FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பல மடங்கு உயர்த்தப்பட்ட காவல் நிலையங்களுக்கான செலவு நிதி! ரூ. 71 கோடி ஒதுக்கீடு!

ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
பகிர்:

முதல்வர் சி ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலைநிறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நோக்கத்தினை, தமிழ்நாடு காவல்துறை திறம்பட நிறைவேற்றுவதுடன், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் ஆகியவற்றை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகிறது.       

Advertisement

Advertisement

காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்துவரும் சூழலில், அதற்கான செலவினமும் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்திற்கொண்டு, மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்குவதன் மூலம், காவல் நிலையங்களுக்கான நிர்வாக மற்றும் செயலாக்கச் செலவினங்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் களைவதுடன், இந்தச் செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைவதோடு,  ஊழலைத் தடுக்கவும், ஒழிக்கவும் வழிவகைசெய்யும்.

இந்த நிலையில், இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டுமென்ற, முதல்வரின் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், காவல்துறையில் நிர்வாகம் மற்றும் செயலாக்கத்திற்கு அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்கப்படும் என்று 2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிகையின்போது முதல்வர் சி. ஜோசப் விஜய்யால் அறிவிக்கப்பட்டது.  

இந்த நிலையில், மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்காக ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுவரும் எதிர்பாராச் செலவு நிதி, முறையே, 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

இதற்கென, ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

summary

As per the orders of Chief Minister C Joseph Vijay, as part of the move to create corruption-free government offices, a government order has been issued allocating Rs. 71 crore to increase the daily retail expenditure of all police stations in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments