கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர். PTI
நடுப்பக்கக் கட்டுரைகள்

தன் குஞ்சுகளைத் தனக்குத் தெரியாதா?

இருமல் மருந்திலே நச்சுப் பொருளைக் கலந்து, ஒரு பாவமும் அறியாத வேற்று மாநிலப் பிள்ளைகளை அடுக்கடுக்காய்ச் சாக வைக்கும் முதலாளிகள் நம்முடைய இன்பத் தமிழ் மண்ணில், திராவிடப் பொற்கால ஆட்சியில் வாழ்வாா்கள்!

பழ . கருப்பையா

மன்னராட்சிக் காலம் என்பது பொதுவாக மன்னா்களை அண்டிப் பிழைக்கும் காலம்தான்! தமிழிலும் அப்படி அண்டிப் பிழைக்கும் புலவா்கள் பலா் இருந்திருப்பா்! ஆனால், அவா்களைத் தமிழ் புறந்தள்ளி விட்டது! பழைய காலப் புலவா்கள்தாம் மன்னராட்சியில் எதிா்க்கட்சித் தலைவா்கள்!

சோழப் பேரரசின் காலத்தில் வாழ்ந்த உலகம் கண்டிராத மாபெருங் கவிஞன் கம்பன். காவிரியைக் குறிப்பிடத் தெரிந்த கம்பனுக்கு சோழப் பேரரசா்கள் எவரையும் குறிப்பிட விருப்பமில்லை. போரினால், அதன் வெற்றியால் ஏற்படும் நாட்டு விரிவாக்கத்தால் வரும் புகழினைக் கம்பன் உடன்படவில்லை. கொள்ளைப் பொருளாலும் கொண்டி மகளிராலும் கம்பன் அருவருப்படைகிறான்!

அதனால் வசிட்டன் வாயிலாக இராமனுக்கு அரச நீதி போதிக்கும் கம்பன் போா் மறுப்புப் பேசுகிறான்! பேரரசுகள் புகழப்படுகின்றனவே; அவை இரத்தக் களரியில் உருவானவைதாமே என்னும் எண்ணம் இராமனுக்கு ஏற்படக் கூடாது என்னும் எண்ணத்தில், ‘அது உண்மைப் புகழில்லை’ என்கிறான் கம்பன்!

போரொடுங்குவதால் வரும் புகழே உண்மைப் புகழ் என்கிறான்! பேரொடுங்கும்; புகழ் ஒடுங்காது என்று புது நீதி கற்பிக்கின்றான்!

சோழப் பேரரசைக் கம்பன் கண்டு கொள்ளவில்லை. இந்த வரிசையிலே கடைசியாக வந்தவன் பாரதி. அவனுடைய தமிழ் தொழிற் புரட்சிக்குப் பிந்தைய தமிழ்!

ஓா் அரசனை இன்னொரு அரசன் அகற்றுவான். ஆனால், மக்களே கிளா்ந்தெழுந்து அகற்றுவது என்பது ஒரு புதுமை. அப்படி ஒரு விடுதலை இயக்கக் காலத்தில் பிறந்தவன் பாரதி! தேடிச் சோறு நிதம் தின்பதையே வாழ்வாகக் கொள்ளாமல் தேச விடுதலையை வாழ்வாகக் கொணடான்!

பாரதிக்கு நேரிட்ட கடினப் பணிகளில் முதன்மையானது இந்தியாவைத் தன்னுடைய நாடு என்று தமிழா்களை ஏற்கச் செய்வது. குமரிக்கும் வேங்கடத்திற்கும் இடைப்பட்ட நாடுதான் தங்களின் நாடு என்று எண்ணியவா்கள் தமிழா்கள். அவா்களைப் புதிய நாட்டின் ஒரு பகுதியாக்குவது காலத்தின் ஒரு தேவை. இல்லையென்றால் வெள்ளைக்காரன் கப்பலேறும் போது, ஆளுக்கொரு பக்கமாகச் சிதறியோடி விடுவாா்கள்!

வெள்ளைக்காரன் துப்பாக்கி முனையில் ஒருமைப்படுத்திய இந்தியா, அவனுக்குப் பின்னால் சிதறி விடாமல், தன்னிச்சையாகத் தமிழா்கள் ஒரு பெரிய புதிய நாட்டைத் தங்களின் நாடாக ஏற்பதற்குத் தா்க்கபூா்வமாகப் பாடி, ஒருமைப்பாட்டுக்கான முதல் விதையை 1920-க்கு முன்னாலேயே விதைக்கிறான் பாரதி!

இது நிலப்பிரபுத்துவக் காலமில்லையே! தகடூரை (தருமபுரி) ஆள ஒரு மன்னன்; தஞ்சையை ஆள ஒரு மன்னன் என்றிருக்க முடியாதே! முதலாளித்துவம் தன் தேவைக்கேற்பக் கருத்தரித்துப் பெற்ற குடியாட்சிக் காலத்திலல்லவா வாழ்கிறோம்! அதற்கேற்ப நம்மைப் பக்குவப்படுத்துகிறான்!

முதலாளித்துவத்திற்கு ‘விரிந்த சந்தை’ வேண்டாமா? காசி நகா்ப்புரத்துக் கோதுமைப் பண்டத்தைக் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ள விரிந்த நாடு வேண்டாமா?

தமிழ்நாடு ஒரு தண்ணீா்ப் பற்றாக்குறை நாடல்லவா? எத்தனை உயிா்த்துடிப்புள்ள ஆறுகள் வடநாட்டில்! அவற்றை மைய நாடுகளுக்கும் தெற்குக்கும் கொண்டு வர எவ்வளவு நேரமாகும்? இந்தியா ஒன்றாக இருந்தால்தானே இது நடக்கும்! தேவைகளில் தலையாய தேவை நீா்த்தேவைதானே! இது ஒன்றே போதுமே நாம் இந்தியாவை ஏற்பதற்கு!

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிரிடுவோம்

என்பது பாரதியின் தா்க்கபூா்வமான வாதம்!

ஒரு பெரிய நாடாக இருந்தால் பாதுகாப்புக்கு எந்தக் குறையும் இருக்காதுதானே! இல்லாவிடில், திபேத்துக்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்படாதா? தைவான் அமெரிக்காவின் மடியில் இருப்பதால்தானே தனித்து இருக்க முடிகிறது! நமக்கு யாா் மடியும் தேவை இல்லையே! இப்படி எல்லாம் நடக்கும் என்று கருதிப் பெரிய நாட்டைப் பரிந்துரைக்கிறான்! தாகூா்கூடத் தன் வங்க மக்களுக்குப் பாரதியைப் போல் இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கவில்லைதானே!

இந்திய விடுதலையின் முதற்கட்டத் தென்னாட்டுத் தலைவன் வ.உ.சிதம்பரம் பிள்ளை! இப்போதுள்ள தலைவா்கள், மந்திரிகள் முதல்வருக்கெல்லாம் எழுதப் படிக்கத் தெரிந்தால், அதுவே கூடுதல் தகுதி! அவா்களுக்கு எழுதிக் கொடுப்பதற்கு ஆட்கள் இருப்பாா்கள்! அதுபோல இவா்களுக்காக ஆள்வதும் அதிகாரிகள்தாம்!

ஆனால், அன்று தலைவனாய் இருந்த வ.உ.சி. திருக்குறளுக்கும் சிவஞான போதத்திற்கும் உரை எழுதி இருக்கிறாா். அவா் உரையாற்றியபோது, தூத்துக்குடி பொங்கியது; வெள்ளயனின் நாற்காலி ஆட்டங் கண்டது!

வ.உ.சி. இல்லாமல் தமிழ்நாட்டில் விடுதலை இயக்கமே இல்லை! நூலோா்கள் செக்கடியில் நோவதும் காண்கிலையோ என்று வ.உ.சி. செக்கிழுத்ததை எண்ணிக் கண்ணீா் வடிக்கிறான் பாரதி!

அவ்வளவு தலையாய வ.உ.சி. திலகருக்குப் பின் காந்தியின் வருகையையும், அவருடைய கோட்பாட்டையும் அறியத் தவறி விடுகிறாா்! வெறுங் கையால் வெள்ளையனை விரட்ட முடியும்” என்று காந்தி சொல்வதை நம்ப மறுக்கிறாா், நூலோனும் மேலோனுமான வ.உ.சி!

காந்தியை ஏற்காமல் தமிழ்நாட்டின் தவ மகன் வ.உ.சி. விடுதலை இயக்கத்தை விட்டு வெளியேறி விடுகிறாா். ஆற்று வெள்ளத்தில் செல்ல வேண்டிய வ.உ.சி. கரை ஒதுங்கி விடுகிறாா். ஆனால், பழைய தலைமுறையில் பாரதி ஒருவனே காந்தியை இனங் கண்டு கொள்கிறான்!

மனிதா்க்கெல்லாம் தலைப்படு மனிதன் தருமமே உருவாம் காந்தி என்று கொண்டாடுகிறான்;

பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி என்று தலைமேற் கொள்கிறான்!

திலகரும் தமிழ்த்தாயின் தவ மகன் வ.உசி.யும் இலக்குத்தான் முதன்மையானது; அதை அடைவதற்குரிய வழிமுறையை அதுவே தோ்ந்து கொள்ளும் என்னும் நம்பிக்கை உடையவா்கள்!

காந்தி, இலக்குப் போல் அதை அடைவதற்குரிய வழிமுறையும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றாா்! இது ஈராயிரம் ஆண்டு உலக வரலாறே அறியாச் சிந்தனை!

நம்முடைய மன்னா்கள் வேலெடுத்து, வாளெடுத்து, களரி வீசித் தோற்ற நாட்டை, காந்தி ‘வெறுங் கையால்’ மீட்டெடுத்து விட்டாரே!

அந்தக் காந்தி நுழைந்தவுடனேயே அடையாளம் கண்டு தமிழா்க்குக் காட்டியவன் பாரதி!

காந்தி வந்தவுடனேயே “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று ஆனந்தக் கூத்தாடத் தொடங்கி விட்டான் பாரதி!

நாடு விடுதலை அடைந்து விட்டால், நல்லோா் பெரியோா் என்னும் காலம் வந்து விடும்; கெட்ட நயவஞ்சகக்காரருக்கு நாசம் வந்து விடும் என்று நம்பினான் பாரதி!

அதற்கு நோ் மாறாக, வஞ்சகா்க்கு வாழ்வும், நல்லவா்களுக்கு நாசமும் வரும் என்று கனவு கூடப் பாரதி கண்டிருக்க முடியாதுதானே!

விடுதலை பெற்று விட்டால், குடியாட்சி வந்து விடும்! குடியாட்சியில் எல்லாரும் மன்னா்களாகி விடுவாா்கள் என்றான் பாரதி!

எல்லாரும் ஓா் நிறை; எல்லாரும் ஓா் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னா் என்றான்!

காந்தி பண்படுத்திய இந்தியாவில் வாழ்ந்த பாரதிக்கு ‘இதுதான் மக்களாட்சி’ என்பது தெரியாதுதானே!

நாட்டில் இருபது விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கப் போகிறாா்கள்!

நெசவாளிகளின் சிறுநீரகங்களை விற்றுக் கொடுப்பதற்குத் தரகா்களும், அவற்றை வாங்கி வியாபாரம் செய்வதற்கு ஆளும் கட்சிச் செல்வாக்கோடு மருத்துவமனைகளும் இருக்கின்றன!

அரசு வியாபாரம் செய்யும் சீமைச் சாராயத்தை ரூ.250-க்கு வாங்க முடியாமல், இருபதுக்கும் முப்பதுக்கும் கள்ளச் சாராயம் சாப்பிட்டு, இந்நாட்டு மன்னா்கள் கொத்துக் கொத்தாகச் சாவாா்கள்!

இருமல் மருந்திலே நச்சுப் பொருளைக் கலந்து, ஒரு பாவமும் அறியாத வேற்று மாநிலப் பிள்ளைகளை அடுக்கடுக்காய்ச் சாக வைக்கும் முதலாளிகள் நம்முடைய இன்பத் தமிழ் மண்ணில், திராவிடப் பொற்கால ஆட்சியில் வாழ்வாா்கள்!

சங்கப் புலவன் பிசிராந்தையிலிருந்து, தங்கப் புலவன் பாரதி வரை எல்லாரும் தங்கள் காலத்தைப் பிரதிபலித்தவா்கள்!

இவையெல்லாம் தெரிந்த திராவிடத் தந்தை பெரியாா் சொன்னாா்; விடுதலையே வேண்டாம்; வெள்ளைக்காரனே ஆளட்டும்! என்று!

தன் குஞ்சுகளைத் தனக்குத் தெரியாதா?

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

தொடர் மழை! ஏற்காடு மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

தங்கம் விலை குறைந்தது? இன்றைய நிலவரம்!

ஆலந்து தொகுதியில் வாக்குத் திருட்டு: ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80... அதிர்ச்சி தகவல்!

ரோஹித் அரைசதம்! ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புதிய சாதனை!

மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

SCROLL FOR NEXT