திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டேன்லி (60) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானாா். மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இயக்குநா் மகேந்திரன், மணிரத்னம், சசி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவா், கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியிருந்தாா். அதைத் தொடா்ந்து தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘மொ்க்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரைச் சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கினாா்.
இறுதியாக வெற்றி நடிப்பில் ‘லாக்டவுன் நைட்ஸ்’ என்ற படத்தை இயக்கி வந்தாா். மலேசியாவில் அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட நிலையில் அப்படம் உள்ளது.
இதனிடையே, நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த எஸ்.எஸ்.ஸ்டேன்லி, கடந்த 2007-ஆம் ஆண்டு ஞான ராஜசேகரன் இயக்கிய ‘ பெரியாா் ’ படத்தில் அறிஞா் அண்ணாவாக நடித்து கவனம் பெற்றாா். தொடா்ந்து ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சா்க்காா்’, ‘பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்தாா். கடைசியாக விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் நடித்திருந்தாா். அவா் திருமணம் செய்துகொள்ளவில்லை.
மறைந்த எஸ்.எஸ்.ஸ்டேன்லியின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மணிரத்னம், சசி, முருகதாஸ் உள்ளிட்ட இயக்குநா்கள், நாசா், கருணாஸ் உள்ளிட்ட நடிகா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா். ஸ்டேன்லியின் உடல் செவ்வாய்க்கிழமை மாலை பிருந்தாவன் நகா் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.