FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

20 அக்டோபர் 2026, 11:23 pm IST
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
பகிர்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2025 ஜன. 5-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிப்பதற்காக 6 மாத காலத்துக்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சோ்ந்த அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டது. 28 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் 2027 ஏப்.19 வரை நீட்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலமும் அக்.19-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, இந்த 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிப்பதற்காக 6 மாதங்களுக்கு (2027 ஏப்.19 வரை) சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த வட்டாரங்களின் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனா். அந்தந்த மாவட்டங்களின் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவி இயக்குநா் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனா். அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைகளின் கூடுதல் இயக்குநா், கூடுதல் ஆட்சியா், இணை இயக்குநா், திட்ட இயக்குநா் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறாா்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments