தரங்கம்பாடி புனித ஜெரூசலேம் தேவாலயம் 
கிறிஸ்துமஸ்

ஆசியாவின் முதல் புரட்டஸ்டண்ட் தேவாலயம்

நாகை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் 302 ஆண்டுகளைக் கடந்த  பழமையான  தேவாலயமாக விளங்குகிறது ஆசியாவின் முதல் புரட்டஸ்டண்ட் தேவாலயமான புனித ஜெரூசலேம் தேவாலயம்.

வி.ஜவகர்

நாகை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் 302 ஆண்டுகளைக் கடந்த  பழமையான  தேவாலயமாக விளங்குகிறது ஆசியாவின் முதல் புரட்டஸ்டண்ட் தேவாலயமான புனித ஜெரூசலேம் தேவாலயம்.

ஜெர்மனியைச் சேர்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்ஸ்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். அவர் டென்மார்க் அரசர் 4 ஆம் பிரெட்ரிக்கால் சமயப் பணி செய்ய இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.

11.11.1705 அன்று தன் நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டு, 222 நாள்கள் பயணத்திற்குப் பின் 9.7.1706 அன்று தரங்கம்பாடி வந்தடைந்தார் அவர்.

  சீகன்பால்குவால் 1718 இல் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட 
புனித ஜெரூசலேம் தேவாலயம்  

சீகன்பால்கு ஆசிய கண்டத்தில் முதல் சீர்திருத்த கிறிஸ்தவ (புரட்டஸ்டண்ட்) போதகராவார். ஜெர்மனியம், கிரேக்கம், எபிரேயம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றிருந்த அவர் மிகக் குறுகிய காலத்தில் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டு தமிழ் அறிஞராக மாறி தமிழில் அச்சு எழுத்துகளை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டுவரப் பெரும் முயற்சி மேற்கொண்டு தரங்கம்பாடியில் தமிழில் அச்சுக் கூடத்தையும் 24.10.1712 அன்று  நிறுவினார்.

1715 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முதலாக பொறையாறில் ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் மூலம் தமிழ் எழுத்துகளைத் தயாரிக்கும் கூடத்தையும் ஏற்படுத்தினார்.

 தரங்கம்பாடி கடற்கரையில்  நிறுவப்பட்டுள்ள சீகன்பால்க் சிலை 

சீகன்பால்கு கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை தமிழில் அச்சிட்டு  வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழரின் பழம்பெரும் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், ஆத்திச்சூடி, தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, இந்து சமயக் கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட  நூல்களை பல மொழிகளில் அச்சிட்டு உலகறியச் செய்தார்.

ஆசிய கண்டத்திலேயே முதன்முதலாகப் பெண்களுக்கான திண்ணைப் பள்ளியை உருவாக்கி (தற்போது மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது) தமிழ், ஜெர்மனி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கல்வி போதித்துள்ளார். கல்வி, கலாசாரம், சீர்திருத்தம், தமிழ்த் தொண்டு என பல புரட்சிகளை செய்துள்ளார். 1715 இல் மரியா டாரத்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

   மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்துள்ள பெண்களுக்கென சீகன்பால்கு 
தொடங்கிய திண்ணைப் பள்ளி  

தரங்கம்பாடியில் ஆசியாவின் முதல் புரட்டஸ்டண்ட் தேவாலயமான புதிய ஜெரூசலேம் ஆலயத்தை 11.10.1718-ல் கட்டி‌ சமயப் பணியாற்றினார். அதன்  பின்  உடல்நிலை  பாதிக்கப்பட்டு  23.2.1719  இல்  இறந்தார். அவரது உடல்  அவர்  கட்டிய  புதிய ஜெரூசலேம் ஆலயத்தில்  பலிபீடத்தின் முன் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது.

புதிய ஜெரூசலேம் தேவாலயம், அவர் வாழ்ந்த வீடு தற்போது நினைவுச்  சின்னமாக மாற்றி அவர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அச்சு எந்திரங்கள்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இந்தியா மற்றும்  பல்வேறு  நாடுகளில்  இருந்து  தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்துவர்கள் இங்கே வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

  தற்போது அருங்காட்சியகமாக உள்ள  சீகன்பால்கு வாழ்ந்த வீடு  

பழமையான புதிய ஜெரூசலேம் ஆலயம் திருச்சியில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் சுவிசேஷ லுத்தரன்  திருச்சபையின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT