"திருமணம் எனும் நிக்காஹ்' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர், திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத் தலைவர் டேப்லெஸ் அலிகான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: "திருமணம் எனும் நிக்காஹ்' திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். அதிலும், ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவுபடுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக் கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விடுமுறைக்கால நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை (மே 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர், திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.