கடந்த மாதத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, அணியின் துணைத் தலைவராக இடம் பெற்றிருந்தார்.
அவருக்கு சென்னையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டு முதல்வர், துணை முதல்வர், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
சென்னையில் கண்ணகி நகர் என்பது தாழ்த்தப்பட்டவர்கள், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டோர் வசிக்கும் பகுதி என முத்திரை குத்தப்பட்டிருந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உயர் படிப்புக்குச் சென்றாலும் கண்ணகி நகர் என்றாலே அவர்களைச் சேர்க்காமல் இருந்திருக்கிறார்களாம். இதனால், பல்வேறு திறன்கள் இருந்தாலும் அவர்களின் உயர் படிப்பு கேள்விக்குறியானதால் பெரும்பாலானவர்கள் படிப்புக் கனவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார்களாம்.
அப்பா கூலித் தொழிலாளி, அம்மா தூய்மைப் பணியாளராக இருந்தாலும் தங்கள் மகள் மீது நம்பிக்கை வைத்து அவரை உடல்திறன் மிக்க கபடிப் போட்டிக்கு அனுப்பினர் படிப்பறிவு அதிகமில்லாத பெற்றோர்.
கார்த்திகாவுக்கு கண்ணகி நகர் மேல்நிலைப் பள்ளியில் அவருடைய மூத்தோர்கள் கபடிப் போட்டிக்குச் சென்று கோப்பைகளைக் கொண்டு வந்தபோது தானும் அதுபோல கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. அதன் பிறகு, உரிய முறையில் பயிற்சி எடுக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் சென்று கேட்க அவரும் பயிற்சியளித்தார்.
இத்தனைக்கும் கண்ணகி நகர் பயிற்சியாளரிடம் போதுமான வசதியில்லாமல் இருந்தது. ஆனாலும், மன உறுதியோடு மகளிர் அணியைக் கட்டமைத்தார். இதில் கார்த்திகா திடமாகப் பயிற்சி பெற்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் கபடி, மல்யுத்தம், கராத்தே போட்டிகளில் மட்டுமே நேரடியாக ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். இதற்கு உடலுறுதி கண்டிப்பாகத் தேவை.
முன்பெல்லாம் கடினமான மண்தரையில் பயிற்சியும் போட்டியும் நடைபெறும். ஆனால், தற்போது செயற்கை தரை ஆடுகளங்களில் போட்டிகள் நடக்கின்றன. இதனால், உடலில் கடுமையான அடிபடும் வாய்ப்புகள் உள்ளன. இதையெல்லாம் மீறிச் சாதிக்க வேண்டும்.
இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றோர் அவர்களால் முடிந்தவரை செய்துள்ளனர். மேலும், பள்ளியிலும் ஆசிரியர்களால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளனர்.
இப்போது அதன் பலனைக் கண்ணகி நகர் மக்கள் அனுபவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர், சமூக சேவை அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினராலும் "கண்ணகி நகர் கார்த்திகா' என்ற பெயர் அதிக அளவில் உச்சரிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்புவரை கண்ணகி நகர் என்றாலே உதாசீனப்படுத்தியவர்கள், இப்போது அப்பகுதிக்குள் சென்று கார்த்திகாவைப் பாராட்டுவதன் மூலம் பெருமை தேடிக் கொள்கிறார்கள்.
இத்தனைக்கும் காரணம் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் துணைத் தலைவராக கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இடம்பெற்றிருந்ததுதான்.
தங்கம் வென்ற அணியில் இருந்ததால் கார்த்திகாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கினார், கார்த்திகாவின் கோரிக்கையை ஏற்று செயற்கை ஆடுகளம் அமைத்துத் தரவும் உத்தரவிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் களஆய்வு நடத்தியிருக்கிறார்.
இது குறித்து ஊடகங்களில் கார்த்திகா கூறியது: கண்ணகி நகர் என்றாலே வெறுத்து ஒதுக்கிய மக்கள் இப்போது திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்; இதற்காக கண்ணகி நகர் கபடிக் குழு என்ற பெயர் வைத்தோம்.
கார்த்திகா என்ற என் பெயருக்கு முன்னால் கண்ணகி நகர் என்பது என் அடையாளமாக மாறிப்போனது. இப்போதாவது கண்ணகி நகரின் மீது உள்ள அவச் சொல் மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
இப்பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த திறமைசாலிகள். அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரத் தேவையான ஒரு வெற்றி இப்போது பெறப்பட்டுள்ளது. இனி இப்பகுதி மக்கள் பெருமையோடு நான் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்ளலாம் என்றார்.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட், ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்தார். உலக வரைபடத்தில் ஜமைக்கா எங்குள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், உசேன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்குக் காரணம் விளையாட்டு என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சொன்னதைக் கூறி, கபடிப் பயிற்சியாளர் ராஜு உற்சாகப்படுத்துவாராம்.இந்திய அணிக்காக விளையாடும்போது பட்ட கஷ்டமெல்லாம் போய்விடும். அதன் பிறகு, எல்லோரும் உன்னைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்று பயிற்சியாளர் கூறியதை கார்த்திகா கடைப்பிடித்து வெற்றியும் பெற்றுள்ளார்.
கார்த்திகாவின் பெற்றோரும் தங்கள் மகளைக் கபடிதானே என்று அனுப்பாமல் இருந்ததில்லை. அவர்களின் தியாகமும் இதில் உள்ளது. துணிச்சலாக மகள்களை அனுப்பி அவர்களின் திறமைகளை வெளிக் கொணருங்கள் என்கின்றனர்.
கண்ணகி நகர் எக்ஸ்பிரஸ் கார்த்திகாவின் வெற்றிக்குப் பிறகு அரசின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் கண்ணகி நகருக்குக் கிடைத்திருக்கின்றன. இனியும் கிடைக்கும் வாய்ப்பும் அதிகமுள்ளது. இது சாதாரண வெற்றி மட்டுமில்லை. மாற்றம் தந்த "வெற்றி'. வாழ்வில் என்றும் மறக்காத, மறைக்க முடியாத, நினைவை விட்டு மாறாத வெற்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.