வெள்ளிக்கிழமை பொழுது விடிந்ததிலிருந்து தமிழ்நாடு முழுவதும் இதுதான் பேச்சு. ஒவ்வொரு குடும்பத்திலும், அத்தனை பேரிடமும். எனக்கு வந்துவிட்டது, உனக்குக் கிடைத்துவிட்டதா?
தமிழ்நாடு அரசு மாதந்தோறும் வழங்கிவரும் மகளிர் உரிமைத் தொகைக் கணக்கில் ஒவ்வொரு பயனாளிப் பெண்ணின் வங்கிக் கணக்கிலும் ரூ. 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதைப் பற்றிதான் பரஸ்பர விசாரணைகள்.
தேர்தலுக்கு முன் இலவசங்கள் மூலம் வாக்காளர்களை ஈர்ப்பது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாயா என்பவர் (பாரதிய ஜனதா ஆதரவாளர் என்கிறார்கள், உறுதியாகத் தெரியவில்லை) தொடுத்த பொதுநல வழக்கொன்றை மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதாக பிப். 5 ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.
தேர்தலுக்கு முன் இலவசங்களை அறிவிப்பதும் விநியோகிப்பதும் பற்றிக் கூர்ந்து பரிசீலிக்கப் போவதாகவும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதால் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் இந்த அமர்வு குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், முதல்வர் மகளிர் தொழில் முனைவுத் திட்டத்தின் பெயரால் மாநிலத்தில் சுமார் 1.5 கோடி பெண்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 15,600 கோடி வழங்கப்பட்டதற்கு எதிராகத் தேர்தல் பிரசார உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்த வழக்கும் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் (இவற்றில் மூன்றில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன) இதுபோன்ற திடீர் அறிவிப்புகள் ஏதேனும் வெளிவரலாம் என்ற நிலையில் மாற்றுக் கட்சியினர் சிலர் நீதிமன்றங்களை அணுகித் தடைகளைப் பெறலாம் என்றும் கூறப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில்தான், பிப். 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.46 மணிக்கு எக்ஸ் தளத்தில் விடியோ செய்தி ஒன்றைப் பதிவிட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்தப் பதிவில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை பெறும் ஒவ்வொரு பயனாளி கணக்கிலும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்தார். ஆனால், ஸ்டாலினுடைய அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே பல்லாயிரக்கணக்கான மகளிர் கணக்கில் இந்த ரூபாய் 5 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டது! சில மணி நேரங்களிலேயே, 10 மணிக்கெல்லாம், முழு வேலையும் முடிந்துவிட்டது.
செய்திகளைக் கசிய விடும் அல்லது கசிய விடுவதாகத் தெரிவிக்கும் எத்தனையோ தகவலறிந்த வட்டாரங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இவ்வளவு பெரிய வேலை நடக்கப் போகிறது, மகளிர் உரிமைத் தொகையை முன்னதாக வழங்கவுள்ளனர், அறிவிப்பு வெளியாகப் போகிறது என ஒருவருக்குக்கூடத் தெரியவில்லை; மகா ஸோர்ஸ் வட்டாரங்கள் உள்பட. அந்த அளவுக்கு கமுக்கமாகவும் திட்டமாகவும் முடிவு எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒருவேளை இந்தத் திட்டம் முன்னதாகத் தெரியவந்தால் யாரேனும் எப்பாடு பட்டேனும் நீதிமன்றங்களின் மூலம் தடுக்கப் பார்த்திருப்பார்கள் எனக் கருதிய அரசு, முன்னதாகவே யோசித்து, சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் நிறைவேற்றிவிட்டிருக்கிறார்கள்.
தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3 ஆயிரம் மற்றும் கோடைக் காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரம்! ஆக, 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் வாக்குறுதியளித்தார்.
கூடவே, வெளியிட்டிருந்த காணொலியில், “2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட"த்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். முதலில், ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்குப் பயனளித்த இந்தத் திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இது வெறும் நிதியுதவி அல்ல. சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகக் கொடுக்கப்படுகிற உரிமைத்தொகை! இந்தத் தொகையை வைத்து, அன்றாட வீட்டுச் செலவுகள், குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் என, பல அத்தியாவசியச் செலவுகளை, மகளிர் தாங்களே நிறைவு செய்ய இந்த திட்டம் வழிவகுத்தது” என்று குறிப்பிட்டார்.
“சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வரும் நிலையில், இதற்கு எதிராக தில்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிமையாக இருக்கும் இன்னொரு கூட்டமும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த, சூழ்ச்சி செய்வதாகத் தகவல் வருகிறது! இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சிலர் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருகின்றன.
“திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, இந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்துப் பார்த்து, இந்த பிப்ரவரி மாதம் மட்டுமின்றி, அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத்தொகை தவணைகளைச் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில்கொண்டு மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, இப்போதே 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார் ஸ்டாலின்.
இவ்வாறாக, தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி பெண்களுக்கு ஒரே நாளில் ரூ. 6,500 கோடி பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
மு. கருணாநிதியைவிட மு.க. ஸ்டாலின் ஆபத்தானவர் என்று அவருக்கு எதிரான சில அரசியல் தலைவர்கள் சிலர் சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால், இந்த மகளிர் உரிமைத் தொகை விநியோகம் அந்தக் கணிப்பை உறுதி செய்திருக்கிறது எனலாம்.
இடைக்காலத் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தவுடனேயே, மகளிர் உரிமைத் தொகையை முன்னதாகவே இவ்வாறு வழங்கத் திட்டமிடப்படுவது பற்றியோ, வழங்குவது பற்றியோ ஒருவேளை லேசாக வெளியே தெரிய வந்திருந்தால்கூட யாரேனும் நீதிமன்றங்களுக்குச் சென்று ஏதேனும் நீதிபதிகள் மூலம் தடை உத்தரவைப் பெற்றிருக்க இயலும்.
14 - சனி, 15 - ஞாயிறு வங்கி விடுமுறை. எனவே, 13 ஆம் தேதி காலையிலேயே வங்கியில் பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டது. நிச்சயம் இந்த நகர்த்தலும்கூட வங்கிகளுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், வெள்ளிக்கிழமை வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டத்துக்குப் பணம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றால், ஏற்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனாலும் இதுபற்றி யாரும் எங்கேயும் மூச்சுகூட விடவில்லை. விநியோகத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்திய விதம்தான் ஷார்ப்.
சில மாதங்களுக்கு முன்னர், பிகார் மாநிலத்தில், தலைமேல் சட்டப்பேரவைக்குத் தேர்தலை வைத்துக்கொண்டு தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட வேண்டிய நிலையில் (அக். 6 அறிவிப்பு வெளியானது), செப். 26 ஆம் தேதி 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 7,500 கோடி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு சிங்கிள் பேமென்ட் ஆக விநியோகிக்கப்பட்டது (1.5 கோடி பெண்கள், 15 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்).
இதேபோலதான். 2021, பிப்ரவரி 26 ஆம் தேதி. அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அன்று பிற்பகலில்தான் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. ஆனால், சரியாக, அதே நாள் காலையில் சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வரைவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவர, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது (தேர்தல் வரும் நேரத்தில் யார் எதிர்க்கப் போகிறார்கள்?). 40 ஆண்டுகால கனவு நிறைவேறியது என்றார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
இப்போது ஐந்தாயிரம் வழங்கப்பட்டது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்; இருக்கிறது. எதிர்வினைகள் அப்படித்தான் இருக்கின்றன. தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துக் கூறியிருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்பட திமுக மற்றும் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் வரவேற்றும்; மற்ற கூட்டணிக் கட்சியினர் விமர்சித்தும். என்ன, எதிர்க்கட்சிகளாகவே இருந்தாலும்கூட யாரும் கண்டனம் தெரிவிக்க முடியாது! ஐந்தாயிரம் ரூபாய் விநியோகத்துக்கு யாரும் எதிர்ப்பு அல்ல, அதிருப்திகூட தெரிவிக்க முடியாது. ஏனென்றால், தேர்தல் நேரம், பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எல்லாம் வாக்குகள்!
தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டால் எந்தவோர் அறிவிப்பையும் அரசாலும் முதல்வர் ஸ்டாலினாலும் வெளியிட இயலாது. குறைந்தபட்சம் இந்தத் தொகையைச் சேர்ந்தாற்போலக்கூட வழங்க முடியாது. ஒருவேளை, யாரேனும் தொடுக்கிற ஏதேனும் ஒரு மனுவின் மீது, உச்ச நீதிமன்றமோ அல்லது எந்தவொரு நீதிமன்றமோ உரிமைத் தொகை விநியோகத்தையே ஒட்டுமொத்தமாக நிறுத்திவைக்கவும் நேரிடலாம்.
உள்ளபடியே, இது வழக்கமாக அரசு கொடுக்கிற தொகைதான். கூடுதலாக இரண்டாயிரம் சேர்த்து, போனஸ் மாதிரி அல்லது ஆட்சிக்கு வருவதற்கான அட்வான்ஸ் மாதிரி, மொத்தமாக வழங்கிவிட்டார்கள்.
பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு, மாணவ, புதுமைப்பெண் திட்டத்தில் ரூ. 2 ஆயிரம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ. 2 ஆயிரம், உலகம் உங்கள் கையில் லேப்டாப் போன்ற வீட்டுக்கு வீடு செல்லும் திட்டங்களுடன் ஏற்கெனவே, ஜனவரியில் பொங்கல் விழா பரிசாக ரூ. 3 ஆயிரமும் அந்த மாத உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஒரு மாதம்கூடத் தாண்டவில்லை. இப்போது மேலும் ரூ. 5 ஆயிரம்! ஏதோவொரு கணக்கு, நிச்சயம் தேர்தலை மனதில்வைத்துதான்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய், புதிதாகக் கோடைக்காலச் சிறப்புத் தொகை ரூ. 2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக்காலம் வருகிறதா என்ன? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். வாஸ்தவம்தான், அது அரசியல். ஆனால், இப்போதெல்லாம் சினிமாவில் ஹீரோக்களே காமெடியும் செய்வதைப் போல ஏதாவது வேண்டும் என்று ஒன்றைச் சேர்த்திருக்கிறார், ‘வழக்கமாக மாதந்தோறும் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13 ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?!’ - 14, 15 ஆம் தேதிகள் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்றெல்லாம் யாராவது அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆமாம், காலையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது, ஏன், வெறும் ட்வீட்டுடன் விஜய் நிறுத்திக்கொண்டுவிட்டார் எனத் தெரியவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த சேலம் கூட்டத்தில் சுடச்சுட விஜய் பேசியிருக்கலாம். ஏனோ பேசவில்லை (ஏற்கெனவே எழுதிவைத்த ஸ்கிரிப்ட்டைக் கடைசி நேரத்தில் மாற்ற வேண்டாம் என நினைத்துவிட்டிருப்பார்களோ?).
தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுகள் தெரிந்தும் தெரியாமலும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக இருக்கிறது காங்கிரஸ். கழற்றிக்கொள்ள நினைக்கும் காங்கிரஸ்காரர்கள் இனி கொஞ்சம் யோசிப்பார்களோ என்னவோ. கூட்டணிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுகளும் தொடங்கும். இதனிடையே, எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்.
எப்படியோ கூட்டணியை இறுதி செய்து அறிவிக்கும் முன்னரே, ஒரேயொரு பந்தில் சகட்டுமேனிக்கு நிறைய விக்கெட்டுகளைத் திமுக கூட்டணிக்காகச் சாய்த்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.