இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை குறித்து ஸ்டாலின் பதிவிட்டிருப்பது பற்றி...
ரூ. 5,000 மகளிர் உரிமைத் தொகை என்ற சர்ஜிகல் ஸ்டிரைக், எடப்பாடி பழனிசாமியின் உறக்கத்தைக் கெடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் மூன்று மாதங்களுக்கான தொகையுடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 தமிழக அரசு தரப்பில் சமீபத்தில் வரவு வைக்கப்பட்டது.
இதனை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அழுத்தம் காரணமாக திமுக இதனை செய்திருப்பதாக விமர்சித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!
அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.
பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சப்தமில்லாமல் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய ஹிட் அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
காபி, பேஸ்ட் அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!
விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் ’திமுக பெண்கள் பவர் என்ஜின்’ முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.