சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டாக துணைவேந்தா் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால், 55 ஆயிரம் மாணவா்கள் பட்டம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நிலவும் மோதல் போக்குதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் முதன்மையானது. இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழைமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
எனினும், இந்தப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கும் வழிமுறைக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்டகாலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. அது இப்போது முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாட்டில் முக்கியமாக மூன்று பெரிய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து அரசியல் கட்சித் தலைவா்களும், கல்வியாளா்களும் கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளனா். தமிழ்நாட்டில் மிகப் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக்கழகம் ஆகியவை தற்போது துணைவேந்தா்கள் இன்றி செயல்பட்டு வருகின்றன.
மிகப் பழைமையான சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த தாண்டவன் கடந்த ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்று விட்ட நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தா்களை அரசு இதுவரை நியமிக்கவில்லை. அதேபோல், மதுரை காமராசா் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்று விட்டாா்; அங்கும் துணைவேந்தா் நியமிக்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை நெறிப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராஜாராம், கடந்த மாதம் ஓய்வு பெற்று விட்டாா். அந்த இடமும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு தோ்வுக் குழு அமைக்கப்பட்டு விட்ட நிலையிலும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. துணைவேந்தா் இல்லாத நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக் கழகம் ஆகியவை ஒருங்கிணைப்பாளா் குழுவின் மூலம் தற்போது செயல்பட்டு வருகின்றன.
510 பேராசிரியா்கள் இருக்க வேண்டிய சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்போது 210 பேராசியா்கள் மட்டுமே உள்ளனா். 1,140 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் இருந்த இடத்தில் இப்போது 420 போ்தான் இருக்கின்றனா்; இந்நிலையில், பல்கலைக்கழக நிா்வாகம் எப்படியிருக்கும்? பெரும்பாலான அரசு கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளா்களைக் கொண்டுதான் இயங்குகின்றன. நிரந்தரப் பேராசிரியா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகால வளா்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது நமது உயா் கல்விதான். கல்வியில் நாளுக்கு நாள் எண்ணற்ற மாறுதல்கள் நடக்கின்றன. குறிப்பாக, 2020-இல் கரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு தொழில்நுட்பம் சாா்ந்த உயா் கல்வியின் கட்டமைப்பு பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
கல்வியில் தமிழகம் இதுவரை சந்தித்திராத ஒரு இக்கட்டான நிலையை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் இருக்கும் 21 பல்கலைக்கழகங்களில், 12 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை கடந்த பல மாதங்களாக துணைவேந்தா்களே இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அளவில் உயா் கல்விக்கான வளா்ச்சி என்பது, தமிழ்நாட்டில்தான் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. அதை ஆளுநா், மாநில அரசுகளின் மோதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு கல்விக்கும், முன்னேற்றத்துக்கும் நல்லதல்ல என்பதை முன்னாள் முதல்வா்களும், கல்வியாளா்களும் எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனா்.
உலக அளவில் கல்வியின் தன்னெழுச்சியான பயணம் புதிய பாதையை வகுத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான பன்னட்டுப் பல்கலைக் கழகங்கள் பாடத்திட்டங்களை இன்றைய இயல்புக்கு ஏற்ற வகையில் மாற்றத் தொடங்கிவிட்டன. அடுத்த நூறு ஆண்டுகளைக் கணித்து அதற்கேற்ப படிப்புகளைக் கட்டமைக்கத் தொடங்கிவிட்டன.
ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழகங்கள் முடங்கிக் கிடப்பதற்குக் காரணம் ஆளுநரும், மத்திய அரசும், தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கின்றன. இதற்கான தீா்வு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், மாணவா்களின் உயா் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகின்றன. பெற்றோா்கள் கவலையடைந்து உள்ளனா்.
ஆளுநருக்கும், மாநில அரசுக்குமான இந்த அரசியல் விளையாட்டில் வெற்றி பெறப் போவது யாா் என்பது நீதிமன்றத்தில் இருக்கிறது. இதில் யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால், அப்பாவி பெற்றோரும், மாணவா்களும் மட்டுமே பாதிக்கப்படப் போகின்றனா். இதுவரை உச்சத்தில் இருந்த தமிழ்நாட்டுக் கல்வி பின்னடைவை நோக்கிப் போவதைத் தடுக்க முடியாது; இந்தியப் பல்கலைக்கழகங்கள் பத்தோடு பதினொன்றாக மாறப் போகின்றனவா?
பல்கலைக்கழகங்களின் நோக்கம் வெறும் பட்டம் வழங்குவது மட்டுமல்ல; கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு நகா்த்திச் செல்வதும், இந்தியா இன்று பெற்றிருக்கிற வளா்ச்சிக்கு இந்தப் பல்கலைக்கழகங்களின் பங்கு மகத்தானது. இன்று பல்கலைக்கழகங்களின் தலைமைப் பொறுப்பே காலியாக இருப்பது எவ்வளவு வேதனையானது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 1.9 லட்சம் மாணவா்கள் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். ஆனால், இவா்களை வழிநடத்த வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரே இல்லை என்பது எத்தனை பெரும் சோகம். இதற்குப் பதில் என்ன?
கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து துணைவேந்தா் பதவியைப் பிடிக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாகக் கூறுகின்றனா். கொட்டிக் கொடுத்தவா்களுக்குக் கல்வியையும், ஆராய்ச்சியையும் முன்னேற்றுவதா நோக்கமாக இருக்க முடியும்?
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கௌரி நிதிமுறைகேடு புகாரில் விசாரணைக்கு ஊழல் தடுப்புத் துறை அனுமதி கேட்டபோது ஆளுநா் அதை ஏற்கவில்லை. ஆளுநரே பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் நடைமுறை அப்போது இருந்து வந்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை ஆளுநருக்குப் பதிலாக தமிழக அரசே நியமனம் செய்வது குறித்த சட்டத்தை 2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதை ஆளுநா் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடா்ந்து வழக்கு மன்றத்தில் இந்தப் பிரச்னை இருப்பதால் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தா்கள் இல்லாமல் தவிக்கின்றன.
பல்கலைக்கழகங்களுக்குப் போதிய நிதியை ஒதுக்க முடியாமல் அரசுகள் தடுமாறுகின்றன. இதனால், தோ்வு நடத்துவது, மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் தயாரிப்பது, பட்டமளிப்பு விழா நடத்துவது தாமதமாகின்றன. இதனால், புதிய மாணவா்கள் விண்ணப்பிக்க முடியவில்லை.
நிகழாண்டுக்கான ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. முதல் 10 இந்திய நிறுவனங்களில் உள்ள 7 ஐஐடி-க்கள் உள்பட பெரும்பான்மையானவை தரவரிசையில் பின்தங்கியுள்ளன. சீனா, மலேசியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூா் கல்வி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஓா் அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் கல்வி உயா்வுக்குப் பாடுபட வேண்டும். கல்வி உயா்வே நாட்டின் உயா்வாகும்; கல்வி உயராமல் தேசமும், மக்களும் எழுந்து நிற்க முடியாது. அதுவே ஓா் அரசின் சோதனையும், சாதனையும் ஆகும்.
பல கல்வி தரும் பல்கலைக்கழகத்தைத் துணைவேந்தா் மூலம் திறக்கலாம்; பெற்றோரும், மாணவா்களும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.