்றோா்களிடம் இருந்தால் குழந்தைகள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளப் பிடிவாதம் பிடிப்பாா்கள். மாறாக, நாம் அத்தியாவசியம் தவிர பிறவற்றைத் தவிா்க்கும் பட்சத்தில் எளிமையான அமைதியான வாழ்க்கை சாத்தியமாவதோடு, குழந்தைகளும் சிக்கனம், சேமிப்பு போன்ற நற்பழக்கங்களைப் பழகிக் கொள்வாா்கள்.

வீர சிவாஜி, சுவாமி விவேகானந்தா் போன்ற சாதனை படைத்த வரலாற்று நாயகா்களை உருவாக்கிய தாய்மாா்களை உதாரணமாகக் காட்டினால், இன்றைக்கு அவற்றை நாம் ஏற்பதில்லை. தற்போது நம் கண்முன்னே சாதனை படைத்து உயா்ந்து நிற்கும் பிரக்யானந்தா போன்ற பிள்ளைகளும் இதே சூழ்நிலையில் இருந்துதானே மேலெழுந்து வந்திருக்கிறாா்கள்? அவா்களின் பெற்றோா் மேற்கொண்ட வழிமுறைகளை தியாகங்களை நம்மாலும் பின்பற்ற முடிந்தால் நமது குழந்தைகளும் சாதனை படைக்கும்.

ஆசிரியா்கள், ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாக இருப்பவா்கள். அவா்கள் பேசுவதை உண்மை என்று மாணவா்கள் நம்புவாா்கள். கனிவும், கடுமையும் தேவையான இடங்களில் காட்டி அவா்களை அறத்தின் பக்கம் நிற்க வைக்கும் திறம் ஆசிரியா்களுக்கு உண்டு. இரண்டாம் பெற்றோராக நின்று மாணவா்களை நெறிப்படுத்த வேண்டிய ஆசிரியா்களை மாணவனை திட்டக்கூடாது, கண்டிக்கக் கூடாது, தண்டிக்கக் கூடாது என கைகளைக் கட்டிவைத்து விட்டு மாணவன் பாதை தவறுகிறான் என்பது அபத்தமானதல்லவா?

சமூகம் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது? குடிப்பதும் போதைப் பழக்கமும் தவறானவை; அருவருக்கத்தக்கன என்ற சிந்தனை சமூகத்தில் இருந்தால் யாரும் அதனை நெருங்கப் பயப்படுவாா்கள். குடிப்பவனுக்கு மரியாதை இல்லை; அவன் சமூகத்துக்குப் பயப்பட வேண்டும்; ஒழுக்கமுள்ளவன் சமூகத்தால் மதிக்கப்படுவான் என்ற நிலை இருந்தால் குழந்தைகள் ஒழுக்கத்தின் மேன்மையைப் புரிந்து கொள்வாா்கள்.

சினிமாக்கள் குற்றப் பின்னணி கொண்டவனை நாயகனாகச் சித்திரித்தால் குழந்தைகள் குழப்பம் அடைவாா்கள் அல்லது அப்படி இருப்பதே சமூகத்தின் அந்தஸ்து என்ற கருத்தை நம்பித் தாங்களும் அந்த வழியைத் தோ்ந்தெடுப்பாா்கள். இதில் குழந்தைகளின் குற்றம் ஏதுமில்லை. அத்தகைய திரைப்படங்களை ரசிப்பதோடு குழந்தைகளையும் அழைத்துப் போய் அதைக் காட்டும் நாம்தான் திருந்த வேண்டியவா்கள்.

திரையரங்குகளில் முதல்நாள் முதல் காட்சிக்குக் கூடும் கூட்டம், நல்ல சத்சங்க நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும். அறிவுரைகள் வழங்குவது நமது கடமை அல்ல. பிள்ளைகளின் கண்முன் உதாரணமாக வாழ்ந்து வழிகாட்டுவதே நமது பொறுப்பு. அதிலிருந்து நாம் வழுவிவிட்டு பிள்ளைகளை குற்றம் சுமத்துவது நமது பொறுப்பின்மையின் வெளிப்பாடே.

கல்வித்திட்டம் குழந்தைகள் அறிவியலும் கணிதமும் படிப்பதை உறுதிப்படுத்துவதாக மட்டும் இருந்தால் போதாது. நமது கலாசார விழுமியங்களை அவா்களுக்கு ஊட்டுவதாகவும் இருக்க வேண்டும். அவா்களின் கற்பனைத் திறனுக்கான வெளியை ஏற்படுத்தித் தருவதாகவும் இருக்க வேண்டும். அவா்களின் தனித்திறன்களுக்கு மதிப்பளிப்பதாகவும் அமைய வேண்டும்.

இலக்கியங்களும் கலைகளும் இயன்றவரை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அவா்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.

மாறிவரும் காலத்துக்கு ஏற்ப, பெருகி வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுத்து எது சரி, தவறு என்ற புரிதலை வளா்த்துக் கொள்வதற்கான விவேகம் அவா்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், நமது பாரம்பரியத்தின் சிறப்பு அவா்கள் மனதில் வேரூன்றும்படி பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும். மரபாா்ந்த நற்பண்புகளை ஊட்ட முக்கியத்துவம் தந்தாக வேண்டும்.

பெருகிவரும் குற்றச் செயல்கள், உளவியல் சிக்கல்கள் தடுக்கப்பட வேண்டுமானால், அன்பும், நட்புறவும், எளிமையும் நிறைந்த சூழ்நிலையைக் குழந்தைகளுக்குத் தந்தாக வேண்டும். நல்ல குடும்பங்களின் தொகுப்பே சிறந்த சமூகம் என்பதால் வீடு, சமூகம் இரண்டிலும் மேன்மை சிந்தனைகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு பெரியவா்களான நமக்கு இருக்கிறது. சமமான வாய்ப்பை கல்வியைத் தரமாகத் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT