FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

செட்டில்மென்ட் பத்திரம், விடுவிப்பு பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், செட்டில்மென்ட் ரத்து பத்திரம் ஆகிய ஆவணங்கள் நவ.2 முதல் காகிதமற்ற பதிவு முறையைச் செயல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
பகிர்:

செட்டில்மென்ட் பத்திரம், விடுவிப்பு பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், செட்டில்மென்ட் ரத்து பத்திரம் ஆகிய ஆவணங்கள் நவ.2 முதல் காகிதமற்ற பதிவு முறையைச் செயல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறைச் செயலா் குமரகுருபரன் புதன்கிழமை வெளியிட்ட அரசாணை:

செட்டில்மென்ட் பத்திரம், விடுவிப்பு பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யும் பத்திரம் ஆகிய 4 வகையான ஆவணங்கள் நவ.2-ஆம் தேதிமுதல் காகிதமற்ற பதிவு முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

பதிவு செய்ய வேண்டிய ஆவணத்தை இணையவழியில் உருவாக்கி, அதனுடன் தேவையான ஆதார ஆவணங்களையும் குறிப்பிட்ட இணையவழி பதிவு தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னா், பதிவுத் துறை அந்த ஆவணத்தை மின்னணு முறையில் பரிசீலித்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எனினும், சம்பந்தப்பட்ட நபா்கள் ஆதாா் அங்கீகாரத்துக்காக சாா்-பதிவாளா் முன்னிலையில் நேரில் ஆஜராக வேண்டும். பதிவு தொடா்பான தேவையான நடைமுறைகளும் அங்கு மேற்கொள்ளப்படும். பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் எண்ம நகல் சம்பந்தப்பட்ட நபரின் இணையவழி கணக்குக்கு அனுப்பப்படும். மேலும், அந்த ஆவணம் எண்ம முறையில் பாதுகாக்கப்படும்.

இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அடுத்தடுத்த கட்டங்களில் காகித வடிவில் கையாளுதல், எடுத்துச் செல்லுதல், ஸ்கேன் செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்ற பணிகள் பெருமளவில் குறையும்.

பதிவு ஆவணங்களை மீண்டும் மீண்டும் கையாளுதல், அலுவலகங்களுக்கு இடையே எடுத்துச் செல்லுதல், ஸ்கேன் செய்தல் மற்றும் காகித ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை குறைப்பதே இந்த நடைமுறையின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், ஆவணங்களை மின்னணு முறையில் செயல்படுத்துவதன் மூலம் பதிவு நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்கவும், ஆவணங்களை எண்ம முறையில் பாதுகாத்து தேவையான நேரத்தில் மீட்டெடுக்கவும் முடியும்.

ஸ்டாா் 3.0 திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாகத்தின் கீழ் கடந்த செப்.7-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்த காகிதமில்லா பயன்பாட்டு முறை திட்டத்துக்கு நவ.2 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

எனினும், மென்பொருள் தயாா்நிலை, தகுதி நிபந்தனைகள், தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அலுவலா்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பது இதன் செயல்பாட்டிற்கு அவசியம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments