யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கௌரி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் போட். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட அற்புதமான நகைச்சுவை புனைவுகளை படைத்த இயக்குநர் சிம்புதேவனின் போட் திரைப்படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. எதிர்பார்ப்புகள் என்ன ஆனது?
டிரெய்லரில் காட்டியதுபடியே, 1943ல் இரண்டாம் உலகப்போர் சண்டைகளுக்கு நடுவில் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷுக்கு ஜப்பான் குண்டுகளால் தலைவலி ஏற்படுகிறது. திடீரென மெட்ராஸில் குண்டுபோடுவதற்காக ஜப்பான் விமானங்கள் வந்துகொண்டிருப்பதாகப் பரவும் செய்தியால், அதிலிருந்து தப்பிக்க மீனவர்களான யோகி பாபுவும், அவரது பாட்டியும் தங்கள் படகில் கடலுக்குள் செல்கிறார்கள். அங்கிருந்த சில கதாப்பாத்திரங்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த படகில் ஏறுகின்றனர்.
அவர்களுடன் ஒரு பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியும் நடுகடலில் சேர்ந்துகொள்கிறார். அந்த நேரத்தில் படகில் ஓட்டை விழுகிறது, கடலுக்குள் படகை விடப் பெரிய சுறா ஒன்று இவர்களை நோட்டமிடுகிறது. இதனால் அவர்களுக்கு பிரச்னை வெடிக்கிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் வந்தவர்கள் உயிரோடு கரை திரும்பினார்களா? என்பதே போட்டின் கதைக்களம்.
பெரிய ரவுடிகள், ரத்தம் தெரிக்கும் வெட்டு குத்துகள், பத்துபேர் பறக்கும் சண்டைக் காட்சிகள் எனக் கதையை தேர்வு செய்யாமல், புதிய கதைக்களத்தை உருவாக்கியதற்கே முதலில் இயக்குநருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கலாம்.
இரண்டு பிராமணர்கள், ஒரு வடமாநில வியாபாரி, சுதந்திர போராட்ட இயக்கம் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு இஸ்லாமிய மலையாளி, ஒரு சமூக ஆர்வலர், ஒரு கர்ப்பிணிப் பெண், அவரது பையன் என அந்தப் படகு, சமுதாயத்தை பிரதிபலிப்பதாக அமைந்து முதலில் கவனம் ஈர்க்கிறது. எனினும் கதை நகர நகர படகில் மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் சில பிரச்னைகள் இருப்பதை கவனிக்க முடிகிறது.
கடற்கரை, ஜப்பான் விமானம், குண்டு என சற்று சுவாரசியமாக நகர்ந்த 20 நிமிடங்களுக்குப் பின்னர், கதை சற்று தள்ளாடுகிறது. இருக்கும் 8 கதாப்பாத்திரங்களும் அழுத்தமாக காட்டப்படாதது கதையோடு பார்வையாளர்கள் ஒன்றுவத்தைத் தடுத்துவிடுகிறது. சர்வைவல் திரில்லாராக அல்லது காமெடியாக நகர்ந்திருக்க வேண்டிய கதை இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து இரண்டிலுமே திணருகிறது. ஆங்காங்கே வரும் சமூக அக்கரையான வசனங்கள் சரியாக காட்சியாக்கப்படாததால் சில இடங்கள் திணிக்கப்பட்டதுபோல் தெரிகின்றன.
சுதந்திரப் போராட்ட காலம் என்பதால் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷியங்கள் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் பேசும் விஷயங்கள் ஆரம்பத்தில் நகைப்பூட்டினாலும் அடிக்கடி வருவதால் கவனம் பெற மறுக்கின்றன. படகில் இருக்கும் தீவிரவாதியைக் கண்டுபிடிக்கும் நடைமுறைகளில் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
ஒளிப்பதிவு பல இடங்களில் சோதிக்கிறது. கடலின் அழகை, சுறாவை, வானிலையை, கதாப்பாத்திரங்களை காட்டிய விதம் திருப்திப்படுத்தவில்லை. கொஞ்சம் எடிட்டிங் தெரிந்தவர்கள்கூட கவனித்துவிடும் குறைகள் எடிட்டிங்கில் வெளிப்படை. ஷாட் பற்றாக்குறையால் தேவையில்லாத இடங்களில் ஸ்லோமோசன்கள் வைத்து சமாளித்திருப்பது தொந்தரவுதான் செய்கிறது. கிப்ரானின் பிண்ணனி இசையும், பாடல்களும் கதைக்கு பொருந்தி ஆறுதல் அளிக்கின்றன. சில கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கவனம் குறைவாக அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சமீபத்தில் சூப்பரான கதையம்சம் உள்ள கதைகள் திரைக்கதையில் கவனம் செலுத்தாதால் சுமாரான படமாக மாறுவதைப் பார்க்க முடிகிறது. அதில் ஒன்றாக சிம்புதேவனின் போட் மாறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
மொத்தத்தில் இத்தனைக் கதாப்பத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கைகள், பிரச்னைகளைச் சொல்லி படகில் அவர்களுக்குள் ஏற்படும் தகராறுகளால் நம்மைக் கலங்கடித்திருக்க வேண்டிய போட், திரைக்கதையில் வலு இல்லாததால், கரை சேரும்முன் மூழ்கிவிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.