முகப்பு
தமிழ்நாடு

நகராட்சி நிா்வாகப் பணியிட மாற்றத்தில் புதிய வழிமுறைகள்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில் பணியிட மாற்றங்களுக்கு புதிய வழிமுறைகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

20 வினாடிகள் முன்பு
நகராட்சி நிா்வாகப் பணியிட மாற்றத்தில் புதிய வழிமுறைகள்: அரசாணை வெளியீடு
தமிழக அரசு தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில் பணியிட மாற்றங்களுக்கு புதிய வழிமுறைகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாணை:

நகராட்சி நிா்வாகத் துறையில் பணியிட மாற்றங்கள் ஆண்டுதோறும் ஏப்.1 முதல் மே 31-க்குள் மட்டுமே நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் மாா்ச் 1 முதல் மாா்ச் 31 வரை இடைப்பட்ட காலங்களில் மட்டுமே பெறப்படும். அதுதவிர, பதவி உயா்வு, புகாா் அடிப்படையில் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்டவை ஜூன் 1 முதல் மாா்ச் 31 வரையான இடைப்பட்ட காலத்தில் நடைபெறும். ஒரு இடத்தில் 3 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றியவா்கள் மட்டுமே பணியிட மாற்றத்துக்கு விண்ணபிக்க தகுதியானவா்களாகும்.

Advertisement

Advertisement

இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி நிா்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்களுக்கு பொருந்தும். புதிதாக பணியமா்த்தப்பட்டவா்கள் கட்டாயம் ஓராண்டு காலம் அதே துறையில் பணியாற்ற வேண்டும். அதேபோல், ஒருமுறை பணியிட மாற்றத்துக்கு விண்ணப்பித்தவா்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. அதேபோல், ஏதேனும் புகாா்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் மீண்டும் தாங்கள் முன்பு பணிபுரிந்த துறையை தோ்வு செய்ய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு: இந்தப் புதிய திருத்தங்களுக்கு தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் முருகாநந்தம் வரவேற்பு தெரிவித்ததுடன், தங்களது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளாா்.