சினிமா

அகதி மக்களின் வலிகளை பேசும் யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரைவிமர்சனம்

கி.ராம்குமார்

இலங்கையில் நடந்த ஈழப்போராட்டத்தால் அகதிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார பாதிப்பு, அடிமைத்தனமாக நடத்தப்படும் நிலை குறித்து பேசும் வகையில் உருவாகியிருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். அகதி மக்களாக்கப்பட்டவர்களின் வலிகளின் திரையில் கொண்டுவந்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோதே நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. கணியன் பூங்குன்றனாரின் வரிகள் தமிழ் நிலப்பரப்பின் முக்கியமான சகோதரத்துவ வாசகமானாலும் அதே மக்களின் இன்றைய காலம் எப்படி மருவியிருக்கிறது என்பதே படத்தின் கரு.

போர்ச்சூழலின் மத்தியில் திரைப்படம் தொடங்கும்போதே திரைப்படம் எதை மையமாக வைத்து இருக்கப் போகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இலங்கையில் நடைபெற்ற ஈழப் போராட்டத்தில் யாருமற்ற சிறுவனான புனிதனை ( விஜய் சேதுபதி) கண்டெடுக்கிறார் பாதிரியாராக வரும் ராஜேஷ்.  போர் சப்தங்களால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்குள் இசைத் திறமை இருப்பதை அறிந்த ராஜேஷ் அவரை எப்படியாவது ஆஸ்திரேலியா அனுப்பி உலகம் அறியும் இசை மேதையாக்க விரும்புகிறார். சிறுவன் புனிதன் ஆஸ்திரேலியா சென்றாரா? இசை மேதையாக அவரை இந்த சமூகம் கண்டெடுத்ததா? என்பதே திரைப்படத்தின் கதை.

முன்பே சொன்னதுபோல ஈழப் போரினால் ஏற்பட்ட தமிழ் மக்களின் சிதறலை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். காவல்துறையிடம் சிக்கிக் கொண்டு பின் அதிலிருந்து மீண்டு வாழ்ந்து வரும் விஜய் சேதுபதிக்கு ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அதற்கு தனது தேச அடையாளத்தை சமர்ப்பிக்க முடியாமல் தவிக்கிறார்.  எப்படியாவது தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள கிருபாநதி எனும் மற்றொரு இலங்கை அகதியின் அடையாளத்தைப் பெற முயற்சிக்கிறார் விஜய்சேதுபதி. இதற்கு மத்தியில் சிறு வயதில் தனது தந்தையைக் கொன்ற கிருபாநதியை எப்படியாவது கொன்றாக வேண்டும் எனும் வெறியில் இருக்கும் மகிழ் திருமேனி விஜய் சேதுபதியை கொல்ல முயற்சிக்கிறார். இந்த சிக்கல்களையெல்லாம் எப்படிக் கடந்தார் விஜய்சேதுபதி? ஒரு அகதியாக விஜய் சேதுபதி தனது நடிப்பை நன்றாகக் கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக அகதி மக்களின் வலிகளை வசனங்களில் கடத்துவதில் நல்ல உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார். காவல்துறையால் மிரட்டப்படும் இடங்களிலும் ஒடுங்கிப் போகும் காட்சிகளிலும் நிலமற்ற மக்களின் நிலையை கண் முன் கொண்டு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. நடிகை மேகா ஆகாஷுக்கு நடிப்பதற்கான பெரிய இடம்  இல்லை. படம் முழுக்க வந்தாலும் வழக்கமான தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர்களைக் கடந்து மறைந்த நடிகர் விவேக், நடிகர்கள் மகிழ் திருமேனி, கனிகா, சின்னி ஜெயந்த், கரு பழனியப்பன், ராஜேஷ், பவா செல்லதுரை, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக நடிகராக அவதாரமெடுத்திருக்கிறார். தனது மகள் மேகா ஆகாஷுடனான தந்தை மகள் பாசத்திற்கான காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சீரியஸான திரைப்படம் என்பதால் காமெடி காட்சிகளை இட்டு நிரப்பாமல் செயல்பட்டுள்ளார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த். கிளைமேக்ஸ் காட்சிகள் யூகிக்கக் கூடியதுதான் என்றாலும் வலிமையான வசனம் காட்சியை தூக்கி நிறுத்துகிறது.

குறிப்பாக அகதிகள் குறித்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டு அகதி மக்களின் வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையுடன் படம் நிறைவடைவது இயக்குநரின் நோக்கத்தை காட்டுகிறது. சிறு காட்சிகளில் வந்தாலும் நடிகர் கரு பழனியப்பன், மோகன் ராஜா ஆகியோரை திரையில் பார்ப்பதே சற்று வித்தியாசமான முயற்சியாகத் தோன்றியது.  இலங்கை மக்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் காத்துக் கொள்ளும் இடங்களும், யாராவது ஒருவராவது முன்னேறிவிட வேண்டும் எனும் ஏக்கமும் அம்மக்களின் நிலையை கண்முன் காட்டுகின்றன. "எல்லைக்கோடுகள் நிர்வாக வசதிக்கு மட்டுமே” மாதிரியான வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

திரைப்படம் பேச விரும்பிய கதைக்களம் அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை கூடுமானவரை நிறைவாக கொடுத்திருக்க முடியும். ஆனால் இயக்குநர் அதை தவறவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கதாபாத்திரங்கள் குறித்து போதிய எழுத்து ஆக்கம் இல்லாத நிலை படம் முழுக்க இருப்பதாகவே தோன்றியது. புதையுண்ட தேவாலயம் மீண்டும் வெளிவந்தது என விரியும் காட்சிகளில் எதற்காக அத்தனை கவனத்தை ஏற்படுத்த முயற்சித்தார் என புரியவில்லை.

விஜய்சேதுபதி தனக்கு கிடைத்த காட்சிகளில் கூடுமானவரை நடிக்க முயற்சித்தாலும் தேர்ந்த, சரியான காட்சி உருவாக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க இயக்குநர் இன்னும் கூடுதல் சிரத்தை எடுத்திருக்க வேண்டும். பல இடங்களில் லாஜிக் அற்ற காட்சிகளால் தடுமாறியிருக்கிறது திரைப்படம். போகிற இடங்களில் எல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. இயல்பில் அம்மக்களின் நிலை அவ்வளவு சுதந்திரமாகவா இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. பழிவாங்கும் நோக்கத்திற்காக துரத்தும் மகிழ் திருமேனியின் காட்சி அமைப்புகள் நம்பும்படியாகவும், அழுத்தமானதாகவும் இல்லை. படம் முழுக்க விரவிக் கிடக்கும் பின்னணி இசையால் சோக கீதத்தை எப்படியாவது ஏற்படுத்தியாக வேண்டும் என எண்ணியதாகவே தோன்றியது. 

நல்ல நோக்கத்தை திரைப்படமாக்கத் தேர்ந்தெடுக்கும் போது அதை நல்ல திரைக்கதையுடன் மக்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் படைக்க படைப்பாளிகள் கவனம் செலுத்த வேண்டும். அவையே தொடர்ந்து வரும் மக்களின் பிரச்னைகளைப் பேசும் திரைப்படங்களின் மீது ரசிகர்களின் விருப்பங்கள் திரும்ப வழி அமைக்கும். அகதி மக்களின் உண்மையான பிரச்னைகளை இன்னும் பரவலாகப் பேச வாய்ப்பிருந்தும் அவற்றை நிறைவேற்றத் தவறியிருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்லாசிரியருக்கு விருது பெற்றவருக்கு பாராட்டு

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

ஈச்சங்காடு பகுதிகளில் செப்.13-இல் மின்தடை

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

SCROLL FOR NEXT