சினிமா

தலைப்பில் மட்டும் இருக்கிறதா பில்டப்? திரை விமர்சனம்

நடிகர்கள் சந்தானம், ராதிகா ப்ரீத்தி ஆகியோர் நடிப்பில் முழுநீள காமெடி திரைப்படமாக வெளிவந்திருக்கிறது 80’ பில்டப். 

கி.ராம்குமார்

நடிகர்கள் சந்தானம், ராதிகா ப்ரீத்தி ஆகியோர் நடிப்பில் முழுநீள காமெடி திரைப்படமாக வெளிவந்திருக்கிறது 80’ பில்டப். 

இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் 80களில் நடக்கும் காமெடி கலந்த கதையாக உருவாகியிருக்கிறது. சந்தானத்தின் தொடர் காமெடி படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது 80' பில்டப். 

சிறுவயது முதலே ஒருவருக்கொருவர் மோதலில் இருக்கின்றனர் சந்தானமும் அவரது தங்கையும். இந்த சண்டை அவர்கள் பெரியவர்களாக மாறிய பின்னும் தொடர்கிறது. இதற்கு மத்தியில் சந்தானத்தின் தாத்தா மரணித்துவிட துக்க வீட்டில் நுழைகிறார் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி. வழக்கம்போல அவர் மீது சந்தானத்திற்கு காதல் வர அதை சீர்குலைக்கப் பார்க்கிறார் சந்தானத்தின் தங்கை. சந்தானத்தை கதாநாயகியுடன் சேர விட மாட்டேன் என சவால் விடுகிறார் அவரது தங்கை. இந்த சவாலில் வென்றது யார்? சந்தானத்தின் காதல் கைகூடியதா? இல்லையா? என்பதே 80’ பில்டப் திரைப்படத்தின் கதை. 

வழக்கமான காமெடி கதையில் பயணித்தே கரைசேர்ந்துவிடலாம் என நினைத்த சந்தானத்திற்கு இந்தத் திரைப்படம் எந்தவகையிலும் கைகொடுக்கவில்லை. முதல் 15 நிமிடங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்க அதுவே அடுத்த 2 மணி நேரங்களுக்கும் தொடரும் என்பதை ரசிகர்கள் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. 80 காலங்களில் வாழ்ந்த நடை, பாவனைகளில் வித்தியாசம் காட்ட முயற்சித்ததிலும், கமல் ரசிகனாக வலம் வருவதிலும் சந்தானம் ஓரளவு தேறியிருக்கிறார். ஆனால் அவரது நடிப்பு முந்தையை படங்களிலிருந்து எந்தவகையிலும் வேறுபடாதது பெரிய வித்தியாசத்தைத் திரையில் கடத்தத் தவறியிருக்கிறது.

அவரது வழக்கமான கவுண்டர்காமெடிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் சுவாரஸ்யத்தையும் கூட்டவில்லை, ரசிக்கும்படியும் இல்லை. நடிகை ராதிகா ப்ரீத்தி அழகாக இருக்கிறார். ஒட்டுமொத்த படத்திலும் அவரது நடிப்பு பெரிதாக எடுபடவில்லை என்றாலும் மற்ற குறைகளின் மத்தியில் அது பெரிய விஷயமாகப் புலப்படவில்லை. இவர்களைத் தவிர நடிகர்கள் மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார், முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் மறைந்த நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா என பலர் நடித்துள்ளனர். இவ்வளவு கதாபாத்திரங்கள் இந்தப் படத்திற்குத் தேவையா? 

அண்ணன் தங்கை மோதல் என்பதை அழகாக சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டிய இயக்குநர் 5 இரட்டை அர்த்த வசனங்கள், 7 ரைமிங் காமெடிகளை மட்டும் வைத்து எப்படி எடுத்தார் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. சுவாரஸ்யமே இருக்கக்கூடாது என கராராக எழுதப்பட்டுள்ள இந்தப் படத்தில் காமெடிகளும் நம்மை சிரிக்க வைக்க சிரமப்படுகின்றன. காமெடியே வராத ரைமிங் இது என நடிகர் சந்தானம் சொல்லும்போது அது கண்ணாடி சார் எனும் போக்கிரி வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வருகிறது. சில இடங்களில் காமெடிகள் ஓரளவு கைகொடுத்தாலும் லாஜிக் ஓட்டைகள் அவற்றையும் கெடுத்து விடுகின்றன. 

ரசிகர்களுக்கு நல்ல படத்தைக் கொடுக்க இயக்குநரும், நடிகரும் இன்னும் நிறையவே மெனக்கெட வேண்டும். கொடுத்த பில்டப்புகளை வைத்துப் பார்த்தால் அட்டகத்தியாகக் கூட இல்லை 80’ பில்டப். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT