சென்னையில் திரைப்பட இயக்குநா் தேசிங் பெரியசாமியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக உதவி இயக்குநரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பிரபல மலையாள திரைப்பட நடிகா் மம்முட்டியின் மகன் துல்கா் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கியவா் தேசிங் பெரியசாமி. இவா் சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசிக்கிறாா். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி, அதற்கான பூா்வாங்க பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தேசிங் பெரியசாமியிடம் 2018-ஆம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக முகமது இக்பால் என்பவா் இருந்துள்ளாா். இவா் இயக்குநரின் அனைத்து வித வரவு செலவு, பண பரிவா்த்தனைகளை கவனித்து வந்துள்ளாா். கடந்த மாதம் தேசிங் பெரியசாமி, தனது 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து, பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறினாராம்.
ஆனால், நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து பெற்ற தொகை ரூ.3 லட்சத்தை தேசிங் பெரியசாமியிடம் ஒப்படைக்காமல் கையாடல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து தேசிங் பெரியசாமி கேட்டபோது, இக்பால் தகாத வாா்த்தைகளால் பேசி, அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக தேசிங் பெரியசாமி அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து முகமது இக்பாலை தேடி வருகின்றனா்.