கிறிஸ்துமஸ்

வீரமாமுனிவர் பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம்

ஆர். சரவணமுத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்குத் தென்கிழக்கே 13.6 கி.மீ. தொலைவில் இருக்கும் சிற்றூர் காமநாயக்கன்பட்டி. இங்கு கத்தோலிக்க கிறிஸ்துவர்களும் இந்துக்களும் வாழ்கின்றனர். ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு காமநாயக்கன்பட்டி என்ற ஊர் இன்றுள்ள ஊரின் கல்லறைக்கு வடபக்கம் இருந்தது என்பதாகச் செவிவழிச் செய்தி. இதனை காமநாயக்கன்பட்டியில் கிடைத்த ஏட்டுச்சுவடியும் உறுதி செய்கிறது.

காம நாயக்கர், எட்டு நாயக்கர் என இரு சகோதரர்கள் கி.பி. 1600ஆம் ஆண்டு இப்பகுதியில் வாழ்ந்தனர். இந்த இரு சகோதரர்களும் வரி வசூல் செய்யும் பணிக்காக இப்பகுதியில் குடியேறியதால் காமநாயக்கன்பட்டி என்றும், அருகில் உள்ள ஊருக்கு எட்டுநாயக்கன்பட்டி என்றும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்தக் கிராமங்களில் வாழும் கத்தோலிக்கர்களின் வழிபாட்டுத் தலமாக காமநாயக்கன்பட்டி தேவாலயம் விளங்குகிறது. இன்று இப்பகுதியில் சுமார் 1,600  கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. புதுமைகளின் நிலையமாக இருப்பதால் கடந்த 2006  முதல் இவ்வூர் புதுமை நகர் என்று அழைக்கப்படுகிறது.

காமநாயக்கன்பட்டியில் கத்தோலிக்கத் திருத்தலமாக அமையப்பெற்றது புனித பரலோக மாதா ஆலயம். கி.பி. 1664 ஆம் ஆண்டு அருள்பணி ஆண்ட்ரூ பெரைரா என்பவர் காமநாயக்கன்பட்டிக்கு வந்தார். கி.பி. 1666 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ பெரைரா இங்கு அருட்சாதனங்களை நிறைவேற்றினார். கயத்தாறு கிறிஸ்துவ இறைமக்கள் பாவ சங்கீர்த்தனம் செய்வதற்காக காமநாயக்கன்பட்டிக்கு வந்தனர். இங்கு இறைமக்கள் கூட்டம் நடந்தது.

கி.பி. 1684 இல் புனித அருளானந்தரால் ஒரு குடிசைக் கோயில் கட்டப்பட்டது. கி.பி. 1686 ஆம் ஆண்டு மறைப்பணித் தலமாக உயர்த்தப்பட்டது. அருள்பணி சேவியர் போர்க்கீசு முதல் பங்கு பணியாளர்.

  காமநாயக்கன்பட் டி புனித பரலோக மாதா ஆலய முகப்பு  


தமிழ் உலகம் போற்றும் தேம்பாவணி காவியத்தைத் தந்த வீரமாமுனிவர் 7 ஆவது பங்குகுருவாக பணியாற்றியது புனிதத்தின் மகத்துவம். இத்திருத்தலத்தில் அவர் 4  ஆண்டுகள் தங்கி இறைப்பணி ஆற்றியுள்ள பெருமையும் உண்டு.

ஆலய அமைப்பும் சிறப்பும்

கி.பி. 1684 ஆம் ஆண்டில் புனித அருளானந்தர் (ஜான் தே.பிரிட்டோ) கூரை வேய்ந்து ஆலயத்தைக் கட்டினார். பீடம் உள்ள அகலக் கோயிலின் நீளம் 52 அடி. அகலம் 74 அடி 6 அங்குலம். பழைய கோயிலின் அளவு 76 அடி 9 அங்குலம், அகலம் 21 அடி 9 அங்குலம். சுவரின் கனம் 4 அடி 6 அங்குலம், கோயிலின் முன்மண்டப நீளம் 14 அடி 6 அங்குலம், அகலம் 30 அடி 6 அங்குலம், தற்போதைய ஆலய அமைப்பின் முதல் கட்டுமானப் பணி கி.பி. 1819 இல் தொடங்கி, கி.பி. 1823 இல் முடிந்திருக்கிறது. புதுப்பித்தல் பணி கி.பி. 1914  முதல் 1918 வரை நடந்திருக்கிறது.

போர்ச்சுக்கீசிய கட்டடக்கலை வடிவமைப்பிலேயே ஆலய முகப்பும் வடிவமைப்பும் கட்டப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். ஆலயத்தின் உள்ளே 12 திருத்தூதர்களை நினைவுகூறும் விதமாக 12 தூண்கள் மக்களின் காணிக்கை உதவியோடு தங்க முலாம் பூசப்பட்டு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டன. இவை 12 திருத்தூதர் தூண்கள் என்று மாதாவின் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

ஜெபமாலைத் தோட்டம்



திருத்தலம் உட்புறம்

காமநாயக்கன்பட்டி கோயிலினுள் கிழக்கு திசையை நோக்கியவாறு 3 பீடங்கள் உள்ளன. பெரும்பாலும் கத்தோலிக்க கோயில்கள் இம்முறையிலேயே வடிவமைக்கப்படும். நடுப்பீடத்திலேயே திருப்பலி நடைபெறும்.

திருத்தல ஆண்டு பெருவிழா

காமநாயக்கன்பட்டி திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.

ஆடி மாத விழா, பெரிய திருவிழா, மாதா திருவிழா, காமநாயக்கன்பட்டி திருவிழா, பரலோக தாய் திருவிழா, பரலோக மாதா திருவிழா என்று பல்வேறு முறைகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்னை மரியின் விண்ணேற்பு பெருவிழா அழைக்கப்படுகிறது.

கொடிமரம்

ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொடியேற்று விழா கோலாகலமாக நடைபெறும். சுமார் 60 அடி உயர கொடிமரம் மஞ்சணத்தி மர இலைகளால் சுற்றப்பட்டு, பனை நார்களால் கட்டப்பட்டு இறை மக்கள் கொண்டு வரும் காணிக்கைப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்படும். கொடிமரத்தின் உச்சியில் 6 அடி உயரமுள்ள திருச்சிலுவை மின்விளக்குகளால் ஒளிரச் செய்யப்படும். அதன்பின், கொடிமரம் நடப்பட்டு குலை வாழைகள், எலுமிச்சை மற்றும் பழ தோரணங்கள், இளநீர், நுங்கு போன்ற இயற்கை காய்கனிகளைக் கட்டுவார்கள்.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வரும் கொடிகள் ஜெபமாலைத் தோட்டத்தில் இருந்து பவனியாக கொண்டு வரப்பட்டு அர்ச்சிக்கப்பட்டுக் கொடி மரத்தில் கட்டப்படும்.


நவ நாள்கள்

திருவிழா நவ நாள்கள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் அதிகாலை 5.45  மணிக்கு ஜெபமும் தொடர்ந்து சிறப்புத் திருப்பலியும், இரவு 7 மணிக்கு ஜெபமாலை, கூட்டுத் திருப்பலி, புதுமை புனித பரலோக மாதா மன்றாட்டு மாலை, தொடர்ந்து நற்கருணை எழுந்தேற்றம் செய்து அன்னை மரியாளை பற்றிய சிறப்பு மறையுரையும், இறுதியில் நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

சப்பர பவனி

இங்குள்ள சிறப்பு நிகழ்வுகளுள் ஒன்று சப்பர பவனி. இதைத் தொடங்கி வைத்தவர் வீரமாமுனிவர். ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொடியேற்று விழா அன்று மாலையில் புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி நடைபெறும். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் 2, 3  சப்பரங்கள் பவனி வரும். 9 ஆம் திருவிழா அன்று இரவு 9  சப்பரங்கள் பவனி வருவது காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

தேரடித் திருப்பலி

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மேல் பாளை மறை மாவட்ட ஆயர் தலைமையில், அலங்கரிக்கப்பட்ட 2  ரதங்களில் தனித்தனியாக சூசையப்பரும், பரலோக மாதாவும் புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வரும். தேரடித் திருப்பலிக்குப் பின் பக்தர்களின் கும்பிடு சேவை நடைபெறும்.

திருத்தல புதுமைகள்

விமான விபத்தில் சிக்கியவன் உயிர் பிழைத்தது, குதிரைகளுக்கு மீண்டும் பார்வை கிடைத்தது, மாதா சொரூபம் திருட முயன்று பார்வை இழந்த திருடர்கள், இறந்த சிறுமி உயிர்பெற்று எழுதல், தீக்கிரையாக்கப்பட்ட ஆலயம் உடனே புதுப்பிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு புதுமைகள் இந்த ஆலயத்தின் சிறப்புகள்.

இந்த ஆலயத்தில் மொட்டை போடுதல், காது குத்துதல், மந்திரித்தல், விற்று வாங்குதல், மெழுகுவர்த்தி பற்ற வைத்தல், தீர்த்தம், புதுமை எண்ணெய், வெள்ளி, தங்கப் பொருள்கள் நேர்ச்சை, அசனம் கொடுத்தல் ஆகியவை இந்த ஆலயத்தில் இறைமக்களால் செய்யக்கூடியவை. தற்போது இந்த ஆலயத்தின் பங்குத்தந்தையாக அந்தோனி அ.குரூஸ், உதவி பங்குத்தந்தையாக சுதன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

வீரமாமுனிவருக்கு மணிமண்டபம்

அவர் பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவருக்கு முழுஉருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தமிழக முதல்வர் நவம்பர் மாதம் தூத்துக்குடிக்கு ஆய்வுப் பணிக்கு வந்தபோது, வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதையடுத்து, செய்தி - மக்கள்தொடர்புத் துறை மூலம் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதையடுத்து, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தைத் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் டிசம்பர் 17 ஆம் தேதி பார்வையிட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்தனர். விரைவில் வீரமாமுனிவருக்கு நினைவு மண்டபம் எழவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT