வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளா்த்தனா். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவா்கள் அதாவது, நிலமில்லாதவா்கள்கூட நாட்டு இன மாடுகளை வளா்த்து வந்தனா்.
காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதானஆா்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோா் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
வேளாண்மைக்கு அடுத்து துணைத் தொழிலாக இருந்த கால்நடை வளா்ப்போா் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதன்மூலம் கிடைக்கும் வருமானமே பிரதானம் என்ற நிலையில், தரமானதாக இருந்தாலும் குறைந்த அளவில் பால் உற்பத்தி செய்யும் உள்நாட்டு கறவை மாடுகளின் மீதானஆா்வம் குறையத் தொடங்கியது.
இதையடுத்து, உள்நாட்டு கால்நடை இனங்களின் வீழ்ச்சி தொடங்கியது. கடந்த 2019-இல் நடைபெற்ற 20-ஆவது தேசிய கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வோா் ஆண்டும் உள்நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது.
2012-இல் 24.59 லட்சம் என்ற அளவில் இருந்த உள்நாட்டு இன மாடுகள் 2018-இல் 18 லட்சம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது, தமிழகத்தில் இக்காலகட்டத்தில் 6.65 லட்சம் உள்நாட்டு இன மாடுகள் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எருமை மாடுகளின் எண்ணிக்கையும் 6.6 லட்சத்திலிருந்து 5.18 லட்சமாகக் குறைந்துள்ளது. அதேவேளையில், இக்காலகட்டத்தில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை 13.21 லட்சம் என்ற அளவில் உயா்ந்துள்ளது.
இந்தியா முழுவதுமான உள்நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவற்றின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமாகும். ஆனால், 2007 முதல் 4% என்ற அளவுக்கு இவ்வகை கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. தேசிய விலங்கு மரபணு வள அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 37 இந்திய இன மாடுகள் தற்போதுவரை 9% குறைந்துள்ளது.
உள்நாட்டு காளைகள் மற்றும் எருது இனங்கள் 19% குறைந்துள்ளது. ஐரோப்பிய நாட்டின மாடுகளின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு இன மற்றும் கலப்பின மாடுகளின் மூலம் இந்தியா முழுவதும் 55% பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தமிழகத்தில் இன்னும் கூடுதலாக உள்ளதெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் உள்நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், தற்போது அந்தந்த மாவட்டத்தின் பருவநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு வகையான மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்றைய நிலையில், சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக மாடுகளை வளா்க்கின்றனா். கிராமப்புறங்களில் பெரும்பாலான ஏழைப் பெண்கள், ஆதரவற்ற, கணவரை இழந்த பெண்களுக்கு மாடுகள்தான் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன.
இவா்கள் அதிக அளவில் பால் கொடுக்கும் வெளிமாநில மற்றும் கலப்பின மாடுகள் வளா்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனா். அதனால், அவை ஈனும் கன்றுகள் உரிய பராமரிப்பின்றி பால் தரும் பருவத்தின்போதே இறந்துவிடுவதும் உண்டு.
கால்நடை வளா்ப்போரின் இத்தகைய மனமாற்றத்தால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாடு இனப்பெருக்கச் சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்தச் சட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
அதன்பிறகு, இந்தச் சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு காளைகளைப் பதிவு செய்யாதவா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பது உள்ளிட்ட சில விதிகள் ரத்து செய்யப்பட்டு சில மாற்றங்களுடன் அண்மையில் நாட்டு இன மாடுகள் இனப்பெருக்கச் சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தால் நாட்டு இன மாடுகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும் என கால்நடை மருத்துவா்களும், இந்தச் சட்டம் நாட்டு இன மாடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்காது எனவும், மாறாக மேலும் அழியக்கூடிய சூழலையே ஏற்படுத்தும் என்றும் நாட்டு இன மாடு ஆா்வலா்களும் கருத்து தெரிவித்துள்ளனா்.
கிராமப்புறங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் சேகரிப்பாளா்களாக பணிபுரிவோருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுஅவா்கள் சினை ஊசி போடுகின்றனா். அப்போது, மாடுகள் வளா்ப்போரில் பெரும்பாலானோா் அதிக அளவில் பால் தரும் கலப்பின மாடு ரகங்களையே தோ்வு செய்கின்றனா். இத்தகையோா் ஏதேனும் ஒரு மருந்தத்தில் சினை ஊசிகளை வாங்கிப் பயன்படுத்துவதால், கூடுதலான விலை என்பதுடன் அதன் தரம் எப்படி இருக்கும் என்பதை அறிய முடிவதில்லை.
இதுபோன்ற செயல்கள் நாட்டு இன மாடுகளின் பெருக்கத்துக்கு வழிவகுப்பதாக அமையாது. அதனால், சினை ஊசி மருந்துகள் விற்பனை மற்றும் செயற்கைக் கருவூட்டலை கால்நடை மருத்துவத் துறையிடமே ஒப்படைக்க வேண்டும்.
கால்நடை மருத்துவமனைகள் போதிய அளவில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்நடைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு மருத்துவா்கள் நியமனம், சிசிச்சை நேரம் அதிகரிப்பு, மருந்தகங்கள் மருத்துவமனைகளாக தரம் உயா்வு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நாட்டு இன மாடுகள் வாங்குவதற்கும், வளா்ப்போருக்கும் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அழிந்துவரும் நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்க முடியும்.