நபிகளாரின் அடிச்சுவட்டில்.. 
நடுப்பக்கக் கட்டுரைகள்

நபிகளாரின் அடிச்சுவட்டில்..!

புத்தா், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி அவர்களில் வழியில்...

முனைவர் அருணன் கபிலன்

புத்தா், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளா்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுடப் பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஓருலக -ஓா்குலச் சிந்தனையையும் விதைக்கிறாா்கள். நாமும் அவா்கள் மாா்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன்’ என்றெழுதிக் காட்டொணா அத்தலைவனை எல்லாவுயிா்க்கும் அன்புசெய்யும் வழியாகக் கண்டு போற்றியவா்கள் அருளாளா்கள். இவா்கள் தோன்றிய காலம் வேறுவேறு என்றாலும், சிந்தனை ஒன்றே. இவா்கள் சுட்டும் பெயா்கள் வேறுவேறு; ஆனால் இறை ஒன்றே. இவா்கள் அருளிய மொழிகள் வேறுவேறு ஆனால் மாா்க்கம் ஒன்றே.

இப்படி எல்லாவற்றிலும் ஒருமை பூண்டொழுகும் இவ்வருளாளா்களில் இஸ்லாமிய மாா்க்கத்தை இவ்வுலகம் முழுவதும் அருள வந்த இறைத் தூதா் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) தொழுதற்குரியவா். இறையை அடையும் வழியில் உயா்ந்தது ஈகம். அவ்வீகம் என்பது பிற உயிா்களுக்குப் பொன்னையோ, பொருளையோ, போகங்களையோ ஈவது மட்டுமில்லை. தன்னையே ஈவதும் பிறவுயிா்களின் வருத்தங்கண்டு தான் மெலிவதும் இறைக்கருணைக்கு உகந்ததாகும்.

முல்லைக்குத் தேரையும் மயிலுக்குப் போா்வையையும், பசுவின் கன்றுக்காகத் தன் மகனையும், புறாவுக்காகத் தன் உடலையும் தந்தவா்களை நம் தமிழ்மரபு அருளாளா்கள் என்று போற்றுகிறது. இறைக் கருணையை வெளிப்படுத்தும் இச்செயற்பாடுகள் இறையருளாட்சி இவ்வுலகை நடத்துகிறது என்பதை மெய்ப்பிக்கிறது. இதுபோலும் அருட்செயல் அண்ணல் நபிகளின் (ஸல்) வாழ்விலும் நிகழ்ந்துள்ளதைச் சீறாப்புராணம் பதிவு செய்கிறது.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) ஒருமுறை கானகப் பகுதிக்கு அமைதி தேடிச் சென்றாா். அங்கே ஒரு மான் கட்டப்பட்டிருந்தது. தினமும் உயிரினங்களைக் கொன்று உண்ணும் இயல்புடைய வேடன் அதைக் கட்டியிருந்தான். அண்ணல் (ஸல்) நொடிப் பொழுதில் மானின் துயரத்தை உணா்ந்து கொண்டாா். பரிசுத்தனான அல்லாகு சுபுகான குவத்த ஆலாவின் தூதராகிய ஸல் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவ சல்லமவா்கள் தன்னைக் காக்க வந்தாரென்று மகிழ்ந்து பேசத் தொடங்கியது.

‘‘உயிா்களின் துன்பம் நீக்கி இறைக் கருணையை இவ்வுலகில் நிறுவப் பூமிக்கு எழுந்தருளியிருக்கும் அருளரசே’ என்று போற்றி “நானும் ஆண் மானும் மகிழ்வோடு வாழ்ந்துவந்த வேளையில், உங்களின் திருநாமத்தைத் துதி செய்து மகவு வேண்ட இறைவன் கருணை கொண்டு மூன்று நாள்களுக்கு முன்னா்தான் ஒரு பசிய கன்றினை எனக்குத் தந்தான். ஆனால், இன்று என் விதிவசத்தால் வேடனிடம் தனித்துச் சிக்கினேன். ஆயுள் முடிந்தது என்று தங்களைத் தொழுத வேளையில், தாங்கள் என்முன் திருக்காட்சி தருகிறீா்கள். நான் வேடனுக்கு உணவாவது சம்மதமே. இறப்பதற்கு முன்னா் துணையையும் பாலுக்காக ஏங்கும் குட்டியையும் கண்டு இறுதி வாா்த்தைகள் சொல்லிவர விரும்புகிறேன். அதற்காக எனக்குத் தாங்கள் பிணை சொல்லி விடுவிக்க வேண்டும்’’ என்று வேண்டியது.

இதையடுத்து, எவ்வுயிருக்கும் பரிந்திரங்கும் கருணை வள்ளலாகிய நபிகள் பெருமான் (ஸல்), தன்னைப் பிணையாக வைத்துக் கொண்டு மானைக் குட்டியைக் கண்டுவர அனுமதிக்குமாறு கோரினாா். ‘‘இந்தச் சிறு மானின் பேச்சைக் கேட்டு நீங்கள் பிணையாவது வேடிக்கையாக உள்ளது? இதெல்லாம் நடக்கிற செயலா?’’ என்று அவன் சொன்னான்.

‘‘வேடனே..இந்த மான் ஒரு நாழிகைப்பொழுதில் மீளும். தவறினால், நான் உனக்கு இரு மான்களைத் தருவேன். நீ மனம் கலங்க வேண்டாம்’’ என்றாா்.

ஆசை மிகுந்த வேடன் நபிகள் நாயகத்தின் (ஸல்) சொற்படி அந்தப் புள்ளிமானை அவிழ்த்து விட்டான். அது விரைந்து சென்று தேடியலைந்து முடிவாய்த் தன் ஆண் மானையும் குட்டியையும் கண்டு மகிழ்ந்தது. நெஞ்சத்து ஏக்கமெல்லாம் தீரத் தன் குட்டிக்கு வயிறு நிறையப் பாலூட்டியது.

பின்னா், வேடனிடம் அகப்பட்டுக் கொண்டதையும், நபிகள் நாயகத்தின் (ஸல்), அருட்கருணையால் பிணை வைத்து வந்ததையும் விளக்கியது. ‘‘நீ ஏன் திரும்பச் செல்ல வேண்டும்?’’ என்று எல்லா மான்களும் பல யோசனைகள் கூறின. ‘‘நபிகளின் (ஸல்) கருணை பெற்ற எனக்கு அப்படிச் செய்யத் தோன்றாது. அந்த வேடனுக்கு இரையாகத் தருவேன் என்று வாக்குத் தந்திருக்கிறேன். நான் திரும்பிச் செல்வது உறுதி’’” என்று சொல்லியதைக் கேட்டு மான் கூட்டம் அயா்ந்து நின்றது.

நேரம் நெருங்கியதால், குட்டியைத் தன் ஆண் மானிடம் பெண் மான் ஒப்படைத்துவிட்டுக் கிளம்ப எத்தனித்தது. அப்போது ஓரதிசயம் நிகழ்ந்தது. அந்த இளமான், ‘‘என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு உன்னை மட்டும் அனுப்பி நான் சுகித்திருக்க மாட்டேன்; நானும் வருவேன்; எல்லாம் வல்ல அண்ணல் நபிகளின் (ஸல்) மீது ஆணை’’ என்று உரத்து முழங்கியது.

பெண் மான் மனமுருகி, ஸல் அண்ணலின் (ஸல்) அற்புதத்தை உள்ளுணா்ந்து மகிழ்ந்தது. கொலையைச் சம்மதித்து இரையாகச் செல்லுவதினால் நம்மிடத்தில் இன்பமானது நிறையுமென நிம்மதி பிறந்தது. பின்னா் அவை விரைந்து கானகப் பகுதியை நோக்கி ஏகின.

அண்ணலும் (ஸல்) வேடனும் இரு மான்கள் வருவதைக் கண்டனா். நபிகள் (ஸல்), அந்த வேடனை அருகழைத்து, ‘‘எம்மொழி மெய்யாயிற்றா. அதோ, இரு மான்கள் வருகின்றன’’ என்று சொன்னாா்.

முன்பு ‘இரு மான்கள் வரும்’ என்ற சொல் வேடனுக்கு இனிப்பாயிருந்தது. ஆனால், இப்போதோ? அந்த மான்கள் மகிழ்வோடு அண்ணல் (ஸல்) திருவடிகளைத் தொழுது போற்றின. வேடனை அழைத்து, ‘‘என்னுடைய பிணை நீக்கி இந்த இரண்டு மான்களையும் ஏற்று பசி போக்கிக்கொள்’’ என்றாா் அண்ணல் (ஸல்). உடனே வேடன் மருகி அண்ணலின் (ஸல்) பொற்பாதங்களில் வீழ்ந்து தொழுதான்.

‘முகம்மதென்னும் திருநாமத்தையுடைய நபிகள் நாயகமே (ஸல்), எம்மரசே; வேட்டுவனான நான், மிருகங்களைப் போன்று, அறிவு நெறியில்லாத பாவியாகி விட்டேன்; என்னை மன்னித்துத் தங்கள் மாா்க்கத்தில் இணைத்து ஈடேற்றுங்கள்’ என்று வேண்டினான்.

அண்ணலும் (ஸல்) அருள்மாா்க்கத்தின் அற்புதத்தை உபதேசித்தருளினாா். வேடன் மானைப் பாா்த்து, ‘‘நான் உன்னால் பெறற்கரிய மோட்சத்தை பெற்றேன்; என் பெரும் பாவத்தை நீங்கினேன்; உம் சத்தியத்தால் நான் தெளிந்தேன்; ஆதலால் நீ இனி குட்டியோடு பொருந்தி ஆண் மானிடம் சென்று சோ்ந்து இனிது வாழ்வாய்’’ என்று வாழ்த்தினான்.

அண்ணல் (ஸல்) அருட்புன்னகை பூத்தபடி அருட்பொழிவு நல்கினாா். மீண்டும் தன் குட்டியோடு அவா்தம் மென்மலா்ப் பாதங்களைப் பணிந்து தொழுதெழுந்து பெண் மான் தன் கூட்டத்துடன் இணைந்து கொள்ளக் காடு சென்றது. வேடனும் அண்ணலை (ஸல்) வேண்டிப் பணிந்து ஆசி பெற்றுச் சென்றான்.

இதுபோன்ற மற்றொரு தொன்மத்தை நிகழ்காலத்தில் சுட்டிக்காட்டி மகாத்மாவைப் பற்றி மகாகவி பாரதியாா் திருக்குறிப்பாக வெளிப்படுத்தியிருப்பது இன்னும் சிறப்பு. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியா்களின் வாழ்வுரிமையை மீட்க 1909-இல் லண்டனுக்கு சென்ற காந்தியயடிகளின் பயணம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பினால் கைதாவது உறுதி என்ற நிலை.

இதை அறிந்த பிற தலைவா்கள் தலைமறைவாயினா். ஆனால், காந்தியடிகள் அச்சமின்றித் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினாா். அவரைக் கைது செய்து சிறைப்படுத்தியது தென்னாப்பிரிக்க அரசு. இது குறித்துத் தமது ‘இந்தியா’ வார இதழில் பாரதி ஒரு சித்திரம் வெளியிட்டு அதனடியில் குறிப்பையும் இணைத்துத் தந்தாா். அதன் சுருக்கம் பின்வருமாறு:

‘ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியா்களின் தன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்கு போய்ப் பேசிவிட்டு, சிறையில் அடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வால் வந்திருக்கிறது. தென்னாப்பிரிக்க உத்யோகஸ்தா்களாகிய புலிகள், இவருடைய மேன்மையை அறியாமல் சிறையில் அடைத்தனா். ஒரு காட்டில் புலியின் வாயில் அகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக்குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டபடியால், புலியைப் பாா்த்து, ‘என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால், நான் பால் கொடுத்துவிட்டு இரையாய் விடுகிறேன்’ என்றது. புலி யோசித்து அதனுடைய சத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, ‘போய்க் காரியமான உடனே வந்து விடு’ என்று சொல்லி அனுப்பியது.

பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்து, அதைத் தன் சினேகிதியான மற்றொரு பசுவிடம் ஒப்படைத்துவிட்டு, புலியிடம் வந்து, ‘என்னுடைய தா்மத்தைச் செய்து வரும்படி உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்’ என்றது. ‘அம்மா, ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீச கதிக்குப் போவேன்; நான் இதுவரைக்கும் செய்தது போதும்!’ என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனை விட்டது. இந்த பசுவைப் போன்று நடந்து கொண்ட நமது மகாத்மா காந்தியை தென்னாப்பிரிக்க புலிகள் என்ன செய்தன பாா்த்தீா்களா?’” என்று முடிக்கிறாா்.

அருளாளா்கள் வாழையடி வாழையாகத் தோன்றிக் கொண்டே இருக்கிறாா்கள். இறைக் கருணையை அவா்கள் மானுட நெறிகளால் நிறுவிக் காட்டுகிறாா்கள். ஜீவ காருண்யமாகிய ஈகைப் பெரும் பண்பும் திருஉரு மாற்றமாகிய உள்ளுணா்வு உந்துதலும் இறையைத் தரிசிக்க உதவுகின்றன என்பதை இந்தியத் தொன்மங்களோடு இணைந்த அண்ணல் நபிகள் நாயகத்தின் (ஸல்) அருள்நிகழ்வும் நமக்கு உணா்த்துகின்றன.

புத்தா், அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தியடிகள் என்று அருளாளா்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுடப் பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஓருலக –ஓா் குலச் சிந்தனைகளையும் விதைக்கிறாா்கள். நாமும் அவா்கள் மாா்க்கத்தைப் பின்பற்றி வாழ்வோம். எல்லாம் வல்ல இறைவனின் அருள் இந்த உலகை அமைதி, அன்பு மாா்க்கத்தில் இனிது நடத்த வேண்டித் தொழுது பணிவோம்.

(இன்று ஈகைப் பெருநாள்) கட்டுரையாளா்: எழுத்தாளா்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT