வசூலில், உலகளவில் 3-ம் இடம் பிடித்த ஜுராசிக் வேர்ல்ட்!
அவதார், டைட்டானிக் ஆகிய படங்களின் வசூலைத் தாண்டினால் நெ.1 இடத்தைப் பிடித்துவிடும்.
ஜுராசிக் வேர்ல்ட் படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் கிடைக்கவில்லை என்றாலும் வசூலில் வரலாறு படைத்துவிட்டது. உலகளவில் அதிகம் வசூலித்த படங்களில் இதற்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.
படம் வெளியான முதல் மூன்று நாள்களில் (வீக்எண்ட்) மட்டும் ரூ. 3363 கோடியை (524 மில்லியன் டாலர்) வசூலித்தது. இது ஹாரி பாட்டர் பாகம் 2 படத்தின் வசூலை விடவும் மிகவும் அதிகமானதாகும். ஹாரிபாட்டர் பாகம் 2, முதல் மூன்று நாள்களில் 494 மில்லியன் டாலர் வசூல் செய்தது அப்போது சாதனையாக இருந்தது.
ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் சாதனை வசூல் தொடர்ந்து சீராக இருந்தது. இதுவரை இந்தப் படம் $1.52 பில்லியன் வசூலித்துள்ளது. அதாவது, 9,716 கோடி ரூபாய்! ஃபியூரியஸ் 7 மற்றும் தி அவெஞ்சர்ஸ் படங்களைத் தாண்டி இப்போது உலகளவில் அதிகம் வசூலித்த 3-வது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இது, அவதார், டைட்டானிக் ஆகிய படங்களின் வசூலைத் தாண்டினால் நெ.1 இடத்தைப் பிடித்துவிடும்.
Advertisement
அவதார் படம் ரூ. 17,851 கோடியையும் ($2.79 பில்லியன்) டைட்டானிக் ரூ. 13,948 கோடியையும் ($2.18 பில்லியன்) வசூலித்து முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் வசூல், அமெரிக்கா மற்றும் சீனாவில் குறைய ஆரம்பித்துவிட்டதால் முதலிரண்டு இடங்களைத் தொடமுடியாது என்று கணிக்கப்படுகிறது.
இயக்குநர் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர். இவர் ஜுராசிக் பார்க் படத்தின் முதலிரண்டு பாகங்களை இயக்கினார். கொலின் ட்ரெவொரோ இயக்கிய நான்காம் பாகமான ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் தயாரிப்புச் செலவு - ரூ. 960 கோடி.
ஜூராசிக் வேர்ல்ட் வரிசையின் அடுத்தப் படம் 2018, ஜூன் 22 அன்று வெளியாகும் என யுனிவர்சல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.