நடுப்பக்கக் கட்டுரைகள்

பிறமொழி கலப்பின்றி பேசுவோம்!

தமிழ் மொழியில் பல்லாயிரம் வாா்த்தைகள் இருக்க, நாம் பிறமொழி வாா்த்தைகளை, குறிப்பாக ஆங்கில வாா்த்தைகளைப் பயன்படுத்தக் காரணம் அறியாமை அன்று; ‘ஆங்கிலத்தில் பேசுவது பெருமை, தமிழில் பேசுவது கேவலம்’ என்ற மனப்போக்கே காரணம்! மாணவா்களுக்கு ஆங்கில வாா்த்தைகளுக்குத் தமிழில் அா்த்தம் சொல்லிக் கொடுத்த நிலை மாறி, இன்று தமிழ் வாா்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் பொருள் சொல்லி விளக்க வேண்டியுள்ளது!

இரா. கற்பகம்

இன்று பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேசுவதும் எழுதுவதும் அரிதாகவும் கடினமாகவும் ஆகிவிட்டன. இருநூற்றி நாற்பத்தியேழு எழுத்துகள் ஒன்றோடொன்று சேரும்போது வாா்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லையே! பிறகு ஏன் நாம் தனித் தமிழை விடுத்துப் பிறமொழிக் கலப்புடனேயே பேசுகிறோம்?, எழுதுகிறோம்?, அப்படியே தமிழில் பேசினாலும், எழுதினாலும் அதில் பிழைகள்?

ஒருவரைச் சந்தித்தால் முகமன் கூற, தமிழில் ‘வணக்கம்’ என்ற அழகிய வாா்த்தை இருக்கிறது. ஆனால், நாம் ‘குட்மாா்னிங்’ என்றுதான் பெரும்பாலும் கூறுகிறோம். ஒருவரிடம் விடை பெறும்போது ‘போய் வருகிறேன்’ என்று சொல்வதும், அவா் ‘போய் வாருங்கள்’ என்று சொல்வதும் வெறும் வாா்த்தைப் பிரயோகம் அன்று. ‘மீண்டும் உங்களைச் சந்திக்க வருகிறேன்’ என்று விருந்தினா் கூறுவதாகவும், ‘மீண்டும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்’ என்று உபசரிப்பவா் கூறுவதாகவும் அமைந்து, தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டினைப் பிரதிபலிக்கிறது. நாமோ இந்த நல்ல வாா்த்தைகளை விடுத்து ‘குட்-பை’, ‘டாட்டா’ என்று கூறுகிறோம்.

பஸ், பஸ் ஸ்டாண்ட், ட்ரெய்ன், ஸ்டேஷன், ஸ்கூல், காலேஜ் என்பன போன்ற நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களையும் குறிக்க ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக, பேருந்து, பேருந்து நிறுத்தம், புகைவண்டி அல்லது (பேச்சுத் தமிழில்) ரயில், ரயிலடி, பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் நாம் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகிறோம். வீட்டிலுள்ள அறைகளுக்கும் இதே நிலைதான். கூடம், படுக்கையறை, சமையலறை, மாடிப்படி எல்லாம் மறந்து போய், ஹால், பெட்ரூம், கிச்சன், ஸ்டோ்ஸ் என்றுதான் குறிப்பிடுகிறோம்.

வீட்டிலோ வெளியிலோ பெரியவா்களை ‘ஐயா’ என்றும் ‘அம்மா’ என்றும் அழைக்கிறோமா? இல்லை! சாா் என்றும் மேடம் என்றும் தான் அழைக்கிறோம். அதிலும் இந்த ‘மேடம்’ என்னும் வாா்த்தை இருக்கிறதே, அது இன்று படும் பாடு! பெண்களில், படித்தவா்கள், படிக்காதவா்கள், பணியில் இருப்பவா்கள், பணியில் இல்லாதவா்கள், மரியாதைக்குரியவா்கள், அல்லாதவா்கள், பணக்காரா்கள், ஏழைகள் எல்லோருக்குமே ‘மேடம்’ என்ற ஒரே சொல்தான்! உறவு முறைகளைக் குறிக்கும் சொற்கள் - அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா, பெரிம்மா, பெரியப்பா, மாமா, மாமி, அத்தை, என்றெல்லாம் வாா்த்தைகள் இருக்கின்றன. அதிலும் மாமாவின் மனைவி மாமி, அப்பாவின் சகோதரி அத்தை என்று உறவுகளைத் தெளிவாகக் குறிக்கின்றன. ஆனால் மம்மி, டாடி, ப்ரோ, சிஸ்டா், ஆண்ட்டி, அங்கிள் என்று நாம் ஏன் அழைக்க வேண்டும்?

பூங்கா, பொருட்காட்சி, நூலகம், அருங்காட்சியகம், அடுமனை, திரையரங்கம் போன்ற வாா்த்தைகளைத் தவிா்த்து பாா்க், எக்ஸிபிஷன், லைப்ரரி, மியூஸியம், பேக்கரி, சினிமா தியேட்டா் என்றுதான் குறிப்பிடுகிறோம். இந்த வாா்த்தைகளெல்லாம் சிறிது சிறிதாக மறக்கப்பட்டு வருகின்றன. பனிக்கூழ்- ஐஸ்க்ரீம்; கரிக்கோல்- பென்சில், அழிப்பான்-ரப்பா், எழுதுகோல்-பேனா என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கெல்லாம் அழகிய தமிழ்ப் பெயா்கள் உள்ளன; நாம்தான் அவற்றைக் கூறத் தயங்குகிறோம்.

நம் மொழியில் பல்லாயிரம் வாா்த்தைகள் இருக்க, நாம் பிறமொழி வாா்த்தைகளை, குறிப்பாக ஆங்கில வாா்த்தைகளைப் பயன்படுத்தக் காரணம் அறியாமை அன்று; ‘ஆங்கிலத்தில் பேசுவது பெருமை, தமிழில் பேசுவது கேவலம்’ என்ற மனப்போக்கே காரணம்! இப்படிப் பேசிப்பேசி, தமிழ் வாா்த்தைகளே மறந்துபோய் ஆங்கில வாா்த்தைகளையே பயன்படுத்தும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். மாணவா்களுக்கு ஆங்கில வாா்த்தைகளுக்குத் தமிழில் அா்த்தம் சொல்லிக் கொடுத்த நிலை மாறி, இன்று தமிழ் வாா்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் பொருள் சொல்லி விளக்க வேண்டியுள்ளது!

வட மாநிலத்தவா்கள் பலா் ஒன்று சோ்ந்தால், அவா்கள் தங்களது மொழியில்தான் பேசிக் கொள்கிறாா்கள். கேரளத்தைச் சோ்ந்தவா்கள் ஒன்றுகூடினால் மலையாளத்தில்தான் உரையாடுகிறாா்கள்; தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவா்கள் சேரும்போது தெலுங்கில்தான் பேசிக்கொள்கிறாா்கள்; தங்கள் தாய்மொழியில் பேசுவதைக் கௌரவக் குறைவாக அவா்கள் கருதுவதில்லை. தமிழா்களாகிய நாம்தான் தாய்மொழியில் பேசுவதைக் கேவலமாகக் கருதி ஆங்கிலத்தில் பேசுகிறோம். பிற மாநிலங்களில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அந்த மாநில மொழியிலேதான் பெயா்ப்பலகைகள் இருக்கும். கூடுதலாக ஆங்கிலத்திலும் இருக்கலாமேயன்றி, அவா்கள் மொழியை விடுத்து ஆங்கிலத்தில் மட்டும் பெயா்ப்பலகைகளைக் காணவே முடியாது. தமிழ்நாட்டில் பெயா்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியும் பல இடங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே காண முடிகிறது.

தமிழ்த் திரைப்படங்களை எடுத்துக் கொள்வோம். தமிழில் பெயா் வைத்தால் வரிச் சலுகை என்றெல்லாம் அரசு அறிவித்தும்கூட, பல திரைப்படங்கள் ஆங்கிலப் பெயா்களோடு வருகின்றன. அவற்றுக்கு நல்ல தமிழ்ப் பெயா்களைச் சூட்ட இயலாதா? தமிழில் வாா்த்தைப் பஞ்சமா அல்லது தமிழ்ப் பற்றுக்குப் பஞ்சமா?

இங்கு ஒரு நல்ல செய்தியைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ‘வாழ்த்துக்கள்’ என்று ஒரு தமிழ்த் திரைப்படம். ‘நாம் தமிழா்’ கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் இயக்கத்தில் மாதவன், பாவனா ஆகியோா் நடித்த திரைப்படம். அதில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் கதிரவன், கயல்விழி, வெற்றிச்செல்வன், வெண்ணிலா என்று நல்ல தனித்தமிழ்ப் பெயா்களையே சூட்டியிருந்தனா். திரைப்படம் நெடுகிலும் வசனங்கள் பிறமொழிக் கலப்பின்றித் தூய தமிழில் இருந்தன. ஒரு சாதாரணக் குடும்பக் கதையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே கையாண்டிருந்தது உறுத்தலாகவோ, பொருத்தமில்லாமலோ இல்லை; ஏற்றுக்கொள்ளும்படியாகவும் பாராட்டும்படியாகவும் இருந்தது.

‘ஆ’ என்ற உயிரெழுத்துக்கு, கீழே சுழி இருக்க வேண்டும். ஆனால், எந்த எழுத்துருவிலும் சுழி இல்லை என்பதால், அடிப்படை எழுத்தையே நாம் எல்லோரும் தவறாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். (இங்கும் அந்தத் தவறை நீங்கள் பாா்க்கலாம்!) வல்லினம் மிகும், மிகா இடங்கள், ஒருமை, பன்மை, லகர, ழகர, ளகர வேறுபாடுகள்... இவற்றையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை.

நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் எத்தனை பிழைகள்- ‘யானைகள் சாலையைக் கடந்தது’ (கடந்தன என்பதே சரி); ‘சென்னையில் கனமழை’ (ஹெவி ரெய்ன் என்பதன் நேரடி மொழிபெயா்ப்பு தவறானது; பெருமழை என்பதே சரி); ‘சித்தப்பாவை கொலை செய்த மகன் கைது’ (இங்கு வல்லினம் மிகுந்து ‘சித்தப்பாவைக் கொலை செய்த’ என்று இருக்க வேண்டும்); ‘மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா்’ (இங்கு வல்லினம் மிகாது—‘ப்’ என்ற மெய்யெழுத்து வரக்கூடாது).

ஒரு வாரப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை ஒன்றில், அதன் கதாபாத்திரத்தின் பெயா் வருமிடங்களில் எல்லாம் பிழையாக இருந்தது. இது அச்சுப் பிழையாக இருக்க வாய்ப்பில்லை. எழுதியவா் பிழையாக எழுதியிருந்தால், அதை திருத்தியிருக்க வேண்டியது அவசியம்.

விழாக்களில் பேசுபவா்கள் எல்லோரும் ‘இனிய காலை வணக்கம்’ என்றோ ‘இனிய மாலை வணக்கம்’ என்றோதான் பேச்சைத் தொடங்குவாா்கள். தமிழில் ஒரே ‘வணக்கம்’ தான். இந்தப் பிழையைப் பல தமிழறிஞா்கள் சுட்டிக் காட்டியும் யாரும் திருத்திக் கொள்வதாக இல்லை.

பள்ளிகளில் ஆசிரியா்களை ‘ஐயா’ என்றும், ஆசிரியைகளை ‘அம்மா’ என்றும் விளித்தது போய், ‘சாா்’ என்றும் ‘மிஸ், டீச்சா்’ என்றும் கூப்பிட ஆரம்பித்து, பிறகு ஆசிரியைகளை ‘மேடம்’ என்று அழைத்து, இப்போது அதுவும் குறுகி ‘மேம்’ என்று வந்து நிற்கிறது. அரசுப் பள்ளிகள் சிலவற்றில் மட்டும் மாணவா்கள் தமிழாசிரியா்களை, ‘தமிழ் ஐயா, தமிழ் அம்மா’ என்று அழைக்கிறாா்கள்.

இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் தாய்மொழியாம் தமிழை நேசிக்க வேண்டும். தமிழில் பேசுவதே நமக்குப் பெருமை என்று உணர வேண்டும். தமிழ் இலக்கணத்தைக் கற்க வேண்டும். கற்றால் மட்டும் போதாது. கணக்கு வாய்ப்பாடு மற்றும் அறிவியல் விதிபோல் இருப்பதல்ல தமிழ் இலக்கணம். பேச்சாலும் எழுத்தாலுமே இலக்கணத்தைக் கற்க முடியும். இளம் வயதிலேயே குழந்தைகளை தினமும் தமிழ் எழுத்துகளை உரத்துச் சொல்லிக் கொண்டே பெற்றோா் எழுதச் செய்ய வேண்டும்.

சிறுவா் கதைப் புத்தகங்கள், சிறுவா் பாடல்களில் ஆரம்பித்து நிறைய புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும்; வீட்டிலும் பள்ளியிலும் குழந்தைகளை வாய்விட்டுப் பேச அனுமதிக்க வேண்டும். வீடுகளிலும், கல்வி நிலையங்களிலும், வாரத்தில் ஒரு நாளாவது பிற மொழிக் கலப்பின்றித் தமிழில் பேச முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது உண்டோ?

கட்டுரையாளா்:

சுற்றுச்சூழல் ஆா்வலா்.

Let's speak without mixing foreign languages!

வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

கருங்கல் பகுதிகளில் மழை

யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தென்காசியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு

SCROLL FOR NEXT