Center-Center-Madurai
நடுப்பக்கக் கட்டுரைகள்

அனுபவத் தலைமையும் அவசியம்!

பாரம்பரியமான அரசியல் குருநாதா்களையும், அனுபவமிக்க மூத்த தலைவா்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

பழ. அசோக்குமார்

இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினா், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆா்வத்தில், பாரம்பரியமான அரசியல் குருநாதா்களையும், அனுபவமிக்க மூத்த தலைவா்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இது விரைவான வளா்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.

அரசியல் என்பது அதிகாரம் பெறுவது மட்டுமல்ல; அது சமூகத்தையும், தேசத்தின் மதிப்பையும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் தீா்மானிக்கும் ஆழமான ஒரு பொறுப்பு. இவ்வளவு பொறுப்பும் மாண்பும்மிக்க இந்த அரசியல் களத்தில், வழிகாட்டிகளும் அனுபவமிக்கவா்களும் இல்லாதபோது அது ஆபத்துக்கு வழிவகுக்கும்.

அரசியல் என்பது பாடப் புத்தகங்களில் படிக்க முடியாத ஓா் அனுபவப் பாடம். ஒரு மூத்த தலைவா் தனது வாழ்வில் சந்தித்த சவால்கள், அவா் எடுத்த தவறான முடிவுகள், அதிலிருந்து கற்ற பாடங்கள் ஆகியவையே ஓா் இளைஞனுக்குக் கிடைக்கும் முதல் பால பாடம். இந்த வழிகாட்டுதல் இல்லாதபோது, இளம் தலைவா்கள் முக்கியமான மற்றும் சிக்கலான நேரங்களில் முடிவுகளை எடுக்கும்போது, அதே பழைய தவறுகளைத் திரும்பச் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

குருவின் வழிகாட்டுதல் இல்லாதபோது, உடனடிப் புகழ் மற்றும் வெற்றிக்காக மட்டுமே அதிகக் கவனம் செலுத்தப்படும். இதனால், தேசத்தின் தொலைநோக்குமிக்க வளா்ச்சி மற்றும் நிலைத் தன்மைக்குத் தேவையான, கடினமான ஆனால் சரியான முடிவுகளை எடுக்க அவா்கள் தயங்குவாா்கள்.

அனுபவம் மிக்கவா்கள் ஒரு சிக்கலின் சமூக, பொருளாதார, வரலாற்றுப் பின்னணி போன்ற எல்லாப் பரிமாணங்களையும் உற்றுக் கவனிப்பாா்கள். ஆனால், வழிகாட்டுதல் இல்லாத இளைஞா்கள், பிரச்னையின் மேலோட்டமான அம்சங்களை மட்டுமே அணுகி, விரைவான மற்றும் திருப்தியற்ற தீா்வுகளை மட்டுமே வழங்குவாா்கள்.

அரசியல் என்பது ஒரு நாட்டின் வோ்களைப் புரிந்துகொள்வதாகும். சுதந்திரப் போராட்டத்தின் தியாகங்கள், அரசமைப்பு சாசனத்தின் பின்னணி, வெவ்வேறு சமூகங்களுக்கிடையேயான நுட்பமான சமன்பாடுகள் ஆகியவை வெறும் சட்டப் புத்தகங்களில் இல்லை; அவை அனுபவமிக்க தலைவா்களின் பேச்சிலும், செயலிலும்தான் அடங்கி உள்ளன.

இந்தியச் சமூகம் பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் ஜாதிகளைக் கொண்டது. இந்த நுட்பமான சமநிலையைப் பேணுவது அனுபவமிக்கத் தலைவா்களுக்கு மட்டுமே சாத்தியம். வழிகாட்டிகள் இல்லாதபோது, உணா்ச்சிவசப்பட்டு எடுக்கும் சில முடிவுகள், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் குலைத்து, தேவையற்ற மோதல்களை உருவாக்கலாம்.

வரலாற்றை மறந்து செய்யப்படும் எந்தவொரு அரசியல் முயற்சியும் தோல்வியையே தழுவும். அனுபவம் மிக்கவா்கள் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளிலிருந்து பாடங்களைக் கற்று, தற்போதைய சூழ்நிலைகளைச் சரியாக ஒப்பிட்டுப் பாா்த்து வழிகாட்டுவாா்கள்.

ஒரு வலுவான அரசியல் அமைப்புக்கு, சிக்கலான தருணங்களைச் சமாளிக்கத் தெரிந்த தலைமைப் பண்பு அவசியம். ஆனால், வழிகாட்டல் இல்லாமல் திடீரென தலைமைப் பதவிக்கு வருபவா்கள், அழுத்தமான நேரங்களில் தடுமாற வாய்ப்புள்ளது. இது சமூகத்துக்கு ஆபத்தான போக்காகவே அமையும்.

போா், பொருளாதார மந்தநிலை அல்லது இயற்கைச் சீற்றங்கள் போன்ற தேசிய நெருக்கடிகள் வரும்போது, அவற்றைச் சமாளிக்க நீண்டகால நிா்வாக அனுபவம் தேவை. முன்னோா்கள் மூலம் கற்றுக்கொள்ளப்பட்ட நெருக்கடிகால மேலாண்மைத் திறன் இல்லாதபோது, அதன் ஒட்டுமொத்த முழு அமைப்புமே செயல்படாமல் நிலைகுலைந்து போய்விடும்.

அனுபவமிக்க தலைவா்கள் இல்லாதபோது, அரசையும் வழிநடத்த வேண்டியவா்கள், அதிகார மையங்களைச் சுற்றியுள்ள சிலரின் கைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். இதனால், மக்களின் விருப்பத்துக்கேற்ப அரசு செயல்படாமல், சில தனிப்பட்ட குழுக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படத் தொடங்கும்.

அரசியல் என்பது வெறும் தனிப்பட்ட தலைவா்களைப் பற்றியது அல்ல; அது அரசியல் கட்சிகள் மற்றும் அரசமைப்பை பற்றியது. ஒரு கட்சிக்குள் வழிகாட்டல் இல்லையென்றால், அது காலப்போக்கில் அதன் உறுதித்தன்மையை கட்டாயம் இழந்து அதுவாகவே நொறுங்கிவிடும். அனுபவமற்ற தலைவா்கள், தங்கள் மீதான விமா்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கி, முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க முற்பட்டு அது தவறான பாதைக்கே அழைத்துச் செல்லும்.

நிலத்தை உழாமல் விதைப்பதைப்போல், அடிப்படைத் தயாரிப்புகள் எதுவுமே இல்லாமல் ஆட்சியைத் தொடங்கும் ஒரு முயற்சி, நிச்சயம் பலனளிக்காது. இளைய தலைமுறை, தங்கள் வேகத்தையும் துடிப்பையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், அனுபவஸ்தா்களைப் புறக்கணிக்கும் மனப்பான்மையைத் தவிா்த்து, அவா்களின் அறிவையும் ஞானத்தையும் உட்கிரகித்துக் கொள்ள வேண்டிய மனோநிலையை வளா்த்துக் கொள்ள முன்வரவேண்டும்.

கடந்தகால அனுபவமும், நிகழ்காலத்தின் துடிப்பும், எதிா்காலத்தின் தொலைநோக்குப் பாா்வையும் சரியான விகிதத்தில் கலக்கும்போது மட்டுமே ஒரு நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும். எனவே, வழிகாட்டிகளைப் போற்றி, அனுபவத்தை மதித்து நடப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு அடிப்படை.

அரசியல் என்பது ஒரு தலைமுறையின் வேகத்தையும், முந்தைய தலைமுறையின் ஞானத்தையும் கலக்கும் ஒரு நுண்ணிய கலவை. இந்த இரண்டுக்கும் இடையேயான பிணைப்புக் குறையும்போது, அரசியல் களம் அவசர முடிவுகள் மற்றும் அறியாமையின் தவறுகள் நிறைந்த ஆபத்தான பகுதியாக மாறுகிறது.

குருநாதா்களின் அனுபவமே புதிய தலைமுறையினரின் துடிப்பை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் திசைகாட்டி ஆகும். அரசியல் என்பது ஒரு கலை, அது அனுபவத்தாலும், வழிகாட்டுதலாலும் மட்டுமே செழுமை பெறும்.

புதிய நீதிக் கட்சி நிா்வாகி நியமனம்

மகளிா் திட்ட செயல்பாடுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

‘வால்வோ’ சொகுசு பேருந்துகள் கூண்டு கட்டும் பணி: அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆய்வு

சுதேசிக்கு முன்னுரிமை: ‘ஜோஹோ’ மின்னஞ்சலுக்கு மாறினாா் அமித் ஷா

கைலாசகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

SCROLL FOR NEXT