தமிழக பட்ஜெட் 2026! அதிக கவனம் பெறும் டாப் டென் அறிவிப்புகள்!
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், அதிக கவனம் பெறும் டாப் டென் அறிவிப்புகள் பற்றி..
2026 - 2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
நிதியமைச்சா் என்.மரிய வில்சன் காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் உரை இடம்பெற்றது. இதில், ஏற்கனவே இருந்த திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்திருந்தன.
அதுபோலவே, சில திட்டங்கள், சிறு மாற்றங்களுடன் பெயர்கள் மட்டும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை, மகளிர் உரிமைத் தொகை பற்றி அறிவிப்பு இல்லை என்றும் இதனை அதிகம் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
எனினும், தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானபோது அதிக கவனம் பெற்ற சில அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. அதில் முதல் பத்து அறிவிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பழைய திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்த நிலையில், தற்போது பெரும்பாலான திட்டங்களுக்கு வெற்றி என்ற புதிய பெயர் இணைந்துகொண்டுள்ளது.
1. எங்கிருந்தும் பத்திரப்பதிவு
வணிக வரிகள் துறை நேரில் சந்திக்கத் தேவையில்லாத (Faceless), தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறைக்கு மாறும்; திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது மட்டுமே கடுமையான நடவடிக்கை.‘எங்கிருந்தும் பதிவு’ அறிமுகப்படுத்தப்படும்; பதிவுத்துறை படிப்படியாக முழுமையாகக் காகிதமில்லா, நேரடி வருகையற்ற பதிவு முறைக்கு மாறும். வணிக வரிகள் துறைக்கு ரூ.651 கோடி, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு.
2. ‘சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ்’ திட்டம்
முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணிநேரப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு. காலை உணவுத் திட்டம் 6 - 8ம் வகுப்பு வரை விரிவாக்கம். மொத்தமாக ரூ.710 கோடி ஒதுக்கீடு
3. டெண்டர் விதிமுறைகள்
பொது டெண்டர்களில் தேவையற்ற சான்றிதழ் கட்டாயம் நீக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த ஒரு துறையிலும் பதிவு செய்துள்ள காண்டிராக்டரும் தகுதியிருப்பின், மற்ற துறைகளின் டெண்டர்களிலும் பங்கேற்கலாம். இளைஞர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர் பங்கேற்க குறைந்த மதிப்பு டெண்டர் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. டெண்டர் மதிப்பீடுகள் தனிநபர்/கட்சிகளுக்குச் செல்வதைத் தடுத்து அரசு கருவூலத்திற்கு நேரடியாகச் சேர்ப்பு. பலஅடுக்கு மற்றும் உயரமான அடுக்குமாடி குடியிருப்புத் திட்ட அனுமதி அதிகாரப் பகிர்வு (Delegation of Powers) மூலம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அளவிலேயே வழங்கப்பட்டு ஊழல் அகற்றம்.
4. வெற்றி வீடு திட்டம்
வெற்றி வீடு திட்டத்தின் கீழ் கூரை வீட்டுக் குடும்பங்களுக்கு வீடு ஒன்றுக்கான அலகுத் தொகை ரூ.3.10 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்வு; முதல் ஆண்டில் 70,000 வீடுகள்; ரூ.3,500 கோடி ஒதுக்கீடு.
5. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.560 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
6. மண்ணின் மகள், அண்ணன் சீர்
ஆதிதிராவிடர்/பழங்குடி பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக்கும் மண்ணின் மகள் திட்டத்துக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
திருமண நன்னாளில் ‘அண்ணனின் சீராக’ எட்டு கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.812 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
7. சூரிய மின் சக்தி - ஸ்மார்ட் மீட்டர்
பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்துடன் இணைந்த ‘வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்’ நுகர்வோருக்கு அதிகபட்சம் 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சென்னையில் அனைத்து நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படும். 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு விலையில்லா மின்சாரம் 100-லிருந்து 200 யூனிட்டாக உயர்வு; 1,545 கோடி ரூபாய்.
8. மெட்ரோ ரயில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னெடுப்பு.
9. இளைஞர்களுக்கு பயிற்சி
அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில், வாகன மெக்கானிக்குகள் மற்றும் வாகனப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள 22,500 நபர்களுக்கு மின்சார வாகனம் மற்றும் மின்கலன் பராமரிப்புப் பயிற்சி; 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
10. சுற்றுலா
உள்ளூர் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் உணவு மற்றும் கலைத் திருவிழா; ரூ.20 கோடி ஒதுக்கீடு. மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் இலவசப் புனிதப் பயணம் திட்டத்துக்கு ரூ.20 கோடி போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
Tamil Nadu Budget 2026! Top ten announcements drawing the most attention!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.