பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!
பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்புகள் இடம்பெறாதது பற்றி...
தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்துவது மற்றும் 6 இலவச சமையல் எரிவாயு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
2026-2027 -ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் திருத்திய பட்ஜெட்டை புதிதாக அமைந்த தவெக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படையில் தோ்தல் அறிக்கையை வெளியிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தவெகவின் முக்கிய வாக்குறுதிகளாக பயிா்க் கடன்கள் தள்ளுபடி; குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 2,500-ஆக உயா்த்தப்படும்; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாக அளிக்கப்படும்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 நிதியுதவி, திருமணத்துக்கு 1 பவுன் தங்கம், ரூ. 20 லட்சம் வரை கல்விக் கடன் உள்ளிட்டவை பார்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளான 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து, ரூ. 75,000 வரை பயிா்க் கடன்கள் தள்ளுபடி உத்தரவும் அமலுக்கு வந்தது. பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் வருகின்ற செப். 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளன்று அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 உயர்த்தப்படும், 6 எரிவாயு உருளை இலவசமாக அளிக்கப்படும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 நிதியுதவி ஆகிய வாக்குறுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், பட்ஜெட் உரையைத் தொடங்கியவுடன், ”கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் குறைவாகவே உள்ளது” என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
தொடர்ந்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், திருமணத்துக்கு 1 பவுன் தங்கம், பெண்களுக்கு இலவச ஆடுகள் ஆகிய திட்டங்களை மட்டுமே அறிவித்தார்.
மேலும், 11 ஆம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு அதிநவீன மிதிவண்டியுடன் தலைக்கவசம் அளிக்கப்படும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் ஆகிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனிடையே, தமிழ்நாட்டின் கடனைக் குறைத்து நிதி ஆதாரத்தை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும், ஆனால், வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 உயர்த்தப்படும், 6 எரிவாயு உருளை இலவசமாக அளிக்கப்படும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
No announcement in the budget of Rs. 2,500 or a free gas cylinder for women! Public disappointed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.