கிறிஸ்துமஸ்

ஐரோப்பிய கட்டடக் கலைச் சான்றான பெரும்பண்ணையூர் புனித சூசையப்பர் ஆலயம்

சி.ராஜசேகரன்

அகில உலக திருச்சபை பாதுகாவலராக 1870 இல் அறிவிக்கப்பட்டார் புனித  சூசையப்பர். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகவும், மரியாளின் கணவருமான  சூசையப்பர், திருச்சபை பாதுகாவலராக, வாடிகன் நகரத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு நடைபெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, நிகழாண்டு அகில உலக சூசையப்பர் ஆண்டாக தற்போதைய போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அகில உலக திருச்சபை பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டு, தற்போதைய திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூரில் புனித சூசையப்பர் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு முன்னதாக குடவாசல் அருகே மூலங்குடியில்தான் கிறிஸ்துவர்களுக்கான பங்கு இயங்கி வந்தது. மக்கள் அனைவரும் அங்கு சென்று, பிரார்த்தனை செய்து வந்தனர்.

ஆலயத் தேர்

இதனிடையே, பெரும்பண்ணையூரில் வசித்து வந்த செல்வந்தர் சின்னு உடையார் என்பவர், பெரும்பண்ணையூர் பகுதியில் மிகப் பெரிய தேவாலயம் கட்ட எண்ணினார். அதற்கான பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஆலயத்துக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 1871 இல் தொடங்கி 1885 வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் தொய்வுற்ற நிலையில், பின்னர், சின்னு உடையாரின் உறவினர் பெரியசாமி என்பவர் மீண்டும் 1915 இல் ஆலயம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கினார். இந்தப் பணிகள் 1919 இல் முடிவடைந்து ஆலயம் திறக்கப்பட்டு வழிபாடுகள் தொடங்கின.

  புனித சூசையப்பர் (இடது), இயேசு (நடுவில்), மரியாள் (வலது)  

ஆலயத்தின் அஸ்திவாரம் மட்டுமே 20 அடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் மொத்த உயரம் 153 அடி. தமிழகத்தின் மிக உயர்ந்த ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றது இந்த சூசையப்பர் ஆலயம். தொடக்கத்தில் சின்னு உடையாரின் நிர்வாகத்தில் இருந்த வந்த ஆலயம், 2004-க்குப் பிறகு மறை மாவட்ட கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது தஞ்சை மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கல்வெட்டு

இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஐரோப்பிய கட்டுமானங்களை ஒத்துள்ளன. இந்த ஆலயத்தின் சிறப்பு 2 டன் எடையுள்ள மணியாகும். அப்போது பிரான்ஸிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த மணி, கப்பல் மூலமாக நாகப்பட்டினத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இதேபோல், கட்டுமானத்துக்கான கற்களும் கரூர் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. கரூரிலிருந்து ரயில் மூலமாக கொரடாச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மாட்டு வண்டிகள் மூலமாக பெரும்பண்ணையூருக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

மக்கள்தொகை குறைவாக இருந்த காலகட்டத்தில், எவ்வித நவீன வசதிகளும் சென்றடையாத இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் மிகப் பிரம்மாண்ட ஆலயம், மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. சிலுவை வடிவக் கோயிலான இதன் உள்ளே தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட தோற்றத்தில் குவிமாடம், உயர்ந்த மரவேலைப்பாடுகள், ஓவியங்கள் என கோயிலின் ஒவ்வோர் அமைப்பும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. சுண்ணாம்பு செங்கற்களால் உருவாக்கப்பட்ட கற்சுவர்களில் உள்ள வழவழப்புத் தன்மை இன்னமும் மாறாமல், நவீன கட்டுமானங்களுக்கு சவால் விடுவதாக உள்ளது.

ஞானஸ்தானம் பெறும் இடம்

இங்கு ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஏப். 23 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, மே 1 ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறும். இதுதவிர, ஞாயிறு காலை 8 மணி, புதன் மாலை 5.30 மணி, வார நாள்களில் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. பங்குத்தந்தையாக ஜே. ஆல்பர்ட் செல்வராஜ் உள்ளார்.

இத்தகைய பெருமை மிக்க ஆலயம் தற்போது படப்பிடிப்புத் தளமாகவும் மாறி வருகிறது. குற்றம் 23, அழகுராஜா,  சண்டமாருதம், தானா சேர்ந்த கூட்டம், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றுள்ளன.

ஆலயத்தின் உள்ளே தலைகீழான கவிழ்த்து வைக்கப்பட்ட தோற்றத்தில்
குவி வடிவம்

திருவாரூர் மாவட்டத்தின் அடையாளங்களை குறிப்பிடும்போது, இந்த புனித சூசையப்பர் ஆலயமும் முக்கியத் தலமாக கூறப்படுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, 2016 இல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சூசையப்பர் ஆலயத்தை சுற்றுலாத் தலமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்குக் கட்டியங்கூறுவதாக, ஐரோப்பியக் கலையின் பெருமைகளைப் பறைசாற்றியபடி, குக்கிராமம் ஒன்றில், வசதிகளற்ற இடத்தில், மிகப் பிரம்மாண்டமாக உயர்ந்து காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பெரும்பண்ணையூர் புனித சூசையப்பர் ஆலயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT